ஜனாதிபதியின் 180 மில்லியன் ரூபா வாசஸ்தல புனரமைப்பு, வாகன கொள்வனவு தொடர்பில் விளக்கம் !

Maithri-new

 ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் புனரமைப்புப் பணிகள் மற்றும் வாகனங்கள் தொடர்பாக வெளியான செய்திகள் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.

 

வெகுஜன ஊடகம் மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் நேற்று பாராளுமன்றத்தில் முன்வைத்த குறைநிரப்பு பிரேரணையில் ஜனாதிபதி செயலகத்திற்கான செலவீனங்கள் போன்றே பிரதமரின் செயலகம், வெளிவிவகார, பெருந்தோட்டக் கைத்தொழில், உள்நாட்டலுவல்கள், கடற்றொழில், பெருந்தெருக்கள், முதலீட்டு ஊக்குவிப்பு ஆகிய அமைச்சுக்கள் உள்ளிட்ட மேலும் பல நிறுவனங்களுக்கான செலவீனங்களும் குறிப்பிடப்பட்டிருந்ததாக அவர் அறிவித்துள்ளார்.

 

அத்தோடு, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் புனரமைப்பு மற்றும் வேறு சில நடவடிக்கைகளுக்காக கோரப்பட்டுள்ள 180 மில்லியன் ரூபா தொடர்பில் இன்று தேசிய பத்திரிகைகள் சிலவற்றில் வெளியாகியுள்ள செய்திகள் குறித்து ஜனாதிபதி செயலகம் கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மிகவும் பழமையான இரண்டு வீடுகளை இணைத்து ஜனாதிபதியின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் அந்த வீட்டை புனரமைக்க நேரிட்டதாக ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

அத்தோடு, வீட்டின் பாதுகாப்பு, ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கான அதிகாரிகளுக்குரிய விடுதி வசதிகள் மற்றும் வாகன திருத்துமிடத்தையும் புனரமைக்க நேரிட்டதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அரச நிறுவனமான மத்திய பொறியியல் ஆலோசனை பணியகம் இந்த புனரமைப்புப் பணிகளை முற்றுமுழுதாக மேற்கொண்டதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள கோட்டை ஜனாதிபதி மாளிகையைப் பயன்படுத்துவதாக இருந்தால் நீர், மின்சாரம், பராமரிப்பு ஆகிய விடயங்களுக்காக மாதாந்தம் 150 இலட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட செலவை அரசாங்கம் ஈடுசெய்ய நேரிடும் என தெரிவித்துள்ள ஜனாதிபதியின் செயலாளர், அந்த அதிக செலவீனம் காரணமாக அங்கு தங்குவதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

இதனைத் தவிர பத்திரிகை செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ள பி.எம்.டபிள்யூ. கார் மற்றும் பாதுகாப்பு பிரிவினருக்கான பி.எம்.டபிள்யூ மோட்டார் சைக்கிள்களைக் கொள்வனவு செய்வதற்கான கட்டளையை கடந்த 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் அப்போதைய அரசாங்கமே அனுப்பிவைத்திருந்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கமைய முறையாக 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி காரும், 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதி மோட்டார் சைக்கிள்களும் கொழும்பு துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

 

மூன்று மாதங்களாக துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த வாகனங்களை மீண்டும் திருப்பி அனுப்ப முடியாததாலும், துறைமுகத்தில் நிறுத்தி வைப்பதற்கான கட்டணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாலும் அவற்றை அரசாங்கம் பொறுப்பேற்க தீர்மானித்ததாகவும் ஜனாதிபதியின் செயலாளர் மேலும் கூறியுள்ளார்.