இலங்கையின் போர்க்குற்ற விசாரணை குறித்து தமிழக சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் கடிதம் அனுப்பியுள்ளார்.
இறுதிக்கட்ட போரில் இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பில் பிரதமர் அறிந்துள்ளதாகவும் தமிழக முதல்வரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெனிவா மனித உரிமை ஆணையகத்தினூடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள போர்க்குற்ற அறிக்கை மீதான விவாதம் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் அனுப்பியுள்ள கடிதத்தில் தெளிவூட்டப்பட்டுள்ளதாக
தி ஹிந்தி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தமிழகத்தில் நிலவும் பொதுக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை நடத்துமாறு இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும் தமிழக முதல்வர் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கை போர்க்குற்ற விசாரணை குறித்து தமிழக சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடிதத்தின் ஊடாக தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.