من تشبّه بقوم فهو منهم
எவர் ஒரு கூட்டத்தைப் போல் நடக்கிறாரோ அவர் அக்கூட்டத்தைச் சேர்ந்தவராவார். (அபூதாவூத் 3512)
இஸ்லாம் மிகவும் தனித்துவமானது.அதற்கென்று தனித்துவக் கோட்பாடுகளும்,தனித்துவக் கலாச்சாரமும்,தனித்துவ வரலாறும் உண்டு.காபிர்களின் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதற்கும், அவர்களுடைய வணக்கவழிபாடுகளைப் பின்பற்றுவதற்கும் முஸ்லீம்களுக்கு எந்தவிதத் தேவையும் கிடையாது.மனிதனால் இயற்றப்பட்ட கலாச்சாரங்களையும் கோட்பாடுகளையும் விட இறைவனால் இறக்கி வைக்கப்பட்ட கொள்கைகளும், கோட்பாடுகளும் எத்தனையோ மேலானவை என்பதுதான் அதற்கான காரணம்.
காபிர்களைப் பின்பற்றுவதற்கு எதிராக இஸ்லாம் மிகவும் கடுமையான எச்சரிக்கைகளைச் செய்கிறது.நபிகளார் கூறினார்கள்,
எம்மத்தவிர எவர் வேறொருவரைப் போல் நடக்கிறாரோ அவர் எம்மைச் சேர்ந்தவர் அல்ல.(திர்மிதி 7/335).
நபிகளார் மேலும் கூறினார்கள்,
எவர் ஒரு கூட்டத்தைப் போல் நடக்கிறாரோ அவர் அக்கூட்டத்தைச் சேர்ந்தவராவார். (அபூதாவூத் 3512)
எமது முஸ்லீம் அரசியல்வாதிகளின் ஆன்மீகப்பற்றை நினைக்கும்போது ஆத்மா மெய்சிலுர்த்துப்போகிறது.காபிர்கள் கூட இவர்கள் முஸ்லீம்கள்,இவர்களுக்கு கும்பிடுவது சரியல்ல என நினைத்து கைலாகு கொடுக்கமுனையும் போது “இல்லை இல்லை நாங்கள் எப்படிக் குப்பிடுகிறோம் பாருங்கள்’ என்று கைகளை அள்ளிக்கூப்பி காபிர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகிறார்கள் எங்கள் தலைவர்கள்.என்னே எம்தலைவர்களின் ஆன்மீகப்பற்று.
கை எடுத்துக் கும்பிடுவது காபிர்களின் கலாச்சாரத்திற்குள் வருவது அல்ல.அவர்களின் வணங்கங்களுக்குள் வருவது.காபிர்களின் கலாச்சாரத்தையே பின்பற்றுவதை வெறுக்கும் இஸ்லாம் அவர்களின் வழிபாடுகளைப் பின்பற்றுவதை எப்படி சகித்துக்கொள்ளும்?
மிகவும் சாதரணமான விடயங்களில் கூட காபிர்களுக்கு மாறாகச் செய்யச் சொல்கிறது இஸ்லாம்.யூதர்கள் மீசையையும் தாடியையும் வைக்கிறார்கள் நீங்கள் மீசையைக் கத்தரித்து தாடியை வளருங்கள் என்ற நபிகளாரின் கூற்றைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.ஒரு முஸ்லிம் முகத்தில் வைக்கும் பெறுமதி இல்லாத மயிரில் கூட காபிர்களோடு வேறுபட்டு நிற்கச்சொல்கிறது எங்கள் மார்க்கம் என்றால் குனிந்து கும்பிடு போடும் எமது தலைவர்களை இஸ்லாம் எப்படி நோக்கும் என்று கூறத்தேவையில்லை.
நபிகளார் கூறினார்கள்”யூதர்களும் கிறுஸ்தவர்களும் அவர்களின் தலைகளுக்கு சாயம் பூசுவதில்லை.ஆகவே அவர்கள் செய்வதற்கு எதிராக நீங்கள் செய்யுங்கள்(அதாவது நீங்கள் தலைகளுக்கு சாயம் பூசுங்கள்)” புகாரி 61496
முடியில் சாயம் பூசுவதில் கூட காபிர்களுக்கு மாறு செய்யச் சொல்லும் எமது மார்க்கம் எங்கே?காபிர்களை வழிபாட்டைக் கச்சிதமாகச் செய்யும் எம் அரசியல் தலைவர்கள் எங்கே?
நபிகளார் கூறினார்கள், “யூதர்களில் இருந்து நீங்கள் வேறுபட்டு நடங்கள்.அவர்கள் தொழும்போது சப்பாத்தோ,காலணியோ அணிவதில்லை.(நீங்கள் அணிந்து தொழுங்கள்)” அபூதாவூத் 1/427
செருப்பு அணிவதிலேயே காபிர்களுக்கு மாறாகச் செய்யும் எமது மார்க்கம் எங்கே? மணிக்கணக்காய் மண்டியிட்டுக் கும்பிடும் எமது மகோன்னதத் தலைவர்கள் எங்கே?
அல்லாஹ் பிர்அவ்னைத் தோற்கடித்து மூஸாவைக்காப்பாற்றிய ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பு பிடித்ததை அறிந்த எம்பெருமானார் உங்களை விட மூஸா எங்களுக்கு நெருக்கமானவர் எனக்கூறி யூதர்கள் ஒருநாள் நோன்பு பிடிப்பதால் அவர்களிடமிருந்து வேறுபட்டு நடக்க எண்ணி நீங்கள் இரண்டு நாள்கள் நோன்பு பிடியுங்கள் என்று கட்டளை இட்டார்கள்.உங்களைப் போல் நாங்களும் ஒரு வகையான வழிபாட்டைத் தான் பின்பற்றுகிறோம் என்று யூதர்கள் கூறாதிருப்பதற்காக நபிகளார் வழிபாட்டிலும் கூட அவர்களைவிட்டு வேறுபட்டு நிற்கச் சொன்னார்கள்.மலர்த் தட்டோடும்,பழக்கூடையோடும்,சிவிரி பார்சலோடும் அவர்களுக்கு முன் குனிந்து கூப்பும் எம் தலைவர்கள் எங்கே?
இவ்வாறான சின்னஞ்சிறு விடயங்களில் காபிர்களைப் பின்பற்றுவதில் இஸ்லாம் கடுமையாக நடந்து கொள்கிறது என்றால் அவர்களின் வணங்க வணக்க வழிபாடுகளைப் பின்பற்றும் ஒருவரின் நிலையை இஸ்லாம் எப்படி நோக்கும் என நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கும்பிடுதல் என்பது சுஜூது செய்வதற்கு நிகரான காபிர்களின் முக்கியமான ஒரு வழிபாட்டு முறை.இதனை ஒரு முஸ்லிம் மிகவும் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்வது இஸ்லாத்தில் எத்தனை பாரதூரமானதும் அல்லாஹ்விடத்தில் எத்தனை பாரமானதும் என்று இவர்களுக்குப் புரியவில்லை.
தங்களின் சுயலாபங்களுக்காகவும்,பெரும்பான்மை அரசியல் வாதிகளைத் திருப்திப்படுத்துவதற்காகவும்,அவர்களின் உச்சிகளைக் குளிர வைப்பதற்காகவும் அல்லாஹ்வும் அவனது தூதரும் கடுமையாகத் தடுத்த ஒரு விடயத்தை ஏதோ சர்வ சாதாரணமாக செய்து கொண்டிருக்கும் இவர்களால் எமது சமூகத்திற்கு என்ன விடிவைக் கொண்டுவந்து தரமுடியும்.
அரசியலுக்காக அல்லாஹ்வையே அள்ளி எறியும் இவர்களுக்கு நாமும் நமது சமுகமும் எம்மாத்திரம்?
அதாவுல்லாஹ் ஏதோ கொஞ்சம் சங்கடப்பட்டுக் கும்புடுகிறார். ஹக்கீமுக்கோ கும்பிடுவது சர்வ சாதாரணமாக வருகிறது.ரிஷாட் தனது சேட்டையே சிலைக்காகக் கழற்றத் துணிந்துவிட்டார். இப்படிப்பட்ட அரசியல்வாதிகளிடத்தில் எமது அரசியல் எதிர்காலத்தை அர்ப்பணிப்பது எப்படி?
இறைவனிடத்தில் இத்தனை பாரதூரமான விடயத்தை எவ்வளவு இலகுவாகச் செய்கிறார்கள்.ஒரு ஹாமுதுருக்கு குனிந்து கும்பிடும் ஒரு காபிருக்கும்,அதே ஹாமுதுருவை குனிந்து கும்மிடும் ஒரு முஸ்லீமுக்கும் எந்த அடிப்படையில் வித்தியாசம் காண்பது?
அரசியலுக்காக தனது தீனை காலால் மிதித்து, வீசி, குப்பைத்தொட்டியில் எறியும் அந்த அரசியல் வாதிகள் எம்முன் மேடையில் பேசும் அரபு வார்த்தைகளுக்கும்,அவர்களின் செயலுக்கும் இடையில் எத்தனை வேறுபாடுகள் இருக்கிறது.
இவர்கள் இப்படித்தான் என்று தெரிந்ததன் பின்னரும் மீண்டும்,மீண்டும் இவர்களைத் தெரிவுசெய்யும் ஒவ்வொருவரும் அவர்களின் பாவத்தில் பங்குதாரிகளாகப் போவார்களோ என்ற பயம் வருகிறது.அல்லாஹ் எங்கள் சமூகத்தை இவர்களிடம் இருந்து காப்பானாக.
றாசி முஹம்மத்