யாருக்கு பொருந்தும் இந்த தொப்பி…..?

 கடந்த 17-08-2015ம் திகதி  நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் திகாமடுல்லவில் மு.கா வகுத்த வியூகம் பெற்ற மா பெரும் வெற்றியானது இத் தேர்தலில் மு.கா அடைந்த மாபெரும் தோல்விக்கு முக்காடு போட்டு மறைத்துள்ளது.இது வரை காலப்பகுதியில் தேசிய ரீதியில் பரந்தளவிலான ஆதரவினைத் தக்க வைத்து வந்த மு.கா இத் தேர்தலோடு கிழக்கு மாகாணத்தின் திகாமடுல்ல,மட்டக்களப்பு மாவட்டங்களோடு அதன் வீச்செல்லையினை முடக்கிக் கொண்டது.

hakeem_Fotor

மீண்டும் மு.கா தனது முள்ளந்தண்டினை நிமிர்த்தி எழுந்து நிற்க ஐ.தே.கவினால் மு.காவிற்கு தேசியப்பட்டியல் எனும் மருந்து வழங்கப்பட்டுள்ளது.இவ் மருந்தினை எவ் இடத்தில் கட்டுவதன் மூலம் தனது முள்ளந்தண்டினை நிமிர்த்த முடியும் என்பதனை கண்டு பிடிப்பதில் மு.காவின் தலைமை வைத்தியர் மிகப் பெரிய சவாலினை சந்தித்து இறுதி முடிவிற்கு வந்துள்ளதாக அறிய மு/டிகிறது.

 

ஐ.தே.கவினால் வழங்கப்பட்ட தேசியப் பட்டியலின் முதற் சுற்றில் மு.கா உரிய நபரினை நியமிக்காது தனது இரண்டு நம்பிக்கையான நபரினை ஐ.தே.கவின் தேசியப்பட்டியலில் உள்ளடக்கியுள்ளது.இவர்கள் இருவரும் அமைச்சர் ஹக்கீம் உத்தரவிடும் போது  இராஜினாமா செய்து அவ் இடத்திற்கு அமைச்சர் ஹக்கீமினால் உரிய நபர்கள் நிரப்பப்படுவார்கள் எனவும் அறிய முடிகிறது.

 

மு.கா தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக உள்ள DR ஹபிஸின் கன்னி உரையே அவரது இறுதி உரையாகவும்  இருக்கும் என அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டதற்கு இணங்க 22-09-2015ம் திகதி கூடிய பாராளுமன்றத்தில் அவர் இராஜினாமா செய்வார் என அனைவரும் எதிர்பார்த்த போதும் அவர் இராஜினாமா செய்யவில்லை.

 

தேசியப்பட்டியலுக்கு பொருத்தமான நபரினைத் தீர்மானிப்பதில் மு.கா தலைமையின் தடுமாற்றம்,தேர்தல் ஆணையாளரின் இறுக்கமான வரையறைகள் மு.காவின் இவ் மாற்று நடவடிக்கைக்கான பிரதான காரணங்கள் எனலாம்.ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் மு.கா சார்பாக நால்வரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.இருந்த போதிலும் அமைச்சர் ஹக்கீம் தனது நம்பிக்கைக்குரியவரான அவ் இருவரில் ஒருவராக தனது சகோதரரை நியமித்துள்ளதார்.இவ் விடயம் மு.கா தலைமை தனது நம்பிக்கைக்குப் பாத்திரமாக தனது குடும்பத்தினை நாடும் நிலைக்குச் சென்றுவிட்டதனையே எடுத்துக் காட்டுகிறது. 

 

இச் செயல் ஐ.தே.கவின் தேசியப்பட்டியலில் பெயரிடப்படிருந்த மு.காவின் சிரேஷ்ட உறுப்பினர்களான ஹசன் அலி,நிஸாம் காரியப்பர் மீதான மு.கா தலைவரின் நம்பிக்கையினை கேள்விக்குட்படுத்துகிறது.இலங்கையில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களது தேசியப்பட்டியல் உறுப்பினரினை முதற் சுற்றுலேயே நியமித்துள்ள நிலையில் மு.காவின் இத் தாமதம் மு.காவின் அரசியல் நகர்வுகளினை தேசிய ரீதியில் நகைப்பிற்குட்படுத்துகிறது.

 

இம் முறை வன்னியில் பாராளுமன்றம் தெரிவான மஸ்தான்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் ஆகியோர் மு.காவின் பக்கம் தங்கள் அரசியற் பார்வையினை திருப்பியுள்ளனர்.தற்போது மு.கா தேசியப்பட்டியல் வழங்க சிந்திப்பவரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்கும் உள்ளடங்குகிறார்.ஹுனைஸ் பாரூக்கிற்கு தேசியப்பட்டியல் வாக்குறுதி அளிக்கப்பட்ட பின்பே மு.காவில் இணைந்ததாகவும் ஒரு கதை உலா வருகிறது.இவர்களினை தேசியப்பட்டியலினைக் கொண்டு உள் வாங்கும் நோக்கோடு தேசியப் பட்டியல் வழங்குவதனை அமைச்சர் ஹக்கீம் தாமதம் செய்திருந்தால் அதனை ஓரளவு ஏற்கலாம்.எனினும்,இத்தனை தாமதம் பொருத்தமான முடிவினை எடுப்பதில் அமைச்சர் ஹக்கீம் சந்தித்துள்ள சவாலினையே எடுத்துக் காட்டுகிறது.

 

தேர்தலின் பிற்பாடு வன்னியில் ஏற்பட்ட திடீர் அரசியல் மாற்றம்,மு.கா வன்னி,திருகோணமலையில் எதிர்பாராத விதத்தில் தோல்வியைத் தழுவியமை,மு.கா தலைமை அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வாக்குறுதியினை வழங்கியமை போன்ற காரணிகள் ஏற்படுத்திய தாக்கமே மு.காவின் தேசியப் பட்டியல் பகிர்வினை அதீத சவாலுக்குட்படுத்தியது எனலாம்.

 

வன்னி,திருகோணமலையில் மு.கா தான் பல ஆண்டுகாலமாக தக்க வைத்து வந்த பாராளுமன்ற உறுப்புருமையினை இழந்துள்ளது.கடந்த முறை களுத்துறைக்கு மு.கா தேசியப்பட்டியல் மூலம் அரசியல் அதிகாரம் வழங்கியும் அவ் உறுப்பினரினால் இம் முறையும் நிமிர்ந்து நிற்க முடியவில்லை.குருநாகலில் அ.இ.ம.காவினை எதிர்த்து ஒரு உறுப்பினரின் பெயரினைக் கூட வேட்பு மனுவில் உள்ளடக்க இயலாத கட்சியாக மு.கா உள்ளது.அனுராதபுரம்,திருகோணமலை ஆகிய இரு இடங்களிலும் ஒரு காலத்தில் முஸ்லிம்களின் ஏகோபித்த கட்சியாக திகழ்ந்த மு.கா இம் முறை எந்த ஆசனத்தினையும் பெறாத போதும் நேற்று துளிர் விட்ட அ.இ.ம.கா தங்களது பிரதிநிதித்துவத்தினை உறுதி செய்து மு.காவிற்கு சமனாக கம்பெடுத்து தனது ஆட்டத்தினை ஆரம்பித்துள்ளது.

 

கம்பஹாவில் மு.கா சார்பாக களமிறக்கப்பட்ட ஷாபி அவர்கள் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியினைத் தழுவியுள்ளார்.பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் வாழும் கொழும்பு மாவட்டத்தில் மு.கா சார்பாக ஒரு வேட்பாளரினைக் கூட நிறுத்த இயலாத ஒரு கட்சியாக மு.கா உள்ளது.மேலுள்ள பிரதேசங்களில் மு.காவிற்கு ஏற்பட்டுள்ள சவாலினை திறம்பட எதிர்கொண்டு தனது  அரசியல் .வாழ்வினைத் மு.கா தொடர வேண்டுமாக இருந்தால் அவ் இடங்களுக்கு ஏதாவது அரசியல் அதிகாரம் வழங்கப்படல் வேண்டும்.இவ் இடங்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்க மு.காவிடம் தேசியப்பட்டியலினைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றே கூற வேண்டும்.

 

மு.காவிற்கு தேசியப்பட்டியலுக்கான தேவைகள் அதிகமாக உள்ள போதும் இரண்டே இரண்டு தேசியப் பட்டியலே ஐ.தே.கவிடம் இருந்து கிடைத்துள்ளது.தற்போதைய கள நிலவரங்களின் படி அம்பாறை,மட்டக்களப்பு,வன்னி,திருகோணமலை ஆகிய நான்கு இடங்களில் உள்ளவர்களுக்கே மு.கா தேசியப்பட்டியலினை வழங்க அதிகம் சிந்திப்பதாக அறிய முடிகிறது.இதில் மு.காவின் அரசியல் அதிகாரங்கள் போதுமானளவு காணப்படுகின்ற அம்பாறை,மட்டக்களப்பு மாவட்டங்களினை இன்னும் இன்னும் தனது அரசியல் அதிகாரம் கொண்டு பலப்படுத்த விளைவதனை ஒரு சாதூரியமான செயற்பாடாக கருத முடியாது.

 

திகாமடுல்ல மாவட்டத்தின் மூன்று தொகுதிகளிலும் மு.கா சார்பாக மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.இதில் இருவர் பிரதி அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.அமைச்சில் உள்வாங்கப்படாத மன்சூரிற்கு மத்திய அமைச்சிற்கு சமனான மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் பதவியும் வழங்கப்படும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.மு.கா சார்பாக .நான்கு மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளனர்.திகாமடுல்லவில் மு.கா உறுப்பினர்களினை தவிர வேறு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இல்லை.திகாமடுல்ல மாவட்டத்தில் மு.கா உறுப்பினர்கள் தவிர்ந்து உள்ள மூன்று மாகாண சபை உறுப்பினர்களில் அமீர்,உதுமாலெப்பை ஆகிய இருவரும் அவர்கள் களமிறங்கிய எத் தேர்தலிலும் தனது சொந்த வாக்கில் தெரிவானவகள் அல்ல.

 

மு.காவில் இருந்து தெரிவாகி தற்போது அ.இ.ம.காவின் பக்கம் சென்றுள்ள மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் பல தேர்தல்களில் பல்லாயிரம் வாக்குகளினை பெற்றுள்ள போதும் இம் முறை இடம் பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மு.காவினை எதிர்த்து அவரது சொந்த ஊரிலிருந்து 2800 அளவிலான வாக்கினையே அவரினால் அ.இ.ம.காவிற்கு பெற்றுக் கொடுக்க முடிந்தது.அவர் நேரடியாக களமிறங்கும் போது இதனை விட சற்று அதிகமான வாக்கினைப் பெறலாம்.இருந்த போதிலும் மு.காவின் அம்பாறை மாவட்ட வாக்கு வங்கியில் அவ்வளவு பாரிய தாக்கத்தினைச் செலுத்துவார்  என்ற நம்பிக்கை இத் தேர்தலின் முடிவோடு இல்லாமலாகியுள்ளது.திகாமடுல்ல மாவட்டத்தில் மு.காவின் எதிரிகள் தேய்ந்து கட்டெறும்பாகவும்,மு.கா பாரிய யானையாகவும் காட்சி தரும் இச் சந்தர்ப்பத்தில் கட்டெறும்பினை காதினுள் புகாது பாதுகாத்துக் கொண்டால் போதுமானதாகும்.திகாமடுல்லாவிற்கு மு.கா தேசியப் பட்டியலினை வழங்குவதானது  மிகை உணவு கழிவாகவும்,கொழுப்பாகவும் மாறுவது போல எது வித பயனும் அற்ற ஒன்றாக மாறிவிடும்.

 

திகாமடுல்லவில் தேசியப்பட்டியலினை அட்டாளைச்சேனையில் உள்ள ஒருவருக்கு வழங்க வேண்டும் என ஒரு கருத்தும்,ஹசன் அலிக்கு வழங்க வேண்டும் என ஒரு கருத்துமாக மொத்தம் இரு கருத்துக்கள் நிலவுகின்றன.அட்டாளைச்சேனையில் இருந்து கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக யாரும் பாராளுமன்றம் செல்லவில்லை என்ற பிரதேசவாத சிந்தனையின் மேல் எழுகையே  அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட வேண்டும் என கோரப்படுவதற்கான காரணம் எனலாம்.இம் முறை திகாமடுல்லவில் களமிறங்கிய மூன்று வேட்பாளர்களும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே காணப்பட்டது.அட்டாளைச்சேனையினைச் சேர்ந்த ஒருவர் பாராளுமன்றம் செல்ல வேண்டுமாக இருந்தால் தேசியப் பட்டியலினை மையப்படுத்தாது அட்டாளைச்சேனையில் உள்ள ஒருவரினை மு.கா சார்பாக தேர்தலில் களமிறங்க அமைச்சர் ஹக்கீம் வாய்ப்பளித்திருக்கலாம்.

 

அம்பாறை மாவட்டத்திலுள்ள பாலமுனை,ஒலுவில்,இறக்காமம்,மாளிகை காடு,வரப்பத்தான்ஞ்சேனை,மருதமுனை,நற்பட்டிமுனை,கொழனி போன்ற ஊர்களின் வரலாற்றில் ஒரு பாராளுமன்ற  உறுப்பினர் கூட தெரிவாகவில்லை.இந்த ஊர்களும் மு.காவினை பூரணமாக ஆதரிக்கும் ஊர்கள் தான்.ஏன்? இந்த ஊர்களுக்கு மு.கா சார்பான மாகாண சபை உறுப்பினர் கூட தெரிவானதில்லை.அட்டாளைச்சேனையில் தற்போது மாகாண சபை உறுப்பினர் உள்ளார்,கடந்த முறையும் இருந்தார்.

 

பாராளுமன்ற உறுப்பினரும் இருந்துள்ளார்.பிரதேச ரீதியாக சிந்திக்கும் போது அட்டாளைச்சேனையினை விட மேலே குறிப்பிட்ட ஊர்களே தேசியப்பட்டியலுக்கு மிகவும் பொருத்தமானதாகும்.அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்குவதன்  விளைவு அனைத்து ஊர் மக்களும் தங்களது ஊரிலிருந்து அரசியல் உறுப்புருமையினைப் பெற வேண்டும் என்ற பிரதேச வாத சிந்தனைக்கு வித்திடும்.இச் சிந்தனை மேலெழுமாக இருந்தால் முஸ்லிம்கள் அதிகம் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தவரே முஸ்லிம்களினை ஆள வேண்டும் என்று கருத்திற்கும் வலுச் சேர்க்கும்.

 

உறுப்பினர்களினை தங்கள் ஊர் சார்பாக எடுத்து காட்சிப் படுத்துவதில் யாரும் எது வித பயனையும் பெறப் போவதில்லை.இதனை எல்லாம் புறம் தள்ளி தங்களது ஊர்த் தேவைகளினை நிறைவேற்றிக் கொள்ளும் விதமான  கோரிக்கைகளினை .மு.காவுடன் நிபந்தையுடன் முன் வைப்பது ஆக்கபூர்வமானதாக இருக்கும்.

 

திகாமடுல்லவில் மயிலின் ஆட்டத்தின் முன்பு தாங்கள் தோல்வி கண்டு விடுவோமோ? என்ற அச்சத்தில் திகாமடுல்ல சென்ற அமைச்சர் ஹக்கீம் தான் செல்லும் இடமெல்லாம் பல வாக்குறுதிகளினை அள்ளி வீசினார்.இதில் அட்டாளைச்சேனை சென்ற அமைச்சர் ஹக்கீம் அந்த ஊர் மக்களின் பல நாள் தாகமாக அந்த ஊர் மக்கள் நினைத்திருந்த பாராளுமன்ற உறுப்புருமையினை மையப்படுத்தி தேசியப்பட்டியல் வாக்குறுதியினை வழங்கி இருந்தார்.அட்டாளைச்சேனை மு.காவின் ஆதரவாளர்கள் அட்டாளைச்சேனைக்கே தேசியப்பட்டியல் என்ற பிரச்சாரத்தினை பலமாக முன்னெடுத்தனர்.

 

இதனை நம்பி வாக்களித்த அட்டாளைச்சேனை மக்கள் தேசியப் பட்டியலினை நோக்கி வழி மேல் விழி வைத்து காத்து நிற்கின்றனர்.அமைச்சர் ஹக்கீம் அட்டாளைச்சேனைக்கு வழங்காத போது அது ஏமாற்று வேலையாக கணிப்பிடப்பட்டு அது அமைச்சர் ஹக்கீமிற்கு வரலாற்றில் ஒரு கரும் புள்ளியினை ஏற்படுத்தி விடும்.அட்டாளைச்சேனையில் மு.காவினை எதிர்த்து அரசியல் செய்ய நினைக்கும் அரசியல் வாதிகளுக்கும் அது மிகவும் சாதகமாகவும் மாறிவிடும்.தற்போது அமைச்சர் ஹக்கீமும் தான் வாக்குறுதி அளித்துவிட்டேனே என்பதற்காகவே  தேசியப் பட்டியல் விவகாரத்தில் அட்டாளைச்சேனையினை தனது கருத்தில் எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

ஆனால், மு.காவின் செயலாளர் நாயகம் ஹசன் அலிக்கு தேசியப் பட்டியல் கோருவதானது பிரதேச வாத சிந்தனைக்களுக்கு அப்பாற்பட்டு சிந்திக்க வேண்டிய ஒரு விடயமாகும்.இவர் மர்ஹூம் அஷ்ரபின் கொள்கை ரீதியான சிந்தனைகள் உள்ள ஒருவர்.

 

மு.காவின் முன்னாள் தவிசாளர்களில் ஒருவரான  சேகு இஸ்ஸதீன் கூட மு.காவில் உள்ளவர்களில் இவரினை மாத்திரமே கொள்கை வாதியாக சித்தரித்து இருந்தார்.முஸ்லிம்களின் அடிப்படை உரிமையெனக் கூறி கரையோர மாவட்டத்தினை முஸ்லிம்களுக்கு பெற்றுக் கொடுப்பதில் மிகவும் உறுதியானவர்.இணைந்த வட கிழக்கில் மு.கா போட்டி இட்டு வெற்றி பெறுவதில் இவரது பங்கு அளப்பாரியது.2012 ம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மு.காவினை தனித்து களமிறக்கச் செய்து அதனூடக மு.காவினை மிகப் பெரிய பேரம் பேசும் நிலைக்கு இட்டுச் சென்றார்.

 

 இலங்கைக்கு எதிராக ஐ.நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் அறிக்கை வெளிவர இருந்த நேரம் இவர் முஸ்லிம்கள் மீது இலங்கையில் நடைபெற்ற மத ரீதியான வன்முறைகளினைச் சுட்டிக் காட்டி பல பக்க அறிக்கையினைச் சமர்ப்பித்து இலங்கை அரசிற்கு மிகப் பெரிய அழுத்தத்தினை வழங்கி இருந்தார்.இவ்வாறான சிந்தனை கொண்டவரினை தேசியப்பட்டியலினூடாக உள் வாங்கும் போது தேசியப் பட்டியல் எனும் முறைமை உருவாக்கப்பட்டதன் உண்மை நோக்கமும் நிவர்த்திக்கப்படும். 

எனினும்,இவரிற்கு ஒரு தேசியப்பட்டியல் வழங்கும் போது நிந்தவூர் எனும் ஒரு மிகக் குறுகிய பரப்பிற்குள் மு.காவின் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் முடக்கப்படுவார்கள் என்பது இவரிற்கு தேசியப்பட்டியல் வழங்கும் போதுள்ள மிகப் பெரிய குற்றச்சாட்டாகும்.பொத்துவில் தொகுதியில் இருந்து நிந்தவூர் அல்லாத ஒருவரினை தேர்தலில் களமிறக்கி ஹசன் அலிக்கு தேசியப்பட்டியலினை கொடுத்திருக்கலாம்.

 

எனினும்,இரு தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பைசல் காசீமை மு.காவினால் அவ்வளவு இலகுவில் புறக்கணிக்க முடியாது என்பதும் கவனத்திற் கொள்ள வேண்டிய விடயமாகும்.இம் முறை பிரச்சார மேடைகளில் உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம் நிந்தவூரிற்கு  இரண்டு உறுப்பினர்கள் என்ற சர்ச்சையான விடயத்தினை நான் அறியாமல் இல்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.இதன் மறு வடிவம் பைசல் காசீம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானால் ஹசனலிக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படாது என்பதாகும். 

 

மட்டக்களப்பு மாவட்டத்திலும் கல்குடாவினைச் சேர்ந்த கணக்காளர் றியாழ்,ந.தே.முவின் தலைவர் அப்துர் ரஹ்மான் ஆகியோரிற்கு தேசியப்பட்டியல் வழங்க வேண்டும் என்ற இரு கருத்துக்கள் காணப்படுகின்றன.மட்டக்களப்பு மாவட்டத்தில் மு.கா சார்பாக முதலமைச்சர் உள்ளடங்காலான இரு மாகாண சபை உறுப்பினர்கள்,ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் உள்ளனர்.

 

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இது போதுமான மு.காவின் அரசியல் அதிகாரங்களாகும்.றியாழ் விருப்பு வாக்கு அடிப்படையில் நான்காம் இடத்தில் உள்ளவராகும்.மு.கா மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒரு அரசியல் அதிகாரத்தினை வழங்க முடிவு செய்தால் அது மூன்றாம் இடத்தில் உள்ள சிப்லி பாறூக்கிக்கு வழங்குவதே பொருத்தமானது.சிப்லி பாரூக்கிற்கு வழங்காது றியாழிற்கு வழங்குவதானது சிப்லி பாறூக்கினை கூப்பிட்டு வைத்து குட்டுவது போன்று அமைந்து விடும்.

 

அ.இ.ம.காவினைச் சேர்ந்த அமீர் அலியின் கொட்டத்தினை அடக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே கல்குடாவினைச் சேர்ந்த றியாழிற்கு மு.காவின் தேசியப்பட்டியல் வழங்கப்படவேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.அமீர் அலியினை எதிர்த்து அவர் பெற்ற 9000 அளவிலான வாக்குகளினை மிகப் பெரியளவிலான வாக்குகளாகவும் சித்தரிக்கின்றனர்.அமீர் அலியின் கொட்டத்தினை அடக்க சிந்திப்பது போன்றே காத்தான்குடியினைச் சேர்ந்த ஹிஸ்புல்லாஹ்வின் கொட்டத்தினையும்,காத்தான்குடியினை தளமாக கொண்டு இயங்கும் ந.தே.மு யின் கொட்டத்தினையும் அடக்க வேண்டிய நிலையில் மு.கா உள்ளது.

 

கடந்த மாகாண சபைத் தேர்தலில் 5000 அளவிலான வாக்கினைப் பெற்ற NFGG இம் முறை தனது வாக்கு வங்கியினை  12000 இற்கு உயர்த்தியுள்ளது.அமீர் அலி 16000 அளவிலான வாக்கினையே கடந்த தேர்தலில்  பெற்றுள்ளார்.அதாவது ந.தே.மு அமீர் அலியின் வாக்கு வங்கியினை நெருங்கி விட்டது.எனவே,மட்டக்களப்பில் அமீர் அலியின் வளர்ச்சியினை விட ந.தே.மு இன் இக் குறுகியகால வளர்ச்சியே மு.காவிற்கு அதிகம் சவாலானது.

 

இவர்கள் இருவரினையும் தாண்டி காத்தான்குடி வாக்குகளினை மையப்படுத்தி களமிறக்கப்பட்ட சிப்லி பாறூக் 12000 அளவிலான வாக்கினைப் பெறுவதென்பது சாதாரணமான ஒரு விடயமல்ல.சிப்லி பாறூகினை அரசியல் அதிகாரம் கொண்டு பலப்படுத்துவது ந.தே.மு,ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இருவர் மூலமும் எழுகின்ற சவால்களினை முகம் கொடுக்க மிகவும் பொருத்தமானதாகும்.அழுத பிள்ளைக்கு மாத்திரம் பாலூட்டுவது ஒரு சிறந்த தாயின் பண்பல்ல.எனினும்,சிப்லி பாறூக்கிற்கு தேசியப்பட்டியல் வழங்கப்படும் பொது மு.காவினை விட்டும் ஒரு மாகாண உறுப்புருமை இல்லாமலாகும் என்பதால் மு.காவிடம் உள்ள மாகாண அமைச்சினை கொண்டு பலப்படுத்துவது பொருத்தமானதாகும் (தேசியப்பட்டியல் பகிர்வானது மு.காவின் மாகாண அமைச்சரினை நியமிப்பதில் செல்வாக்குச் செலுத்தும் ).

 

ந.தே.முவானது மு.காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மு.காவிடம் இருந்து ஒரு தேசியப் பட்டியலினைக் கோருவதாக கூறுகிறது.மு.காவானது ந.தே.மு உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் ஒன்பதாம் சரத்தில் குறிப்பிடுவதன் பிரகாரம் “பொதுத் தேர்தலினைத் தொடர்ந்து ந.தே.காவின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும் பட்சத்தில் அதனை மு.கா பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.அதற்கேட்ப ந.தே.மு இனால் பரிந்துரை செய்யப்படும் ஒருவர் மு.காவின் தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்படுவார்” என்றே கூறுகிறது.

 

அதாவது இவ் ஒப்பந்தத்தில் உள்ள பரிசீலித்து  எனும் வார்த்தை மு.கா விரும்பினால் ந.தே.முவிற்கு  ஒரு தேசியப் பட்டியலினை வழங்கலாம் அல்லாது போனால் வழங்காது விடலாம் என்பதையே சுட்டிக் காட்டுகிறது.இத்தனை வாக்குகளினை குறித்த ந.தே.மு எடுத்தால் மு.கா தேசியப்பட்டியலினை வழங்க வேண்டும் என்ற வரையறுக்கப்பட்ட எது வித நிபந்தனைகளினையும் காண முடியவில்லை.எனவே,ந.தே.முவிற்கு தேசியப்பட்டியல் வழங்க வேண்டும் என்பதற்கு எது வித நியாயமான காரணங்களும் இருப்பதாக  அறிய முடியவில்லை.

 

ந.தே.மு மட்டக்களப்பில் ஐ.தே.கவில் போட்டி இட அனுமதி கோரி இருந்தால் அதற்கு ஒரு ஆசனம் சில வேளை வழங்கப்பட்டிருக்கலாம்.எனினும்,ஐ.தே.கவின் தேர்தல் வேட்பு மனுவில் பெயர்கள் உள் வாங்கப்படும் இறுதி நேரம் வரை ந.தே.கவிற்கு மட்டக்களப்பில் ஒரு ஆசனத்தினை வழங்குவதற்கான முடிவினை எடுத்ததாக அறிய முடியவில்லை.

 

மு.கா வில் போட்டி இட்ட ந.தே.மு சார்பாக களமிறங்கிய அப்துர் ரஹ்மான் 12000 அளவிலான வாக்கினையே பெற்றிருந்தார்.மட்டக்களப்பில் ந.தே.மு ஆனது ஐ.தே.கவுடன் சேர்ந்து போட்டி இட்டிருந்தாலும் இந்தளவிலான வாக்கினைக் கொண்டு அவர்களால் வெற்றி பெற்றிருக்க முடியாது.மிகப் பெரிய வாக்கினைப் பெற்று ந.தே.மு சார்பாக களமிறங்கிய அப்துர் ரஹ்மான் தோல்வியினைத் தழுவி இருந்தால் அப்போது இவர்களுக்கு தேசியப் பட்டியல் வழங்குவதற்கு மு.கா சிந்திக்க வேண்டும்.

 

மட்டக்களப்பில் மு.கா வேட்பாளர்களிடையே நிலவிய ஒன்றுமை இன்மை மு.காவில் போட்டி இட்ட அப்துர் ரஹ்மான் வெற்றி பெறுவதற்கு மிகவும் சாதகமாக இருந்தது.அதனை அவர் பயன்படுத்த தவறி இருந்தார்.இவ் ஒப்பந்தத்தின் பிரகாரம் திருகோணமலையில் மு.கா தனது ஒரு ஆசனத்தினை ந.தே.முவிற்கு விட்டுக் கொடுத்தது.திருகோணமலையில் மு.கா செய்த  விட்டுக் கொடுப்பானது திருகோணமலையின் மு.காவின் பிரதிநிதித்துவ இழப்பில் மிகப் பெரிய தாக்கத்தினைச் செலுத்தியது எனலாம்.

 

மட்டக்களப்பு,திருகோணமலையில் மு.காவின் செயற்பாடு ந.தே.மு இன் வெற்றிக்கு இலகுவான பாதையினைக் காட்டிய போதும் ந.தே.மு போதியளவு வாக்கு பலமின்மை காரணமாக அதனைத் தவற விட்டிருந்தது.இதற்கு ஒரு போதும் மு.கா பொறுப்பேற்க முடியாது. ந.தே.முயின் உதவியுடன் மு.கா ஒரு ஆசனத்தினையே பெற்றுள்ளது.அந்த ஆசனத்தினையே ந.தே.மு கேட்பது எவ் விதத்திலும் நியாயமாகப் போவதில்லை.

 

வன்னிக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படுமாக இருந்தால் அது  தற்போது மு.காவில் இணைந்துள்ள ஹுனைஸ் பாரூக்கிற்கு வழங்கவே அதிகம் வாய்ப்புள்ளது.இச் செயற்பாடு வந்த காகம் இருந்த காகத்தினை விரசிய கதையாகிவிடும்.

 

எனினும்,வன்னியின் தேர்தல் முடிவுகைளினை வைத்து நோக்கும் போது ஏற்கனவே இருந்த மு.கா அங்கத்தவர்களினை பலப்படுத்துவதன் மூலம் மு.காவினை பலப்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறியாகும்.எனினும்,ஹுனைஸ் பாரூக்கினை பலப்படுத்துவதன் மூலம் அமைச்சர் றிஷாத்தின் குறிப்பிட்ட வளர்ச்சியினைத்  தடுத்து மு.காவினை வளர்ச்சியடையச் செய்யலாம்.

 

தற்போதைய சூழ் நிலையில் மு.காவின் தேசியப்பட்டியலினை  திருகோணமலை,வன்னி ஆகிய மாவட்டங்களுக்கு வழங்க வேண்டும் என்பதே பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும்.இருப்பினும் அட்டாளைச்சேனைக்கு மு.கா தலைவர் தேசியப்பட்டியல் தருவதாக கூறி விட்ட காரணத்தினால் அட்டாளைச்சேனைக்கு வழங்குவதில் மு.கா தலைமை உறுதியாக இருப்பதாகவும் அறிய முடிகிறது.

 

இவைகள் அனைத்தினையும் சமாளிக்க சுழற்சி முறை சிறந்ததாக இருக்கும்.எனினும்,கல்முனை முதல்வர் பதவியில் சுழற்சி முறையினை சிந்தித்தே முன்னாள் கல்முனை முதல்வர் சிராஸினை மு.கா இழந்தது என்ற விடயமும் இங்கே கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.