போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச நீதிமன்ற விசாரணை தேவை : மாவை !

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச நீதிமன்ற விசாரணை தேவை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

Mavai-Senathirajah-TNA_3
அத்துடன் மீண்டும் ஒரு சர்வதேச விசாரணை இந்த விடயத்தில் அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை இந்த மாதத்தில் வெளியாகவுள்ளது. இதன் பின்னர் அந்த அறிக்கையை மையமாகக் கொண்டு வெளிநாட்டு நீதிபதிகளின் தலைமையிலான நீதித்துறை நடவடிக்கைகளே தேவையாக உள்ளன என்று மாவை சேனாதிராஜா சுட்டிக்காட்டியுள்ளார். 

இதேவேளை சர்வதேச நீதிமன்றம் தொடர்பான உரோம் உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திடவில்லை எனவும், எனவே இலங்கையில் இருந்து எவரையும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த முடியாது என்றும் ஏற்கனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மறுப்பு வௌியிட்டுள்ளார். 

எனினும் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை வெளியானதன் பின்னர் பிரதமரின் கருத்துக்கு பதிலளிக்கப்படும் என்று சேனாதிராஜா இந்த செவ்வியின் போது தெரிவித்துள்ளார்.