அமெரிக்கத் தீர்மானம் அதிருப்தியளிக்கிறது – தமிழகத் தலைவர்கள் !

மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானம் தொடர்பில் தமிழகத் தலைவர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளதாக ‘த ஹிந்து’ செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Karunanidhi_Ramadoss

ஐ.நா. வில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானம் தமிழர்களுக்கு நம்பிக்கை அளிக்கவில்லை என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

 

தாமதப்படுத்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

 

இலங்கையின் ஆதிக்குடிகளான ஈழத் தமிழர்களுக்கு தொடர்ந்தும் இழைக்கப்பட்டு வந்த எண்ணிலடங்காத கொடுமைகளுக்கும், இனப்படுகொலைக்கும், மனித உரிமை மீறல்களுக்கும், போர் குற்றங்களுக்கும் தாமதமாகவேனும் நீதி கிடைக்கும் என உலகத் தமிழர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

இலங்கை பிரச்சினையில் முன்னைய காங்கிரஸ் அரசுக்கும், தற்போது ஆட்சியிலுள்ள பாரதீய ஜனதாக் கட்சி அரசுக்கும் வித்தியாசம் கிடையாது என்பதை அமெரிக்கத் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்துள்ளமை எடுத்துக் காட்டுவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

யுத்தக் குற்றங்களையும், இனப்படுகொலைகளையும் நடத்தியவர்கள் தண்டனையின்றித் தப்பிக்கவும், சொந்தங்களைப் பறி கொடுத்தவர்கள் இறுதி வரை நீதி கிடைக்காமல் வாடுவதற்கும் இந்த தீர்மானம் வழிசமைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அமெரிக்க தீர்மானமானது, திருடர்கள் கையில் சாவியை ஒப்படைத்ததைப் போன்றதொரு செயல் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளார்.