இலங்கையின் மத, கலாசார பாரம்பரியங்களை பாதுகாக்கும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு அங்கமாக, புராதன பௌத்த ரஜகல மடாலயத்தை மீளமைத்தல் மற்றும் அனுராதபுர தொல்பொருள் அருங்காட்சியகத்தை பாதுகாத்தல் என்பவற்றுக்காக அமெரிக்கா 300,000 அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கவுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, இலங்கையின் மத மற்றும் கலாசார பாரம்பரிய பகுதிகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அமெரிக்கா அறிந்து வைத்துள்ளது. 2005 ஆம் ஆண்டு முதல் இதற்காக 100 மில்லியன் இலங்கை ரூபாய்களை வழங்கியுள்ளது.
இலங்கையின் கலாசார பராம்பரிய தலங்களை பாதுகாப்பதற்கான எமது ஒத்துழைப்பானது, சர்வதேச விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுலாத்துறைக்கான ஊக்கத்தை வழங்கவும், மக்களுக்கிடையிலான புரிந்துணர்வை உருவாக்கவும் உதவும் என நம்புகின்றோம்.
ரஜகல மடாலயத்தின் மீளமைத்தல் பணிகளுக்காக கலாசார பாதுகாத்தலுக்கான தூதுவரின் ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாக அமெரிக்கத் தூதரகத்திடம் இருந்து ெஜயவர்தனபுர பல்கலைக்கழகம் 150,000 அமெரிக்க டொலர்களைப் பெறும். மடாலயத்தின் முழுமையான நில ஆய்வு மற்றும் பழங்கால பௌத்த துறவிகளால் பயன்படுத்தப்பட்ட மிகவும் முக்கியமான நினைவுச் சின்னங்களை பாதுகாத்தல் என்பவற்றிற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும்.
2013ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நன்கொடையைத் தவிர, இந்த செயற்றிட்டத்திற்காக அமெரிக்காவால் வழங்கப்படும் இரண்டாம் கட்ட நிதியாக இது உள்ளது. இலங்கையின் பௌத்த துறவிகளின் வாழ்க்கை முறை குறித்து மேலும் கற்றுக் கொள்வதற்கு அமெரிக்காவுடனான எமது பங்காளித்துவம் மிகவும் முக்கியமானது என ெஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், வரலாற்று மற்றும் தொல்பொருளியல் பிரிவின் தலைவர், பேராசிரியர் பி.பீ. மன்டாவல தெரிவித்துள்ளார்.
இந்த புதிய நன்கொடையின் கீழ், இலங்கையின் தொல்பொருள் திணைக்களத்திற்கு வழங்கப்படும் 150,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நன்கொடையானது, அனுராதபுரம் தொல்பொருளியல் அருங்காட்சியகத்தில் தொல்பொருட்களை சிறப்பாக களஞ்சியப்படுத்தவும், பாதுகாப்பதற்கும் உதவும்.
2005ஆம் ஆண்டு முதல், கலாசார பாதுகாப்புக்கான தூதுவரின் ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாக இலங்கையில் இதுவரை மொத்தமாக 730,000 டொலர்களை, அமெரிக்கத் தூதரகம் நன்கொடையாக வழங்கியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.