இறைவனை அடிபணியும் ஹஜ் யாத்திரை மனித குல ஐக்கியத்துக்கான வெளிப்படைச் சாட்சியாகும் : ஜனாதிபதி !

ஐக்கிய உணர்வுகள் மேலெழுந்து ஒரே திசையை நோக்கி இறைவனை அடிபணியும் ஹஜ் யாத்திரை மனித குல ஐக்கியத்துக்கான வெளிப்படைச் சாட்சியாகுமென ஜனாதிபதி தனது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 

ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

maiththiri

 

உலகெங்கிலுமுள்ள முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து இலங்கை வாழ் முஸ்லிம்களும் கொண்டாடும் ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். முஸ்லிம் மக்கள் தமது நாளாந்த ஐவேளைத் தொழுகையின் போது முன்நோக்குகின்ற கஃபா திசையான புனித மக்கா நகரில் இலட்சக் கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்றுசேரும் புனித ஹஜ் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம் மக்களின் மிகவும் முக்கியமான வருடாந்த நிகழ்வாகும்.

 

பல்வேறு தேசங்களைச் சேர்ந்த பல்வேறு மொழிகளையும் கலாசாரங்களையும் உடைய இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் மகத்துவத்தையும் புகழை யும் பறைசாற்றுவது ஹஜ் யாத்திரை உணர்த்தும் ஐக்கியத்தை அடையாளப்படுத்தி நிற்கிறது.

 

இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்கு இந்த வருடாந்த ஹஜ் யாத்திரையில் கலந்து கொள்வதற்குத் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் வழங் குகின்றது. இதன் மூலம் அவர்கள் புனித அல்குர்ஆனினதும் முஹம்மது நபி (ஸல்) அவர்களினதும் போதனை களுக்கான தமது அர்ப்பணங்களை புதுப்பித்து, உலகெங்கிலுமுள்ள மக்கள் மத்தியில் சமாதானம், சகோதரத்துவம் மற்றும் புரிந்துணர்வு நிலவ வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றனர்.

 

இலங்கை வாழ் முஸ்லிம்கள் வரலாறு நெடுகிலும் எமது நாட்டிலுள்ள ஏனைய சமூகங்களுடன் ஐக்கியமாக வாழ்ந்து வருகின்றனர். அல்குர்ஆனின் போத னைகளால் போஷிக்கப்பட்ட இந்த ஐக்கிய உணர்வுடன் அவர்கள் எமது நாட்டின் முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளனர்.

 

இந்த விசேட தினத்தில் முஸ்லிம் களுடைய பிரார்த்தனைகள் எல்லா மக்க ளினதும் சமாதானத்திற்காகவும் கெளரவத்திற்காகவும் இருக்குமென்பதில் சந்தேகமில்லை.இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்கு மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த ஈதுல் அழ்ஹா வாழ்த்துக்கள்.