ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இரவு இலங்கை நேரப்படி 7.30 மணியளவில் ஐ. நா 70வது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் தனது பிரதான உரையினை நிகழ்த்தியிருந்தார்.
நிலையான அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் ஆகிய இரட்டைக் காரணிகளை எட்டுவதே இலங்கை அரசாங்கத்தின் இலக்காகும் என ஐக்கிய நாடுகளின் 70 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
இலங்கையில் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கான உடனடித் திட்டங்களையும் அறிமுகப்படுத்துவதற்கு திடசங்கட்பம் பூண்டுள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
அத்துடன், நிலையான அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாயின் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் உண்மையாக செயற்பட வேண்டும் எனவும், அப்போதே நவீன
இலங்கையை கட்டியெழுப்ப முடியும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
கடந்த கால அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு உண்மையைக் கண்டறிதல், நீதியை நிலைநாட்டுதல், பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் மீண்டும் தவறுகள் நேராமல் இருப்பதை உறுதிசெய்தல் என்பன குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஐ.நா வில் குறிப்பிட்டார்.
இதேவேளை, அனைத்து வகையான மோதல் வடிவங்கள் மற்றும் பயங்கரவாதம் மனித குலத்திற்கு பேரழிவானவை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.
இந்த அடிப்படையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இலங்கை வெற்றி பெற்றுள்ள போதிலும், ஆசியாவிலிருந்து ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்கா வரையான நாடுகள் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதில் தொடர்ந்தும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக ஜனாதிபதி இதன்போது எடுத்துக்காட்டினார்.
தேசிய தலைவர்களாகிய அனைவரும், சுய ஒழுக்கத்துடன் கூடிய சமத்துவமான அணுகுமுறைகள் ஊடாக நிலையான அபிவிருத்திகளை அடைந்துகொள்வதற்கான உரிய உடனடித் திட்டங்களை எதிர்காலத்தில் கையாள வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உலகத் தலைவர்களுக்கு யோசனை முன்வைத்தார்.