(வீடியோ) கட்சியின் தலைமை தன்னை தேசியப்படியல் மூலம் பாராளுமன்றம் அனுப்புவதற்கு விரும்புவதாக எனக்கு அறியக் கிடைக்கின்றது : ரியால் !

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்

அஹமட் இர்ஸாட்:-படித்த மகன் என்ற வகையிலும் புதுமுக வேட்பாளர் என்ற ரீதியிலும் கல்குடா பிரதேசத்தை மையப்படுத்தி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நீங்கள் துரதிஸ்ட்டவசமாக பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பினை இழந்தீர்கள். அந்த அனுபவத்தினை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

றியால்:- அனுபவம் என்று பார்க்கின்ற பொழுது கணக்காளராக வீடு, குடும்பம் என வாழ்ந்து கொண்டிருந்த நான் இத்தேர்தலில் களமிறங்கிய பொழுது பலதரப்பட்ட அனுபவங்களை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. அதிலே மக்களின் நேசிப்பு, அவர்கள் என்மீது வைத்திருந்த நம்பிக்கை, அன்பு போன்ற அனுபவங்கள் ஒரு புறமிருக்க பலர் துரோகங்களை இழைக்க கூடியவர்களாக இருந்தமையும் ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது. எது எவ்வாறயினும் எனக்கு வாக்களித்த மக்களுக்கு இப்பேட்டியின் மூலம் நன்றியினை தெரிவித்துக் கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். 

அஹமட் இர்ஸாட்:- இறுதிக் கட்ட தேர்தல் காலத்தில் கல்குடாவில் இடம்பெற்ற அமீன் எனப்படுபவரின் கொலை சம்பந்தமாக உங்கள் மீதும் உங்களுடைய கட்சியின் தலைமையின் மீதும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்து. ஆனால் அக்கொலைக்கான காரணம் வாழைச்சேனை பொலிசாரினால் துப்பரியப்பட்டு விட்டதாக அறியக்கிடைக்கின்றது. எனவே நீங்கள் தற்பொழுது அக்குற்றச்சாட்டினை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

றியால்:- தேர்தல்கால வன்முறைகளைப் பற்றி பேசுவது சிறந்த விடயமாக எனக்கு தென்படவில்லை. இருந்தும் அதற்கு முன்னால் தேர்தலில் எமது மாவட்டத்தில் வெற்றி பெற்ற அமீர் அலி, அலிசாஹிர் மெளலான, மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைக்கின்றேன். அமீன் எனப்படுபவரின் கொலையினை யார் செய்தார்கள், எதற்காக செய்தார்கள் என்பதினை கல்குடா மக்கள் நன்கறிந்தவர்களாகவே இருந்தார்கள். என்மீதும் கட்சியின் தலைமை மீதும் குற்றம் சுமர்த்திய அமீர் அலி கூட நன்கறிந்தவராக இருந்தார். அரசியல் இலாபமீட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக அப்பட்டமான முறையில் குற்றச்சாட்டினை என் மீதும் தலைமை மீதும் சுமத்தியிருந்தனர். இது சம்பந்தமாக அமைச்சுப் பொறுபுக்களை பொறுப்பேற்றதற்கு பிற்பாடு எமது கட்சியின் தலைமையானது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்திருக்கின்றார். அதில் நானும் இணைந்து கொள்வதாகவே ஏற்றுக்கொண்டுள்ளேன். ஆகவே நீதிமன்றத்தில் அமீர் அலியினை நாங்கள் சந்திப்போம்.

அஹமட் இர்ஸாட்:- தேர்தல்காலத்தில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இடம்பெறுவது சர்வசாதாரனமான விடயமாகும். அந்த வகையில் நீங்களும் தேர்தல் காலத்தில் இடம்பெற்ற வன்முறைகள் சம்பந்தமாக அசைபோட்டுக் கொள்வதானது சிறந்த விடயமல்ல எனக்குறிப்பிட்டீர்கள். அவ்வாறென்றால் ஏன் நீங்கள் அமீர் அலிக்கு எதிராக வழக்கு தாக்கள் செய்ய வேண்டும்?

றியால்:- வன்முறைகள் இடம் பெறக்கூடாது என்ற நிலையில்தான் எனது முதல் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தினை ஆரம்பித்தேன். அத்தோடு யாருக்கு யார் வாக்களிக்க வேண்டும் என்பது அவரவரினுடைய தனிப்பட்ட விடயமாகும். அதில் யாரும் பலாத்காரம் செய்ய முடியாது, செய்யவும் கூடாது என எனது தரப்பினையும் எதிர்தரப்பினையும் கேட்டிருந்தேன். தேர்தல்கால வன்முறைகளை மீண்டும் கிளறக்கூடாது என்றே இப்பொழுதும் நினைக்கின்றேன். ஆனால் கொலைக்குற்றச்சாட்டு என்பது பாரிய குற்றச்சாட்டாகும். அதுவும் சமூகத்தின் தலைவன் என தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் தலைவனானவன் பொறுப்பற்ற ஒரு குற்றச்சாட்டினை இன்னொருவர் மீது மீண்டும் சுமத்தக் கூடாது என்பதற்காகவே குறிப்பிட்ட அரசியல்வாதி நீதிமன்றம் சென்று வர வேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம். இது கட்சியின் இறுதி முடிவாகவும் உள்ளது.

அஹமட் இர்ஸாட்:- இம்முறையும் கல்குடா மக்கள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு வாக்களித்து பிரதிநிதித்துவமானது சகோதர பிரதேசத்திற்கு சென்றுள்ளது. ஆகவே கட்சியின் தலைமையினால் தேசியப்பட்டியல் பிரதி நிதித்துவம் கல்குடாவிற்கு வழங்கப்படுமா?

றியால்:- தேசியப்பட்டியல் பரவலாக பேசப்படும் விடயமாகவே தற்காலத்தில் காணபடுக்கின்றது. நான் கட்சியின் தலைமையோடு தேர்தல் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பொழுது நான் தோற்றால் எனக்கு தேசியப்பட்டியல் தரவேண்டும் என்ற எந்த ஒப்பந்தங்களும் இருக்க வில்லை. கட்சிக்கு கிடைத்திருக்கின்ற இரண்டு தேசியப்பட்டியல் சம்பந்தமாகவும் கட்சியின் தலைமைக்கு அதிகமான பொறுப்புக்கள் இருக்கின்றது. இருந்தும் படித்த ஒருவர் நாடலாவிய ரீதியில் கட்சிக்கு துரோகமிழைக்காத வகையில் பாராளுமன்ற கதிரையில் தேசியப்பட்டியல் மூலம் உட்கார வேண்டும் என்பதற்காக தன்னை தேசியப்படியல் மூலம் பாராளுமன்றம் அனுப்புவதற்கு கட்சியின் தலைமை விரும்புவதாக எனக்கு அறியக் கிடைக்கின்றது.

அஹமட் இர்ஸாட்:- கட்சியின் தலைமை ரவூப் ஹக்கீமுக்கு  நீங்கள் மிகவும் விசுவாசமானவர் என பரவலாக பேசப்படுக்கின்றதே?

றியால்:- கட்சியின் தலைமை என்னை கட்சியில் இணைத்து கொள்வதற்கு முன் எனதூரிலும் எனது வேலைத்தளத்திலும் துப்பறிந்து விட்டே என்னை கட்சியில் இணைதுக்கொடுள்ளதாக எனக்கு அறியக் கிடைத்தது. அந்த வகையில் என்மீது சம்பந்தப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் நல்லவைகளாகவே அவருக்கு கிடைத்திருக்கின்றன. அல்ஹம்துலில்லஹ். ஆகவே நான் ஒருபோதும் கட்சிக்கோ நான் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகத்திற்கோ நம்ப்பிக்கை துரோகம் இழைக்க மாட்டேன் என்மீது என கட்சியின் தலைமைக்கு நம்பிக்கை இருக்கின்றது. 

அஹமட் இர்ஸாட்:- தேர்தலில் உங்களுடைய இலக்கு பாராளுமன்றமாக இருந்தாலும் துரதிஸ்டவசமாக அதனை நீங்கள் இழக்க நேரிட்டது. இருந்தும் உங்களுக்கு கிடைத்த வாக்குகளை வைத்து நீங்கள் திருப்தி அடைக்கின்றீர்களா?

றியால்:- தேர்தலுக்கு முன்னர் கிடைத்த தரவுகளின்படி முஸ்லிம் காங்கிரசுக்கும் ஹிஸ்புல்லாவிற்குமே ஆசனங்களை வென்றெடுக்கக் கூடிய வாய்ப்புக்கள் இருந்தன. முஸ்லிம் காங்கிரஸ் மூலம் எனது ஆசனத்தை வென்றெடுப்பதற்காக கல்குடாவில் பதிமூவாயிரம் வாக்குகளை நான் எதிர்பார்த்தேன். அலிசாகிர் மெளலான அன்னளவாக பத்தாயிரம் வாக்குகளை பெறுவார் என்றே எனக்கு தரவுகள் தரப்பட்டிருந்தன. தேர்தல் முடிவுகளுக்கு பிற்பாடு எனக்கு தரப்பட்ட தரவுகள் பிழையாக அமைந்துவிட்டன. 

அஹமட் இர்ஸாட்:-உங்களுக்காக கல்குடாவில் வாக்களித்த ஒன்பதாயிரம் மக்களுகாகவும் எதிர்காலத்தில் எதனை செய்ய திட்டமிட்டுள்ளீர்கள்?

றியால்:- நான் அரசியலுக்கு வந்தது பெயருக்காகவோ, பட்டத்திற்காகவோ, புகழுக்காகவோ, அல்லது பணத்துக்காகவோ அல்ல என எனது தேர்தல் பிரச்சாரத்தில் கூறியிருந்தேன். கல்குடா மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சிறந்த அரசியல் சேவகனாக என்னை மாற்றிக்கொள்ளகூடிய சந்தர்ப்பம் கிடைக்கின்றது என நினைத்தே நான் கடந்த தேர்தலில் போட்டியிட்டேன். அந்த வகையில் அரசியலை நான் அரசியலாக பார்க்காமல் அதனை சமூக சேவையாகவும் வணக்கமாகவுமே பார்த்தேன். சமூக சேவை செய்வதற்கு எம்பி பதவி அல்லது பதினையாயிரம் வாக்குகள் கிடைக்க வேண்டும் என்பது பொருளல்ல. நான் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுத்திகளை நிறைவேற்றும் பொருட்டு பல முயற்சிகளை எமது சமூகத்திற்காக எடுக்க தீர்மானித்து கட்சியின் தலைமையோடும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுடனும் கலந்தாலோசித்துள்ளேன்.

அஹமட் இர்ஸாட்:- கல்குடாவில் அடுத்த கட்ட அரசியல் நகர்வினை எவ்வாறு மேற்கொள்ள தீர்மானித்துள்ளீர்கள்?

றியால்:- அரசியல் நகர்வுகளை எல்லாம் வல்ல அல்லாஹ்தான் நன்கறிந்தவனாக இருக்கின்றான். மக்களின் வேண்டுகோள் அதிகமாக இருந்ததன் காரணத்தினாலும், அரசியல் தலைமைகளின் வேண்டுகோளும் அழுத்தங்களும் அதிகமாக இருந்ததன் காரணமாகவே நான் அரசியலுக்ககுள் நுழைந்தேன். எதிர்கால அரசியல் பயணங்கள் எவ்வாறு அமையப்போகின்றது என என்னால் இப்பொழுது கூற முடியாது. ஆனால் சமூகத்திற்கு நன்மைகள் செய்ய வேண்டும் என்ற ரீதியில் எனது பணியானது கல்குடா மக்களுக்கு நிச்சயமாக இருக்கும் என்பதனை நான் கூறிக்கொள்ள விரும்புக்கின்றேன். அது சாதாரன அரசியல் வாதியினாலோ அல்லது பாராளுமன்ற உறுப்பினராலேயோ செய்ய முடியாத திட்டங்களாகவே காணப்படும்.

அஹமட் இர்ஸாட்:-வருக்கின்ற பிரதேச சபை மாகான சபை தேர்தல்கள் உங்களின் மேற்பார்வையின் கீழா இடம்பெறுமா அல்லது நீங்கள் மாகான சபை தேர்தலில் போட்டியிட திட்ட்டமிட்டுள்ளீர்களா?

றியால்:- இதனை மிகவும் கஸ்டமான கேள்வியாகவே நான் பார்க்கின்றேன். நான் அரசியலுக்குள் வந்ததன் நோக்கங்களில் முக்கியமானது கல்குடா பிரதேசத்திலிருந்து படித்தவர்கள், அரசியலுக்கு தகுதியானவர்கள் பயமில்லாமல் சமூகத்தின் அரசியல் தலையினை பொறுப்பேற்க முன்வர வேண்டும் என்பதேயகும். அதனை நான் கல்குடாவில் உறுவாக்கியுள்ளேன் என்ற மகிச்சி எனக்கிருக்கின்றது. வருக்கின்ற தேர்தல்களில் யார் களமிறங்குவது என்பது மசூரா அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படும். ஆகவே நான் களமிறக்குவதா அல்லது இல்லையா என்பதனை இப்பொழுது கூறமுடியாது.

அஹமட் இர்ஸாட்:- நீங்கள் கல்குடாவில் பதிமூவாயிரம் வாக்குகளை எதிர்பார்த்ததாகவும் ஒன்பதாயிரம் கிடைத்ததாகவுமே குறிப்பிட்டீர்கள். ஆகவே நான்காயிரம் வாக்குகள் கிடைக்காமைக்கான காரணம் என்ன?

றியால்:- இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதாவது நான் அரசியலுக்கு புதுமையானவன், அனுபவமில்லாதவன். எனக்கு தேர்தல் செய்வதற்கு கிடைத்த காலம் மிகக் குறைவாக இருந்தமை, பல இடங்களுக்கும் சென்று நான் தேர்தல் பிரச்சரங்களை மேற்கொள்ளாமையும் அதற்கு கால அவகாசம் கிடைக்காமையும், நான் குறிப்பிட்ட நண்பர்கள் வட்டம் குடும்பம் என தேர்தலுக்கு முன் வாழ்ந்தவன் என்கின்ற விடயம், மக்களுக்கு நான் அறிமுகமற்றவனாக காணப்பட்டமை, அடுத்ததாக கூடிய பணத்தொகையினை நான் தேர்தலுக்காக செலவளிக்காமை, காசுகொடுத்து வாக்குகளை பெற்றுக்கொள்ளாமை, பல மதாங்களுக்கு முன்பு நான் தேர்தலில் குதிப்பேன் என ஆவலுடன் இருந்த பிரதேசத்தின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் நான் தேர்தலில் குதிக்கமாட்டேன் எனக்கருதி சகோதரர் அமீர் அலியின் பக்கம் இணைந்து கொண்டமையும் எனக்கு நான்காயிரம் வாக்குகள் குறைந்தமைக்கு முக்கிய காரணங்களாக பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

அஹமட் இர்ஸாட்:- எனது தோல்விக்கு தேர்தல் பிரச்சரம் செய்வதற்கு போதிய கால அவகாசம் கிடைக்காமைதான் காரணம் எனக்கூறும் நீங்கள் ஏன் இதனை ஒரு படித்தவராக இருந்தும் தேர்தலுக்கு முன் திட்டமிடவில்லை?

றியால்:- தன்னை மக்களுக்கு அறிமுகப்படுத்திக்கொள்ள ஒரு மாதகாலம் தராளமாக போதும் என நினைத்தேன். ஆனால் தேர்தலுக்கு ஒரு வாராம் இருக்கும் பொழுதுதான் நான் உணர்ந்து கொண்டேன் ஒருமாத கால தேர்தல் பிரச்சாரம் போதாதென்று. ஆகவே நான் எடுத்த முடிவானது எனது அரசியல் அனுபவமினையையே காட்டுக்கின்றது என நினைக்கின்றேன்.

அஹமட் இர்ஸாட்:- உங்களுடைய சொந்த ஊரானா மீராவோடை மக்கள் உங்களுக்களித்த வாக்குகள் உங்களுக்கு திருப்தி அளிக்கின்றதா?

றியால்:- மீராவோடை மக்கள் எனது இரத்தங்கள். அவர்கள் யாருக்கு வக்களிக்க வேண்டும் என்பது அவர்களுடைய ஜனநாயக உரிமையாகும். ஆனால் நான் பிறந்த சொந்த ஊர் என்ற ரீதியில் மீராவோடை மக்களிடமிருந்து எனக்கு கிடைத்த வாக்குகளை விடவும் அதிகமாக எதிர்பார்த்தேன். ஆனால் எதிர்க்கட்சியின் தேர்தல் பிரசார யுத்திகள் காரணமாகவும், எனக்கு ஆதரவளிக்க இருந்த முக்கியஸ்தர்கள் எதிர்க்கட்சியுடன் இணைந்து கொண்டமையினாலும், தேர்தல் அன்று ஏழை மக்களின் வாக்குகள் பணம் கொடுத்து வாங்கப்பட்டமையினாலும் நான் எதிர்பார்த்திருந்த மீராவோடை மக்களின் வாக்குகளில் சரிவேற்பட்டது. எதுவக இருந்தாலும் ஒட்டுமொத்த மீராவோடை மக்களும் உள்ளத்தால் என்மீது அன்பு செலுத்துபவர்களாகவே இருக்கின்றனர்.