வீட்டுக்கு சென்று மகிந்தவிடம் வாக்குமூலத்தைப் பெற்ற ஆணைக்குழு !

 முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்குள் பாரிய ஊழல் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினர் சென்றுள்ளனர். 

AVN27_RAJAPAKSA_19951f
முன்னதாக வாக்குமூலத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இன்று காலை ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சமூகமளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. 

எனினும் அவரது வீட்டுக்கு சென்று வாக்குமூலத்தைப் பதிவு செய்து கொள்ள பின்னர் தீர்மானிக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார். 

இதன்படி சற்றுமுன்னர் அவர்கள் மிரிஹான பகுதியிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அரச ஊடகம் ஒன்றுக்கு 200 மில்லியன் ரூபா நஸ்டம் ஏற்பட்டமை தொடர்பில், வாக்குமூலம் பெறவே அவர்கள் இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியின் வீட்டுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. 

இந்த விடயம் தொடர்பில் கடந்த 16ம் திகதி முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் பீ.பி.ஜெயசுந்தர ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.