-எம்.வை.அமீர்-
உள்ளுராட்சி மன்றங்களை நடாத்திச் செல்வதற்கு அச்சபைகளுக்கு நிதி, பிரதானமான ஒன்றாக இருக்கின்ற போதிலும் குறித்த உள்ளுராட்சி மன்றங்களுக்கு கிடைக்கின்ற நிதிகளில் மிகப்பிரதான நிதி மூலங்களில் ஒன்றாக இருப்பது முத்திரை வரிகள் ஊடாக கிடைக்கும் நிதியாகும்.
குறித்த நிதி, உள்ளுராட்சி மன்றங்களுக்கு உரிய வேளைக்குக் கிடைப்பதில் சில தாமதங்கள் எதிர்நோக்கப்படுவதால் இதனை இலகுபடுத்தி துரிதமாக பெற்றுக்கொள்ளும் நடைமுறைகள் குறித்த,சம்மந்தப்பட்ட திணைக்கள பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்று கிழக்கு மாகாண முதலமைச்சரினதும் உள்ளுராட்சி அமைச்சினதும் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் தலைமையில் 2015-04-25 ல் மட்டக்களப்பில் உள்ள பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஆசியான் மன்றத்தின் நிதிஅனுசரணையுடனும் கிழக்குமாகாண உள்ளுராட்சி அணையாளர் எம்.வை.சலீம் அவர்களது பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் உள்ளுராட்சி மன்றங்களின் தற்போதைய நிலை குறித்து விரிவாக எடுத்துக்கூறினார். ஆசியான் மன்றத்தின் பிரதிநிதி எம்.ஐ.வலீத் அவர்களது வழிநடத்துதலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்குமாகாண இறைவரித் திணைக்கள பிரதி ஆணையாளர் எம்.ஐ.எம்.மாஹீர், கிழக்குமாகாண இறைவரித் திணைக்கள கணக்காளர் உட்பட உயர் அதிகாரிகள்,கல்முனை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக மாவட்டப்பதிவாளர்கள், அம்பாறை,மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர்கள், உள்ளுராசி அமைச்சின் உதவிச்செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர்,கணக்காளர் ஆகியோருடன் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்களும் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
உள்ளுராட்சி மன்றங்களுக்கான முத்திரை வரிகளை விரைவாக பெறுவது சம்மந்தமாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. குறித்த கலந்துரையாடலுக்கு இணைவாக கிழக்கு மாகாணாத்தில் இருக்கும் எல்லா உள்ளுராட்சி மன்றங்களையும் உள்ளடக்கிய கலந்துரையாடல் ஒன்றை எதிர்வரும் வாரத்தில் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.