ISIS தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் சிரியாவிற்கு இராணுவ உதவிகளை வழங்க ரஷ்யா இணக்கம் !

 

ISIS தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் சிரியாவிற்கு இராணுவ உதவிகளை வழங்க ரஷ்யா இணங்கியுள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சிரியாவில் தமது விமானப் படையினரை அனுப்பி ISIS தீவிரவாத அமைப்பிற்கு எதிராகப் போரிட இணக்கம் தெரிவித்துள்ளதாக சிரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Unknown

ரஷ்யாவின் Federation Council ஆதரவளிக்க முன்வந்ததைத் தொடர்ந்தே ரஷ்ய அதிபர் சிரியாவிற்கு தமது விமானப் படையினரை போரில் ஈடுபடுத்தத் தீர்மானித்துள்ளார்.

முன்னதாக தமக்கு ஆதரவு வழங்குமாறு சிரிய அதிபர் பஷார் அல் அசாத், ரஷ்யாவிடம் ISIS இற்கு எதிரான போரில் தமக்கு இராணுவ உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இதேவேளை, சிரியாவின் உள்நாட்டு விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமாவும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் நேற்றைய தினம் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு ISIS அமைப்பை ஒடுக்கும் நடவடிக்கையில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயற்படத் தயார் என தெரிவித்திருந்தனர்.

இருப்பினும், சிரியாவின் அதிபராக அல் அசாத் நீடிப்பது தொடர்பான நிலைப்பாட்டில் இரு நாட்டுத் தலைவர்களும் முரண்பட்டனர்.

சிரிய அரசிற்கு எதிராக உள்நாட்டில் கிளர்ச்சியாளர்கள் ஆயுதம் ஏந்திப் போரிட்டு வருகின்றனர்.

அந்நாட்டின் கணிசமான பகுதிகளை ISIS தீவிரவாத அமைப்பு கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில், ISIS அமைப்புக்கு எதிராக அமெரிக்கக் கூட்டுப்படையினர் வான் வழித் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

போர்க்குற்றங்கள் புரிந்ததாகக் கூறி சிரிய அதிபர் அல் அசாத் பதவி விலக வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

அதேவேளை, ISIS பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் ஆர்வம் காட்டிவரும் ரஷ்யா, அல் அசாத் அதிபராக நீடிக்க வேண்டும் எனவும், சிரியாவின் அரசுப் படைகளுக்கு உலக நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறது.