சுலைமான் றாபி
நமது இலங்கை நாடு தற்போது நல்லாட்சியின் பக்கம் தனது கால்களை ஆழப்பதித்து தேசிய அரசாங்கத்தின் மூலம் சகலருக்கும் அதிகாரப் பங்கு வழங்கி ஒரு நிலையான அரசியல் பயணத்தினை கொள்கை அடிப்படையில் நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதில் சிறுபான்மையினரின் தனியான அரசியல் கௌரவமும், பெரும்பான்மை சக்திகளின் இணக்கப்பாட்டு அரசியலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் இந்த அரசியல் மாற்றமானது படித்தவனின் அறிவையும், பாமரனின் அறிவையும் சற்று தூசு தட்ட துவங்கியுள்ளது.
இது ஒரு புறமிருக்க கடந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் அமைச்சரவையிலும், அரசாங்கத்திலும் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த தேசிய காங்கிரசின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் இம்முறை இடம்பெற்ற பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் தனது சொந்த மாவட்டத்திலே மக்களால் நிராகரிக்கபட்டு தோல்விடைந்தார். உண்மையில் இந்த தோல்வியானது தேசிய காங்கிரசின் ஆதரவாளிகளால் சகிக்கமுடியாத ஒன்றாகக் காணப்பட்டாலும் முஸ்லிம் காங்கிரஸும், அதன் போராளிகளும் மகிழ்ச்சிப் பெருவெள்ளத்தில் மூழ்கிக்கிடப்பதொன்றாகவே அவதானிக்கப் படுகின்றது.
ஏனென்றால் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அவர்கள் தான் அமைச்சராக செயற்பட்ட காலங்களில் தனது அபிவிருத்தி நடவடிக்கைகளை ஒரு குறிப்பிட்ட பகுதுக்கு மட்டும் மட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல், முஸ்லிம் காங்கிரசினால் எந்தவித அபிவிருத்தி பணிகளும் இடம்பெறக் கூடாது என்பதிலும், அவ்வாறு இடம் பெறுவதென்றால் அது தனது ஆசீர்வாதங்களுடனே இடம்பெறவேண்டும் என்கின்ற நிலைப்பாடு இருந்த போதும், மறு பக்கத்தில் முஸ்லிம் காங்கிரசின் மீது கடந்த அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்கள் மத்தியிலும், ஜனாதிபதி மத்தியிலும் அவ நம்பிக்கை இருந்தமையினாலும் மிகப்பெரிய அபிவிருத்தி வேலைகளை நடைமுறைப்படுத்த முடியாமல் போனது.
இது ஒரு புறமிருக்க முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தங்களது பகுதிகளில் வந்து அபிவிருத்தி வேலைகள் செய்யக்கூடாது என்பதிலும் முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் திரைமறைவில் பல காய்களை நகர்த்தியிருந்தனர். இவையெல்லாம் கடந்த கால மறக்க முடியாத விடயங்கள் என்றாலும் நடைபெற்று முடிந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தல் பிரச்சார மேடைகளில் மு.கா தரப்பினரால் பேசப்பட்ட பேச்சுக்களாகும். உண்மையில் அபிவிருத்தி விடயத்தில் மு.கா வின் இயலாமை அதாஉல்லா தடுக்கின்றார் என்று சொல்லி அவரின் பெயரிற்குப் பின்னால் ஒழிந்து கொண்டிருந்தது மறுக்க முடியாதொன்றாகும்.
ஏனென்றால் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட பலதரப்பட்ட அபிவிருத்திகள் அவரின் மறைவிற்குப் பிறகு முஸ்லிம் காங்கிரசாலும், அதன் தலைமத்துவத்தினாலும் மக்கள் மத்தியில் சரியாக கொண்டுபோய் சேர்ப்பதற்கும் அவைகளை செய்து காட்டுவதற்கும் திராணியற்றவர்களாகவே காணப்பட்டார்கள்.
இந்த சந்தர்ப்பத்தினை முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவும், தற்போதய அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவருமான றிசாட் பதியுத்தீனும், தற்போதைய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வும் சரியாகப் பயன்படுத்தினர்.
எனவே இவர்களால் பலதரப்பட்ட அபிவிருத்தி வேலைகள் மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்கப்பட்ட போதும் முஸ்லிம் காங்கிரசின் அரசியல்வாதிகளால் விரல்விட்டு எண்ணக் கூடிய அபிவிருத்தி வேலைகள் மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இது ஒரு புறமிருக்க தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் தனிகாட்டு ராஜாக்களாக தங்களை புடம் போட்டுக் காட்டத் துடிக்கும் முஸ்லிம் காங்கிரசால் இனி அம்பாறை மாவட்டத்திற்கு என்ன விமோசனம் கிடைக்கப் போகின்றது என்பதுதான் தற்போது எழுந்துள்ள கேள்வியாகும். ஏனென்றால் இம்முறை இடம்பெற்ற தேர்தலில் மு.கா மூன்று தொகுதிகளிலும் வரலாற்று வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள போதும் மிகப்பெரும் சவாலாக அமைந்துள்ள கரையோர மாவட்டக் கோரிக்கை மற்றும் சாய்ந்தமருது பிரதேச சபை மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு போன்ற மிக முக்கிய பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டிய கடைப்பாட்டில் இருக்கின்றது.
இவையெல்லாம் தற்போது தங்களுக்கு கிடைத்துள்ள அரசியல் அதிகாரத்தின் மூலமாக மிக இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடியதொன்றாக காணப்பட்டாலும் இனி அதாஉல்லா தடுக்கின்றார் என்று கூற முடியாத தொன்றாகும். எனவே இந்த விடயத்தினையும் சேர்த்து அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் கிராமங்களின் வாழ்வாதாரங்களை அபிவிருத்தி செய்து கொடுப்பது, அம்மக்களுக்குத்தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதும் முஸ்லிம் காங்கிரசிற்கு மட்டும் கடமையானதொன்றாக மாறிவிட்டது! இனி கைகளில் அதிகாரங்கள் கிடைத்ததன் பிறகும் அதாஉல்லா தடுக்கின்றார் என்று கூற முடியாது!
இனித்தான் எதிர்வரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில் முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகள் பல்வேறு சவால்களை சந்திக்கப் போகின்றன. இதிலும் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே பலத்த போட்டி நிலவக்கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
ஏனென்றால் இம்முறை இடம்பெற்ற தேர்தலில் மு.கா தவிர இவ்விரு காங்கிரஸ் காரர்களும் தோல்வியைத்தளுவிக் கொண்டாலும் இதில் நிச்சயம் ஒரு பாடத்தினை அந்தந்த கட்சிகளின் தலைமைகள் கற்றுக்கொள்ள தவறியிருக்க மாட்டார்கள்.
இது ஒரு புறமிருக்க சில வேளைகளில் மு.கா வினை வீழ்த்த ஐ.தே.கட்சி யுடன், முன்னாள் அமைச்சர் அதாஉல்லா மற்றும் அமைச்சர் றிசாட் பதியுத்தீன் போன்றோர்கள் ஒரு கூட்டு ஒப்பந்தத்தினை செய்து எதிர்வரும் தேர்தல்களில் கூட்டாக இயங்குவதற்கான திரைமறை காய்நகர்த்தல்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அறிய முடிகின்றது.
இதேவேளை தேர்தலில் தோல்வியுற்ற முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் மௌனம் மறுபக்கத்தில் வியப்பினை ஏற்படுத்தியிருந்தாலும், தேசியப்பட்டியல் விடயத்தில் அவர் அக்கறை செலுத்தாமல் விட்டது பரவலாக வியப்பினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
எனவே இந்த இடத்தில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவிற்கு அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அதிகாரம் ஒன்று வழங்கப்படுமா ? என்பதும் பொது மக்கள் மத்தியில் வேர்விடத்துவன்கியுள்ள கேள்விக் கணைகளாகும். ஏனென்றால் கடந்த காலங்களில் ஐ.ம.சு. கட்சியில் மிகவும் செல்வாக்கு படைத்தவர்கள் வரிசையில் அதாஉல்லாவிற்கும் மிக முக்கிய பங்குண்டு எனலாம்.
எனவே கிடைத்த ஒரு நல்ல சந்தர்ப்பத்தினை யார் யார் பயன்படுத்தப் போகிறார்கள் அல்லது யார் யார் இதில் பராமுகமாய் இருக்கப் போகின்றார்கள் என்பதனை சற்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எனவே “அதாஉல்லா எங்களை ஒன்றும் செய்ய விடுகின்றார் இல்லை” என்கின்ற போலிக்கோஷங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பழிவாங்கல் இல்லாத அரசியல் கலாச்சாரத்தின் மூலம் நிலையான அபிவிருத்தி நடவடிக்கைகளினை வழங்கி மக்களின் துயர் துடைக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்!