முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பட்டியல் நியமனங்களும் – சிதைந்து போகும் உறவுகளும் !

-எம்.எஸ்.டீன்-
கடந்த மூன்று தசாப்த கால வரலாற்றில் என்றுமில்லாதவாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பட்டியல் நியமனம் தொடர்பான பனிப்போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டதன் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு பிரதிநிதித்துவங்கள் வழங்கப்பட்டிருந்தன.

 

கடந்த பொதுத் தேர்தல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்குப் பலத்த சவாலை ஏற்படுத்தியது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாரை மாவட்டப் பிரவேசம் ஒரு புறமிருக்க ஐ.தே.கட்சியின் ஒரிஜினல் அபேட்சகர்களின் தேர்தல் களப் பிரவேசமும் மு.காவின் வாக்கு வங்கியை சிதைத்து விடும் என்ற அச்ச நிலை தோன்றியிருந்தது.இந்த தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தை முஸ்லிம்கள் புறக்கணித்ததனால் மு.காவின் வாக்கு வங்கியில் பெரும் சரிவு தடுக்கப்பட்ட போதிலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் முதற் தடவையாகப் பெற்ற 33000க்கும் மேற்பட்ட வாக்குகள் கட்சியின் கள நிலவரத்தில் கிழிசலை ஏற்படுத்தி இருக்கின்றது.

 

தனது முதன் முயற்சியிலேயே மு.கா பெற்ற மொத்த வாக்கில் சுமார் 50மூ மான வாக்கை அ.இலங்கை மக்கள் காங்கிரஸ் தனதாக்கிக் கொண்டமை எதிர்கால அரசியலில் மு.காவுக்கு பாரிய சவாலாக அமையப் போகின்றது என்பதில் ஐயமில்லை.
கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் கிராமங்களில் மு.கா தலைவர் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டிருந்த போது சில ஊர்களுக்கு அரசியல் அதிகாரங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.குறிப்பாக அட்டாளைச்சேனைக்கு தேசியப் பட்டியல் மூலம் எம்.பி வழங்கப்படும் என்று பகிரங்கமான முறையில் வாக்குறுதியும் வழங்கினார்.

SLMC
நடந்து முடிந்த தேர்தலில் கட்சியின் வாக்குகள் மாற்றுக் கட்சிகளுக்கு அல்லது வேறு நபர்களுக்குப் போகக் கூடாது என்ற ஆவலினாலேயே வாக்குறுதிகளை அள்ளி வீச வேண்டிய நிலைமை தலைவருக்கு ஏற்பட்டது.
கடந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்டத்தில் திட்டமிட்ட படி மூன்று ஆசனங்களை வென்ற போதிலும் ஏற்கனவே திருகோணமலை ,வன்னி மாவட்டங்களில் தக்க வைத்திருந்த இரண்டு பாராளுமன்றப் பிரதி நிதித்துவமும் இல்லாமற் போனது கட்சிக்கு ஏற்பட்ட பாரிய நஷ்டமாகும். மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வரை மு.கா தனித்துக் களம் இறங்கியதனால் அரிதான வெற்றியைப் பெற்றுக் கொண்டது.
இந்த வெற்றி முஸ்லிம் காங்கிரஸூக்குக் கிடைத்த வெற்றி என்று மார்தட்டி விட முடியாது.கட்சி தவிசாளரினதும் கிழக்கு மாகாண முதலமைச்சருடையதும் பிரதித் தலைவர் ஆகிய பொறுப்புக்களை வகித்துக் கொண்டிருப்பவர்களின் தொகுதியில் இந்த நிலைமை ஏற்பட்டமை மட்டக்களப்பு மாவட்டமும் விரல் நுனியில் தொங்கிக் கொண்டிருக்கும் வீழ்ச்சிப் போக்கைக் கோடிட்டுக் காட்டியுள்ளது.(மட்டுமன்றி கட்சியில் புதிதாக இணைந்தவரகளால் பெறப்பட்ட தனிப்பட்ட வெற்றியும் கூட.)
ஆகவே மு.காங்கிரஸ் என்ற கட்சியின் இன்றைய நிலை கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக உள்ளது.அதே வேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மட்டு திருமலை,வன்னி, அநுராதபுரம்,புத்தளம் ஆகிய ஐந்து மாவட்டங்களைத் தன்னகத்தே கொண்டிருப்பதுடன் திகாமடுல்லையில் அகலக் கால் ஊன்றிய நிலையில் சொற்ப வாக்குகளால் ஓர் ஆசனத்தையும் இழந்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாவட்டம் தோறும் வியூகம் வகுத்து களமிறக்கினாலும் தொடர்ச்சியாக ஒரு குறிப்பிட்ட ஊர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கி அங்குள்ள ஒருவரை தொடர்ந்தும் எம்.பியாக்குவது இக்கட்சி கடைப்பிடித்து வரும் தவறான கொள்கைப் போக்காகும்.ஒவ்வொரு தடவையும் சில ஊர் பிரமுகர்கள் மட்டும் தேர்தல் களத்தில் களம் இறக்கப்பட ஏனைய கிராமத்து மக்கள் எல்லாம் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
மேற் சொன்ன நிலைமையை மாற்றி: மாறி,மாறி ஏனைய ஊர் பிரமுகர்களுக்கும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கி ஏற்கனவே எம்.பி பதவியைப் பெற்றிருந்த ஊர் மக்களை புதிய அபேட்சகர்களுக்கு வாக்களிக்க வைக்க முடியாது இருப்பதுதான் இந்தக் கட்சியின் மாபெரும் தவறாகம்.

 

பொதுத் தேர்தல் வந்தால் வெற்றியைக் கருத்திற் கொண்டு மூவரைப் பெயர் குறித்து நிறுத்துவது,குறித்த நபர் தனது சொந்த ஊரிலேயே கணிசமான வாக்குகளைப் பெற முடியாதவராக இருந்தாலும் சரிதான்.இது 1981ஆம் ஆண்டு கால கட்டத்தில் அமுலில் இருந்த மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தல் அபேட்சகர்களுக்கும் அது பொருத்தப்பாடாக இருந்து மக்கி மறைந்து போன பின்னரும் முஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறான கொள்கையைத் தான் கடைப் பிடிக்கின்றது.
முஸ்லிம் சமூகத்தின் தனித்துவத்துக்காக உருவாக்கப்பட்ட கட்சி இப்போது பாராளுமன்ற, மாகாண ஆசனங்களை மட்டுமே குறியாக வைத்து பெரும்பானமைக் கடசிகளுடன் ஒப்பந்தங்களையன்றி வெறும் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்கின்றன.
மஹிந்தவுடன் கூட்டு வைக்கப்பட்டது அங்கே எவ்வித ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டதாக இல்லை. அல்லது செய்த ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

 

தற்போது ஐ.தே.கவுடன் ஏதாவது ஒப்பந்தம் செய்யப்பட்டதா?சமூகம் சார் விடயங்கள் ஆலோசிக்கப்பட்டதா இருகட்சிக் குழுக்களும் ஒப்பந்தங்களைக் கை மாறிக் கொண்டனவா என்ற எந்த விடயங்களும் பின்பற்றப்படவில்லை.
முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பாக ஆவணங்கள் எழுத்துருவில் உள்ளனவா?தேர்தல் காலங்களில் கட்சிப் பாடல்கள் மறைந்த தலைவரின் உரைகள் என்பவற்றை ஒலிபரப்பியே அப்பாவி முஸ்லிம்கள் தலைவர் சொல்லும் சின்னத்துக்கு நேரே புள்ளடி இடுகின்றனர்.
கட்சித் தலைவர் றஊப் ஹக்கீம் அவர்கள் சில வேளைகளில் அவசரப்பட்டு எவ்வித ஆலோசனைகளுமின்றி கட்சி தொடர்பான விடயங்களை தன்னிச்சையாக வெளியிடுவதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அநேக முஸ்லிம் கிராமங்கள் வாக்குறுதி அளித்த அதிகாரங்களை எதிர்பார்த்து நிற்கின்றனர்.கட்சியின் உயர் பீடம் செயலாளர் என பலர் இருக்க |வன் மேன் ஷோ| நடவடிக்கையில் தலைவர் ஈடுபட்டு வருவதை உச்ச பீடத்தில் உள்ள உறுப்பினர்களில் பலர் ஆதரித்தாலும்,அதனால் ஏற்படும் நன்மைகளை விட தீமைகளே அதிகமாகும்.

 

துலைவரைப் போற்றிப் புகழ்ந்து சுய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள பலர் முண்டியடிக்கக் கூடும்.உதாரணமாக ஒரு பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த கடைசி உறுப்பினரும் இன்று தேசியப் பட்டியல் எம்.பி பதவியைப் பெறுவதற்கு முண்டியடிப்பதைக் காண முடிகின்றது.
தேசியப் பட்டியல் விடயத்தை ஆராயும் போது ஐ.தே.க தேசிய பட்டியலுக்காக 4 பெயர்கள் மு.காவால் வழங்கப்பட்டிருந்தன. செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸனலி,பிரதி செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர், சட்டத்தரணி ஏ.எச்.எம்.சல்மான், ஏ.ஆர்.ஏ.ஹபீஸ் (தலைவரின் சகோதரர்) இந்த நால்வரின் பெயர்களிலிருந்து இருவரின் பெயர்கள் தேர்தல் ஆணையாளருக்கு தலைவர் ஐ.தே.க செயலாளர் ஊடாக வழங்கப்பட்ட நிலையில் நால்வரில் சல்மானும் ஹபீஸ்ஸூம் பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் செயலாளர் பிரதி செயலாளர் ஆகியோர்களின் பெயர்கள் இடம் பெறாததையிட்டு செயலாளர் நாயகம் ஹஸனலி கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.இது தொடர்பாக கட்சி மட்டத்தில் உள்ள சிலர் சில விமர்சனங்களை முன் வைக்கின்றனர்.ஏற்கனவே இரு தடவை செயலாளருக்கு நியமன உறுப்பினர் பதவி வழங்கப்பட்டதைக் கோடிட்டுக் காட்டுகின்றனர். மூன்றாவது தடவையும் கொடுக்க வேண்டுமா என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்.
அதற்கு செயலாளர் தரப்பு ஆதரவாளர்கள் தரும் விளக்கம் செயலாளர் தேர்தலில் போட்டியிட பூரண விருப்பம் தெரிவித்த போதிலும் தலைவர் அதனை விரும்பாமல் அவருக்கு தேசிய பட்டியல் மூலம் எம்.பி நியமனம் வழங்க முன்வந்துள்ளார்.இதற்கான காரணம் தலைவர் கண்டியில் போட்டியிடுவதால் திகாமடுல்ல மாவட்டத்தில் மூன்று ஆசனங்களையும் வெல்வதற்கான முழு வேலைத்திட்டமும் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கட்சியின் நலன் கருதி சகல பிரசாரப்பணி தேர்தல் கடமைகள் என்பவற்றையெல்லாம் இரவு பகல் பாராது மிகுந்த கரிசணையுடன் செயலாளர் மேற்கொண்டு தலைவரின் எண்ணம் போல் திகாமடுல்லையை வென்றும் கொடுத்தார்.தேர்தல் முடிந்து முடிவுகளும் வெளியாகிய பின்னர் தேசிய பட்டியலில் இடம்பெற்றிருந்த ஹஸனலிக்கு நியமனம் வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரத்துடன் வினவிய போது தலைவர் அவசர நிலைமை காரணமாக சல்மானையும் அவரது சகோதரரையம் நம்பிக்கையின் அடிப்படையில் நியமனம் செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் பாராளுமன்ற அமர்வுகளும் நடைபெற்று வரும் இவ்வேளையில் செயலாளருக்கு எம்.பி நியமனம் வழங்கப் படாமல் தாமதமாவது குறித்து கட்சிப் போராளிகள் மட்டத்தில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

 

மூன்றாவது முறை என்ற விடயம் ஹஸனலிக்கு மட்டும் தான் பொருந்துமென்றால் தற்போது மூன்றாவது தடவையாகவும் பாராளுமன்றத்தில் இருப்பவர்களுக்கு ஏன் அந்த சட்டம் பொருந்தவில்லை. கட்சியின் பவிகள் தொடர்பாக கால நடைமுறைகள் இருந்தால் எல்லோருமே அதற்கு உட்பட்டு நடக்க வேண்டும் அப்படியானால் பதவிகளுக்கான காலத்தை கட்சி வரையறை செய்யுமா ?

hasan-ali
தேசியப் பட்டியலில் ஒருவருடைய பெயர் உள்வாங்கப்பட்டால் தேர்தல் காலத்தில் அவரும் ஒரு அபேட்சகர் உன்பதை யாரும் மறுக்க முடியாது.கட்சித் தலைவரே தேர்தலுக்கு முன் செயலாளரின் பெயரை தேசியப் பட்டியலில் போட்டுவிட்டு தேர்தல் முடிந்த பின் கழுத்தறுப்புச் செய்வது நியாயமாகுமா?அப்படியென்றால் செயலாளர் நாயகத்தை தலைவரே ஏமாற்றி விட்டாரா என்ற விசனங்களும் எழாமலில்லை.
2008ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் எம்.பி பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு தேர்தல் களத்தில் குதித்து 56000ககும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று அம்பாரை மாவட்டத்திலேயே முதலிடம் பிடித்தவருக்கு நடந்து முடிந்த பொதுத் தேர்தல் ஒரு பொருட்டே அல்ல.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த மட்டில் மறைந்த தலைவரின் ஆளுமையுடன் ஒப்பிட்டு பேசக் கூடிய ஒரு தலைவராகவும் மக்களின் மனங்களில் வாழும் ஒரு தலைவராகவும் மர்ஹூம் அஷ்ரஃபை இழந்த மக்களுக்கு ஆறுதல் அளிப்பவராகவும் ஹஸனலி விளங்குகின்றார்.
அண்மையில் நடந்த உச்சபீட உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.கே.ஜவாத் செயலாளர் நாயகத்தை கட்சியின் பொக்கிஷம் என்றும் முதிசம் என்றும் மரணிக்கும் வரை பாராளுமன்றத்தில் வைத்து அழகு பார்த்து ரசிக்க வேண்டியவருமாக ஹஸனலி விளங்குகின்றார் என்ற வகையில் பேசியமை எல்லோரின் கவனத்தையும் ஈர்த்ததாக அமைந்திருந்தது.
கிழக்கு மக்களின் 62000 ஏக்கர் விவசாயக் காணிப் பிரச்சினைகள்,ஹிங்குராண சீனிக் கூட்டுத்தாபன கரும்புக் காணிப் பிரச்சினைகள்,சிறுபானமைச் சமூகங்களின் உரிமைப் பிரச்சினைகள்,கடந்த கால அமைதிப் பேச்சுவார்த்தைகள்,தமிழ்-முஸ்லிம் கட்சிகளின் உறவுக்குப் பாலமாய் செயற்படுகின்ற போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றையும் நன்கு விளங்கிய ஒருவராக ஹஸனலி திகழ்வது கட்சிக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும்.
ஏதிர்கால அரசியலில் புதிய யாப்புச் சீர்திருத்தங்கள்,தொகுதி நிர்ணயங்கள்,எல்லப் பிரச்சினைகள் போன்ற விடயங்கள் குறித்து பாராளுமன்றத்தில் பேசுவதற்கு ஏற்ற ஒருவராக ஹஸனலி உள்ளாரா என்பதைக் கட்சிப் பிரமுகர்கள் நெஞ்சில் வைத்துக் கேட்டுப் பார்க்க வேண்டும்.
இது தவிர எதிரவரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தல்கள் மு.காவைப் பொறுத்த மட்டில் முக்கிய தேர்தலாகும்.மர்ஹூம் அஷ்ர.ப் அவர்கள் அம்பாரை மாவட்டத்தில் ஒரு பிரதேச சபையாவது தோல்வி அடைந்தால் தனது எம்.ப பதவியை ராஜினாமாச் செய்வேன் என்று கூறி அதன்படி தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்தவர்.

 

இதன் மூலம் மர்ஹூம் அஷ்ர.ப் எவ்வளவு தூரம் கட்சியின் வளர்ச்;சியில் அக்கறை கொண்டுள்ளார் என்பதை அறிய முடியும்.எனவேதான் நல்லாட்சி மலர்ந்துள்ள இவ்வேளையில ;வெண்ணை திரண்டு வரும் போது தாழி உடைந்த கதையாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலவரம் மாறிவிடக் கூடாது.
நகமும் தசையும் போல் இருந்த தலைவரும் செயலாளரும் தமக்கிடையே பரஸ்பரம் புரிந்துணர்வை வளர்த்துக் கொண்டு முஸ்லிம் சமூகத்திக் அமானிதமாக மறைந்த தலைவரும் சுகதாக்களும் விட்டுச் சென்ற இந்தக் முஸ்லிம் காங்கிரஸ் என்ற அமானிதத்தை கட்டுக் கோப்புக் கலையாமல் காப்பது முக்கிய கடமையாகும்.
சகுனிகளும், சதிகாறர்களும் இந்தக் கட்சியை வேரறுக்கத் திட்டங்களைத் தீட்டிச் செயற்படக் கூடும்.மட்டுமன்றி அந்நிய சதி முயற்சிகளும் கருவறுக்கக் காத்திருக்கும்.ஆகவே கட்சியைக் காப்பாற்றுவது எல்லோரினதும் தார்மீகக் கடமையாகும்.