97 ஓட்டங்களால் பஞ்சாபை வென்றது சென்னை !

211827.3

ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. நேற்றைய லீக் போட்டியில் பஞ்சாப் அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் மிகச் சுலபமாக வீழ்த்தியது.சென்னையில் நேற்று நடந்த எட்டாவது ஐ.பி.எல்., தொடரின் லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதின. சென்னை அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. பஞ்சாப் அணியில் மேக்ஸ்வெல் நீக்கப்பட்டு, ஜார்ஜ் பெய்லி இடம் பெற்றார். ‘டாஸ்’ வென்ற சென்னை கேப்டன் தோனி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

சென்னை அணிக்கு டுவைன் ஸ்மித், பிரண்டன் மெக்கலம் சேர்ந்து அதிரடி துவக்கம் தந்தனர். இவர்கள், பஞ்சாப் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். கரண்வீர் சிங் வீசிய போட்டியின் மூன்றாவது ஓவரில் ஸ்மித் 2 சிக்சர், 2 பவுண்டரி சேர்த்து 22 ரன்கள் அள்ளினார். சந்தீப் சர்மாவின் அடுத்த ஓவரில் மெக்கலம் ஒரு சிக்சர், பவுண்டரி அடிக்க, ஸ்கோர் ‘ஜெட்’ வேகத்தில் உயர்ந்தது. அனுரீத் பந்தில் ஸ்மித்(26) போல்டானார். தனது அபார ஆட்டத்தை தொடர்ந்த மெக்கலம், ஜான்சன் ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்து அரைசதம் கடந்தார். இவர், 66 ரன்களுக்கு வெளியேறினார். ரெய்னா(29), ரன் அவுட்டானார்.

 பின் தோனி, ரவிந்திர ஜடேஜா சேர்ந்து அசத்தினர். இவர்கள், ஜான்சன் ஓவரில் 3 பவுண்டரி விளாசினர். கடைசி ஓவரை கட்டுக் கோப்பாக வீசிய சந்தீப் சர்மா 4 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுக்க, 200 ரன்களை எட்ட முடியாமல் போனது. சென்னை அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்தது. தோனி(41), ஜடேஜா(18) அவுட்டாகாமல் இருந்தனர். 
‘சூப்பர்’ பந்துவீச்சு:
சவாலான இலக்கை விரட்டிய பஞ்சாப் அணி, சென்னை அணியின் அசத்தல் பந்துவீச்சில் அதிர்ந்தது. ஈஷ்வர் பாண்டே வீசிய முதல் ஓவரிலேயே சேவக்(1) அவுட்டானார். நெஹ்ராவிடம் ஷான் மார்ஷ்(10) சரணடைந்தார். ஜடேஜா ‘சுழலில்’ கேப்டன் பெய்லி(1), மில்லர்(3) சிக்கினர். சிறிது நேரம் அதிரடி காட்டிய முரளி விஜய்(34), அஷ்வின் வலையில் வீழ்ந்தார். அக்சர் படேல்(9), ஜான்சன்(1) நிலைக்கவில்லை. பஞ்சாப் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 95 ரன்கள் மட்டும் எடுத்து படுதோல்வி அடைந்தது.
பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய சென்னை அணி, இத்தொடரில் 5வது வெற்றியை பெற்று அசத்தியது.