மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச போர்க்குற்ற விசாரணை மூலம் மின்சார நாற்காலிக்கு செல்லவிருந்த ஆபத்தை தடுத்தது தமது அரசாங்கமே- மங்கள சமரவீர

இலங்கை யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றம் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும் நான்கு அம்ச திட்டம் ஒக்டோபர் மாத மத்தியில் ஆரம்பிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 
mangala-samaraweera_650x400_41435145071
அதன்படி அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி ஜனவரி மாதம் தொடங்கி 18 மாதத்திற்குள் உள்நாட்டு பொறிமுறை குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட்டு அது செயற்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு பொறிமுறையை செயற்படுத்தும் போது சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெறவுள்ளதோடு சர்வதேச நிபுணர்களின் ஆலோசனைகளையும் பெறவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். 

வெளிவிவகார அமைச்சில் இன்று (17) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு மேலும் கூறுகையில், 

´2009 ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை வந்தபோது அன்றைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட உடன்படிக்கையும் பின்னர் அதனை நிறைவேற்றாது உள்நாட்டு மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றியமையின் விளைவே இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தில் வெளியாகியுள்ள அறிக்கையாகும். 

13வது திருத்தச் சட்டம் அமுல்படுத்தல், சர்வதேச மனித உரிமை மேம்பாடு, அரசியல் தீர்வு, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை செயற்படுத்தல் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை சர்வதேசத்திடம் வழங்கி மஹிந்த ராஜபக்ஷ அதற்கு மாறாக செயற்பட்டார். அதனால் அமெரிக்கா ஏனைய நாடுகளுடன் இணைந்து இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டுவந்து நிறைவேற்றியது. 

எனினும் அதிஸ்டவசமாக ஜனவரி 8ம் திகதி மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் ரணில் விக்ரமசிங்க பிரதமராகவும் தெரிவு செய்யப்பட்ட பின் சர்வதேசத்துடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை மற்றும் உள்நாட்டில் எடுக்கப்பட்ட ஜனநாயக வலுவூட்டல் செயற்திட்டங்களால் மார்ச் மாதம் வெளியிடப்பட இருந்த போர்க்குற்ற அறிக்கை செப்டெம்பர் மாதத்திற்கு பிற்போடப்பட்டது. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு வழங்கிய கால அவகாசத்தை பயன்படுத்தி நாம் முன்னெடுத்த நல்லாட்சி திட்டங்களால் இன்று வெளியாகியுள்ள விசாரணை அறிக்கையின் தீவிரத்தன்மை குறைக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள போதும் தனிப்பட்ட எவருடைய பெயரும் பதியப்படவில்லை. அதனை தேடி தண்டிக்கும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 

அதற்கான திட்டத்தை நாம் அனைவரது ஒத்துழைப்புடனும் முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இராணுவத்தினர் தண்டிக்கப்படுவது புதுமையான விடயம் கிடையாது. மனம்பெரி கொலை, போகொட வாவி தமிழ் இளைஞர்கள் கொலை மற்றும் கிரிஷாந்தி குமாரசாமி கொலை போன்ற சம்பவங்களில் சட்டம் செயற்படுத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். 

உலகத்தில் சிறந்த இராணுவமாக கீர்த்திநாமம் எடுத்துவந்த இலங்கை இராணுவம் கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் மேலிடத்தில் இருந்து விடுக்கப்பட்ட சில தவறான உத்தரவுகளை சில இராணுவத்தினர் செயற்படுத்தியதால் முழுமையாக இழுக்குப் பெயருக்கு ஆளானது. 

ஆனால் அந்த நிலைமையில் இருந்து இராணுவத்தை மீட்டெடுத்து உலகத்தில் உள்ள எந்த நாட்டு இராணுவத்திற்கும் இரண்டாம் நிலையாகாது கீர்த்திநாமத்துடன் இருக்கும் வகையில் இலங்கை இராணுவத்தை மேம்படுத்த நாம் நடவடிக்கை எடுப்போம். அதன் ஒரு கட்டமாக மாலி நாட்டுக்கு சமாதானப் படையாக இலங்கை இராணுவ வீரர்கள் பலரை அனுப்பி வைக்க நாம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளளோம். 

அது மாத்திரமன்றி உள்நாட்டு பொறிமுறை செயற்படுத்தல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா விஜயம் செய்யும் போது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உள்ளிட்ட பலருடன் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளோம். அதன்மூலம் புதிய இலங்கைக்கான அடிக்கல்லை நாட்ட எதிர்பார்த்துள்ளோம். 

துரதிஸ்டவசமாக ஜனவரி 8ம் திகதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன தோல்வியை சந்தித்திருந்தால், பழைய ஆட்சியாளர் மூலம் இலங்கை நினைத்து பார்க்க முடியாத ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும். மார்ச் மாதத்தில் போர்க்குற்ற அறிக்கையை வெளியிட்டு அதில் பெயர்கள் குறிப்பிட்டு இராணுவத்தினர் மீது போர்க்குற்றம் சுமத்த வாய்ப்பு இருந்தது. பின் சர்வதேச விசாரணை மூலம் இலங்கைக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டு சர்வதேச தடைகள் பல விதிக்கப்பட்டிருக்கும். குறிப்பாக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கை மீது தடை விதித்தால் போதும் இலங்கையில் முழு பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்து ஆடைத்தொழிற்சாலை துறையில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பபை இழந்திருப்பர். 

ஆனால் அப்படி ஒன்று நடக்காமல் நாம் பாதுகாத்துள்ளோம். உண்மையை சொல்வதாயின் மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச போர்க்குற்ற விசாரணை மூலம் மின்சார நாற்காலிக்கு செல்லவிருந்த ஆபத்தை தடுத்தது தமது அரசாங்கமே´ என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.