மரண தண்டனையை செயற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு !

அடுத்த வருடம் தொடக்கம் மரண தண்டனையை செயற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Maithri_6_3 

பாராளுமன்றில் அனுமதி கிடைத்தால் மரண தண்டனையை செயற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் ஜனாதிபதி இன்று கூறுகையில், 

´நாட்டில் இன்று இடம்பெறும் கொலை, கொள்ளை, சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் துஸ்பிரயோகம், குற்றச் செயல்கள் அதிகரிப்பு தொடர்பில் புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என பெரிதும் பேசப்படுகிறது. சட்டத்தை கடுமையாக்குவது தொடர்பில் கதைக்கப்படுகிறது. 

அண்மையில் நான்கரை வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னணியில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுமாறு சமூகத்தில் அழுத்தம் எழுந்துள்ளது. இதற்கு முன்னரும் கடந்த வருடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றபோது மரண தண்டனை நிறைவேற்றம் தொடர்பில் பேசப்பட்டது. நான்கரை வயது சிறுமியின் இறுதி கிரியைகளிலும் மக்கள் ´ஜனாதிபதி அவர்களே மரண தண்டனை விதிக்கவும்´ என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். 

மரண தண்டனை நிறைவேற்றத்தின் போது மனித உரிமை தொடர்பில் குரல் எழுப்பும் சர்வதேச நிறுவனங்கள் இடையூறு ஏற்படுத்தும். ஆனால் உலகில் பிரபல சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அதனால் மரண தண்டனை வழங்குவது தொடர்பில் எனக்கு எதிர்ப்பு இல்லை. 

உயர் நீதிமன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பின் ஜனாதிபதியின் கையொப்பத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்படும். அந்த அதிகாரம் எனக்கு இருக்கின்ற போதும் எதிர்வரும் சில மாதங்களுக்குள் பாராளுமன்றின் விருப்பத்தை அறிந்து கொள்ள நான் எதிர்பார்க்கிறேன். பாராளுமன்றில் யோசனை முன்வைக்க வேண்டிய அவசியம் இல்லை. 

ஆனால் மரண தண்டனை விதிப்பது தொடர்பில் பாராளுமன்றில் இணக்கம் ஏற்பட்டால் அடுத்த வருடம் தொடக்கம் மரண தண்டனையை செயற்படுத்த நான் எதிர்பார்த்துள்ளேன். 

இலங்கை போன்ற நாடுகள் அல்லாது உலகில் மிகவும் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் மரண தண்டனை செயற்படுத்தப்படுகிறது. மின்சார நாற்காலி, ஊசி ஏற்றல், தூக்கில் போடுதல், சுட்டுக் கொல்லல் போன்ற வழிகளில் மரண தண்டனை செயற்படுத்தப்படுகிறது´ என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.