மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கத்தை மாற்றியமைக்க வேண்டும். அதன் பின்னர்தான் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழலாம் என்று முதன் முதல் எடுத்துரைத்தவராகவும் ஹஸன்அலியே திகழ்கின்றார் !

-இப்னு செய்யத் –

அரசியல் கட்சிகள் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்துள்ள போதிலும், மு.கா தமது தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரென்று இப்பத்தி எழுதும் வரைக்கும் இறுதி முடிவினை எடுக்கவில்லை.

யாருக்கு வழங்கப்படும் என்பது மூடு மந்திரமாகவே இருக்கின்றது. ஐ.தே.கவுடன் இணைந்து மு.கா போட்டியிட்டு, அக்கட்சியின் தேசியப் பட்டியில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொண்டது. ஐ.தே.கவின் தேசிய பட்டியலில் மு.காவைச் சேர்ந்த செயலாளர் எம்.ரி.ஹஸன்அலி, பிரதிச் செயலாளர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், ஹபீஸ் அப்துல் ரவூப், எம்.எஸ்.சல்மான் ஆகிய நான்கு பேர்கள் இடம்பெற்றிருந்தார்கள்.

இவர்களில ஹபீஸ் அப்துல் ரவூப் மற்றும் எம்.எஸ்.சல்மான் ஆகியோர்களை மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவு செய்துள்ளார். ஆயினும், இவர்களுக்கு இப்பதவி நம்பிக்கையின் அடிப்படையில் தற்காலிகமாகவே வழங்கப்பட்டுள்ளது. மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீம் கேட்டுக் கொள்ளும் வேளையில் இவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும்.

தேசியப் பட்டியல் உறுப்பினருக்கு போட்டி

மு.காவிற்கு கிடைக்கப் பெற்றுள்ள இரண்டு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக் கொள்வதற்கு பலர் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களில் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களும், கனிஸ்ட உறுப்பினர்களும் உள்ளார்கள். திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்ட எம்.எஸ்.தௌபீக் பொதுத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். இதனால், இம்மாவட்டத்தில் மு.காவின் பேர் சொல்வதற்கு பாராளுமன்ற உறுப்பினரில்லை. ஆதலால், தௌபீக்கை தேசிய பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராக்க வேண்டுமென்று திருகோணமலை மாவட்ட மு.காவின் ஆதரவாளர்கள் பலரும் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இதே போன்று வன்னி மாவட்டத்தில் போட்டியிட்ட முத்தலிபா பாறூக் தோல்வியடைந்துள்ளார். அவரை தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்குமாறு வன்னி மாவட்ட ஆதரவாளர்கள் மு.காவின் தலைமையை கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அம்பாரை மாவட்டத்தில் மு.காவின் 03 வேட்பாளர்களும் வெற்றி பெற்ற போதிலும், அட்டாளைச்சேனையை சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.நசீரை தேசிய பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அம்பாரை மாவட்டத்திற்கு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுமாக இருந்தால் அட்டாளைச்சேனைக்கு முன்னுரிமை அளிக்கப்படுமென்று ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.
மேலும், குருநாகல் மாவட்டத்திற்கு வழங்க வேண்டுமென்றும் கேட்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மு.காவுடன் இணைந்து போட்டியிட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் தங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கின்றது.
இதே வேளை, மு.காவின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன்அலியை தேசிய பட்டியிலில் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் செய்ய வேண்டுமென்றும் கேட்கப்படுகின்றது.

அத்தோடு, மு.காவின் பிரதிச் செயலாளர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பருக்கும் வழங்க வேண்டுமென்றும் பேசப்படுகின்றது.

இவ்வாறு மு.காவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரைப் பெற்றுக் கொள்வதற்கு பலத்த போட்டிகளும், கோரிக்கைகளும் முன் வைக்கப்படுகின்றன.

இதே வேளை, ஹஸன்அலிக்கு தேசிய பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கக் கூடாதென்று அம்பாரை மாவட்டத்தில் உள்ள மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர் கடும் எதிர்ப்பை காட்டிக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
யாருக்கு வழங்குவது பொருத்தம்
மு.காவிற்கு கிடைத்துள்ள இரண்டு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றை மு.காவின் செயலாளர் ஹஸன்அலிக்கு வழங்க வேண்டுமென்ற கோரிக்கை வலுப் பெற்றுக் கொண்டு வருவதனையும், அது பற்றிய செய்திகள் ஊடகங்களில் நாளாந்தம் வந்து கொண்டிருப்பதனையும் காண முடிகின்றது.

மு.காவின் செயலாளரை தேசிய பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருப்பர்கள் பின்வரும் காரணங்களை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

அதாவது, நாட்டில் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இனப்பிரச்சினைக்குரிய தீர்வுகளும் முன் வைக்கப்படவுள்ளன. இதனால், முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இதற்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளை தெளிவாக அறிந்து கொண்டவராகவும், அதற்காக குரல் கொடுத்தவராகவும், இனப்பிரச்சினைகளுக்குரிய தீர்வுகள் பற்றி பேச்சுவார்த்தைகளிலும், கலந்துரையாடல்களிலும், ஒஸ்லோ பேச்சுக்களிலும் பங்கு பற்றிய அனுபவத்தை கொண்டவராகவும், மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கத்தில் முஸ்லிம்களின் பிரச்சினைகளை பலத்த அச்சுறுத்தல்குளுக்கு மத்தியில் பேசியவராகவும், ஐ.நாவின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை அறிக்கையிட்டவராகவும், மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கத்தை மாற்றியமைக்க வேண்டும். அதன் பின்னர்தான் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழலாம் என்று முதன் முதல் எடுத்துரைத்தவராகவும் ஹஸன்அலியே திகழ்கின்றார். மேலும், மு.காவினை அஸ்ரப்பின் கொள்கையின் அடிப்படையில் கொண்டு செல்ல வேண்டுமென்று துடிக்கின்றவராகவும் விளங்குகின்றார். ஆதலால், ஹஸன்அலியை தேசிய பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க வேண்டியது அவசியமாகும் எனத் தெரிவிக்கின்றார்கள்.

இதே போன்றுதான் மு.காவின் பிரதிச் செயலாளர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பரை எடுத்துக் கொண்டால், அவர் சட்டத்தின் நுணுக்களை அறிந்தவர்.

ஹஸன்அலியைப் போன்று இனப்பிரச்சினை பேச்சுக்கள் பலவற்றில் கலந்து கொண்டவர். இவரும் தேசிய பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும். இவர்கள் இருவரையும் பாராளுமன்ற உறுப்பினராக்க வேண்டுமென்ற கோரிக்கையை பிரதேச ரீதியாக நோக்காது, தேசிய ரீதியாக நோக்க வேண்டும். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வுகளை காண்பதற்காக பேச்சுக்கள் இடம்பெறும் போது, ரவூப்; ஹக்கீமுடன் இவர்கள் இருவரும் இடம்பெறுவது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

நிந்தவூரில் பைசால் காசிம் வெற்றி பெற்றதற்காகவும், கல்முனையில் ஹரிஸ் வெற்றி பெற்றதற்காகவும் இவர்கள் இருவரையும் இக்காலகட்டத்தில் ஒதுக்க முடியாது. மு.காவில் உள்ள ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த காலங்களில் முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசாது இருந்துள்ளார். அபிவிருத்திகளை மாத்திரமே விரும்பினார்கள். அதற்காக மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கத்தில் விருந்தாளிகளைப் போன்று இருந்தார்கள்.

இத்தகையவர்களை பேச்சுவார்த்தைகளுக்கு அனுப்பி முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண முடியாது.

மு.காவின் செயலாளர் மற்றும் பிரதிச் செயலாளர் ஆகிய இருவரும் இனப்பிரச்சினைக்கான தீர்வுப் பேச்சுவார்த்தைகளில் பங்குகொள்ள வேண்டுமென்றால், அதற்கு பாராளுமன்ற உறுப்பினராகத்தான் இருக்க வேண்டுமென்பதல்ல. கட்சியின் பிரதிநிதிகளாகவும் இவர்கள் பேச்சுவார்த்தைகளில் பங்கு கொள்ளலாம் தானே என்று கேட்கலாம். ஆனால், பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து கொண்டு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் போது, அவர்களுக்குரிய பெறுமதி கூடியதாக இருக்கும். இதனால்தான் இவர்களை தேசிய பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்க வேண்டுமென்று கேட்கப்படுகின்றது.

தேசிய பட்டியலில் இவர்கள் இருவரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டமை மு.காவின் உயர்பீடத்தின் முடிவாக இருக்க வேண்டும். அல்லது மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீமின் முடிவாக இருக்க வேண்டும். இதில் எதுவாக இருந்தாலும், இவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்ட போது, அதற்கு கட்சியின் ஆதரவாளர்களிடையே எதிர்ப்புக்கள் ஏற்படவில்லை. இதனடிப்படையில் இவர்கள் இருவரையும் மு.காவின் பெரும்பான்மையான ஆதரவாளர்கள் ஏற்றுள்ளார்கள். ஆனால், தேசிய பட்டியலில் இடம்பெறாதவர்களும், தேர்தலில் தோற்றவர்களும் தங்களுக்கு தேசிய பட்டியலில் வாய்ப்பு வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருப்பதும், அதற்கு மு.காவின் தலைமை மௌனமாக இருப்பதும், புதிய வாக்குறுதிகளும்தான் தேசிய பட்டியல் விவகாரத்தை பூதாகாரமாக்கிக் கொண்டிருக்கின்றது.

தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவர்கள்தான் என்று தீர்மானிக்கப்;பட்டதன் பின்னர் மேற்படி இரண்டு பேருக்கும தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளதென்றால், ஹஸன்அலிக்கும், நிஸாம் காரியப்பருக்கும் வழங்கப்படாது இருப்பது எதற்காக?

இவர்களுக்கு தேசிய பட்டியிலில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவதில்லை என்றால், எதற்காக இவர்களின் பெயர்களை குறிப்பிட வேண்டும். யாருக்கு வழங்க வேண்டுமோ அவர்களின் பெயர்களை குறிப்பிட்டிருக்க வேண்டும். இவர்கள் இரண்டு பேர்களின் பெயரையும் குறிப்பிட்டதன் பின்னர், இவர்களுக்கு தேசிய பட்டியலில் வழங்குவதில்லை என்று மாற்றுத் தீர்மானங்களை கட்சி எடுத்துள்ளதா? தலைவர் ரவூப் ஹக்கீம்தான் எடுத்துள்ளாரா? எல்லாமே மூடு மந்திரமாகவே இருக்கின்றன.

நம்பிக்கை இழப்பு

தற்போது தேசிய பட்டியலில் நியமிக்கப்பட்டுள்ள இரண்டு பேர்களும் பின்னர் இராஜினாமாச் செய்ய வேண்டுமென்று, இவர்களின் பெயர்கள் குறிப்பிடும் போது தெரிவிக்கப்பட்டதா? இவர்களுக்கு தெரிவிக்கப்பட்டதெனில், எதற்காக ஹஸன்அலிக்கும், நிஸாம் காரியப்பருக்கும் இச்செய்தி தெரிவிக்கப்படவில்லை.

யாருக்குமே இத்தகையதொரு நிபந்தனை தெரிவிக்கப்படவில்லை என்று வைத்துக் கொண்டால், மு.காவின் செயலாளராக உள்ள ஹஸன்அலியும், பிரதிச் செயலாளராக உள்ள நிஸாம் காரியப்பரும் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதன் பின்னர் தலைவர் ரவூப் ஹக்கீம் இவர்களை பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமாச் செய்யுமாறு கேட்டால், இவர்கள் இராஜினாமாச் செய்யமாட்டார்களா? இராஜினாமாச் செய்யமாட்;டார்கள் என்று ரவூப் ஹக்கீம் கருதி இருப்பராயின், நம்பிக்கை இல்லாத இரண்டு பேருக்கு எவ்வாறு கட்சியிலுள்ள முக்கிய பதவிகளை வழங்க முடியும். ஒரு கட்சியின் செயலாளர் பதவிதான் உயிர் நாடி. அத்தகைய பதவியை வைத்துள்ளவர்களிடம் ரவூப் ஹக்கீம் நம்பிக்கை வைக்காதிருந்தமை எதற்காக?

அத்தோடு, கட்சியின் முக்கிய பதவிகள் உள்ள இரண்டு பேர்களிடம் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தற்காலிகமாக வழங்கவதற்கு தலைவர் ரவூப் ஹக்கீம் தயக்கம் காட்டியிருப்பதன் ஊடாக இவர்கள் கட்சிக்கும், தலைமைக்கும் விசுவாசமற்றவர்கள் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை பெற்றுக் கொண்டதன் பின்னர் இராஜினாமாச் செய்யமாட்டார்கள் என்று கருதவும் முடியுமல்லவா? இவர்கள் கட்சிக்கும், தலைமைக்கும் விசுவாசமற்றவர்கள் என்றால் உடனடியாக இவர்களிடம் உள்ள பதவிகள் பறிக்கப்பட வேண்டும். விசுவாசமானவர்கள் என்றால், தேசிய பட்டியல் விவகாரத்தை மூடி திகில் திரைப்படமாக்குவது எதற்காக?

முக்கிய பதவிகளில் உள்ளவர்களை தேசிய பட்டியலில் குறிப்பிட்டு, அவர்களுக்கு தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக வழங்குவதற்கு கட்சியின் தலைமை காட்டியுள்ள தயக்கம் ஹஸன்அலிக்கும், நிஸாம் காரியப்பருக்கும் கௌரவக் குறைச்சலை ஏற்படுத்தியிருப்பதாக அவர்களின் நேசர்கள் கூறுகின்றார்கள். அவர்கள் இரண்டு விதமான கௌரவக் குறைச்சலை சுட்டிக் காட்டுகின்றார்கள். ஓன்று அவர்களின் பெயர்களை போட்டதன் பின்னர் நியமனம் செய்யாது வேறு நபர்களை பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமனம் செய்தது. இரண்டு அவர்களிடம் நம்பிக்கை வைக்காமை.

இதனால், கட்சிக்கு நம்பிக்கைக்குரியவர்கள் என்று ஆதரவாளர்களினால் கருதப்பட்டுக் கொண்டிருப்பவர்களை நம்பிக்கையீனமானவர்கள் என்று காட்டப்பட்டுள்ளது.

இவர்களிடம் தற்காலிகமாக தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை வழங்கியதன் பின்னர் பதவிகளை இராஜினாமாச் செய்யுமாறு கேட்டால் அவர்கள் அதனைக் கட்டாயம் செய்வார்கள். இதனால், அவர்களுக்கு மக்கள் மத்தியில் உள்ள நன்மதிப்பு இன்னும் அதிகரித்திருக்கும். ஆனால், மு.காவின் முடிவு இவர்களுக்கு மக்கள் மத்தியிலுள்ள நன்மதிப்பை குறைப்பதற்கு எடுக்கப்பட்டதொரு நடவடிக்கையாகவே இவர்களினால் கருதப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

கொள்கை அடிப்படையில் நியமிக்க வேண்டும்
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து பேசும் போது கொள்கை ரீதியில் முரண்பட்டுக் கொள்ளாதவர்கள், பதவிக்காக விலை போகாதவர்கள் அவசியமாகும். ஒரு சில கட்சிகள் தங்களது கட்சியின் கொள்கைக்கு முரணாக இருப்பார்கள் என்று கருதியவர்களுககு தேசிய பட்டியலில் இடங்கொடுக்கவில்லை.

அதன்படி இவர்கள் இருவரும் கட்சியின் கொள்கையில் பிடிப்புள்ளவர்கள். இன்று மு.கா பல இடங்களில் தேய்வடைந்துள்ளது. இதற்கு காரணம் கட்சியின் கொள்கையில் ஏற்பட்டுள்ள தளர்வாகும். ஆதலால், கொள்கை பிடிப்புள்ளவர்களை புறந்தள்ளும் போது மு.கா இன்னும் தேய்வுகளை மட்டுமல்ல, உடைவுகளையும் சந்திக்கலாம்.

மு.காவின் நோக்கத்தை அடையும் காலம்

மு.காவின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப் மு.கா ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக பல முன்னெடுப்புக்களை எடுத்துக் கொண்டிருக்கும் போது, அவர் திடீர் மரணத்திற்குள்ளானார்.

இதன் பின்னர் கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள், தலைமைத்துவப் போட்டிகள் காரணமாக மு.கா பிளவுகளை சந்தித்தது. மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிகம் பேர் கட்சியின் கட்டுப்பாட்டையும் மீறி ஆளுந்தரப்பின் உத்தரவுக்கு ஏற்ப செயற்பட்டார்கள். இதனால், ரவூப் ஹக்கீம் கட்சியை காப்பாற்ற வேண்டுமென்று கோடு, கச்சேரிகளுக்கு ஏறி இறங்கினார். இச்சந்தர்ப்பத்தில் ஹஸன்அலியும் கட்சியை காப்பாற்ற எடுத்துக் கொண்ட முயற்சிகள் ஏராளமாகும். மட்டுமல்லாது நிஸாம் காரியப்பரும் கட்சிக்காக பல வழக்குகளில் வாதாடியுள்ளார்.
மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கத்தில் மு.கா பங்காளி என்று நாமம் சூட்டிக் கொண்டாலும், அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டாலும், மு.காவை கூடவே வைத்துக் கொண்டு கழுத்தறுக்கும் வேலையைத்தான் மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கம் மேற்கொண்டது.

இதற்காக அதாவுல்லா, றிசாட் பதியுதீன், ஹிஸ்புல்லா போன்றவர்களை மஹிந்தராஜபக்ஷ அரசாங்கம் தாராளமாக பயன்படுத்திக் கொண்டது. அவர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ செய்து கொடுத்திருந்தார். இதனால், மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கத்தில் மு.காவினால் முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு இயலவில்லை.

மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கத்தில் ஒரு பங்காளி என்பதனை விடவும், தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காகனதொரு உபாயமாகவே அந்த அரசாங்கத்தில் இருக்க வேண்டிய கட்டாயம் மு.காவிற்கு ஏற்பட்டது.

ஆனால், தற்போதைய அரசாங்கத்தில் மு.கா ஒரு கௌரவமான நிலையை அடைந்துள்ளது. கட்சியை பாதுகாத்துக் கொள்வதற்காக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என இந்த அரசாங்கத்தின் காலத்திலும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. ஆதலால், மு.கா ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தில் பெரும்பகுதியை அடைந்து கொள்வதற்குரிய காலம் ஏற்பட்டுள்ளது. இக்காலத்தில் முஸ்லிம்களின் அபிலாசைகளை அடைந்து கொள்வதற்காக, கரையோர மாவட்டம், முஸ்லிம்களுக்கும் சுயநிர்ணய அதிகாரம் போன்றவற்றை பெற்றுக் கொள்ளக் கூடிய சாத்தியங்கள் உள்ளன.

முன்னதாக சந்திரிகா பண்டாரநாயக்கா ஜனாதிபதியாகவும், ரணில் விக்கிரமசிங்க பிரதம மந்திரியாகவும் இருந்த இரண்டு வருட காலப்பகுதியில் கரையோர மாவட்டம், தென் கிழக்கு அலகு அல்லது தனி அதிகார அலகு ஆகியவற்றை அடைந்து கொள்வதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போதுதான், சந்தரிகா பண்டாரநாயக்க பாராளுமன்றத்தை கலைத்தார்.

ஆதலால், தற்போதுள்ள அரசியல் சூழலில் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுகள் முன் வைக்கப்படும் போது முஸ்லிம்களின் தேவைகளையும், அபிலாசைகளையும் அடைந்து கொள்வதற்குரிய முஸ்தீவுகளை எடுக்க வேண்டும்.

இதனை மு.காவில் தற்போதுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்வார்கள் என்று சொல்ல முடியாது. இவர்கள் மஹிந்தராஜபகஷவை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்க வேண்டுமென்று குரல் கொடுத்தவர்கள், மைத்திரிக்கு ஆதரவு என்று சொல்லிக் கொண்டே, மஹிந்தராஜபக்ஷவுடன் இரவு நேரங்களில் கள்ளத் தொடர்புகளை வைத்துக் கொண்டு கையும் மெய்யுமாக பிடிபட்டவர்கள், முன்னாள் அமைச்சர் பசில்ராஜபக்ஷவிடம் ஒப்பந்த வேலைகளைப் பெற்றுக் கொள்வதற்காக எல்லாவற்றிக்கும் தலையசைத்தவர்கள், ஆனால், ஹஸன்அலியும், நிஸாம் காரியப்பரும் அவ்வாறு செயற்படவில்லை.

முஸ்லிம்களுக்குரியவைகள் கிடைக்க வேண்டுமென்று வாதாடியவர்கள். இதனால், இன்றைய காலத்தின் தேவை குறித்து இவர்களை தேசிய பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமனம் செய்ய வேண்டும்.
மூன்;று முறை வழங்கலாமா?

மு.காவின் செயலாளர் ஹஸன்அலி ஏற்கனவே இரண்டு தடவைகள் தேசிய பட்டியல் மூலமாக தெரிவு செய்யப்பட்டவர். அதனால், மூன்றாவது முறையும் அவருக்கு வழங்க வேண்டிய தேவையில்லை என்ற கருத்தும் முன் வைக்கப்படுகின்றது. அவர் இருந்த இரண்டு முறையும் முஸ்லிம்களின் பல பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். கட்சியை பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்.

ஆனால், இன்றைய சூழலில் அவர் பாராளுமன்றத்தில் இருப்பது அவசியமாகும். ஏனேனில், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்;டவர். அவருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடையே நல்ல மரியாதை உள்ளது. இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் பற்றி பேசும் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஒதுக்கி வைத்துவிட்டு பேச முடியாது. இதனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நேசத்தைப் பெற்றுள்ள ஹஸன்அலி பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு, பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும், மு.காவிற்குமிடையே நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தவும் அவரால் முடியும்.

தமிழர்களின் அபிலாசைகளையும், முஸ்லிம்களின் அபிலாசைகளையும் அறிந்து கொண்டவராக ஹஸன்அலி இருப்பது விசேட அம்சமாகும்.

மேலும், தேர்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்தவும், தொகுதிகளின் எல்லைகளில் மாற்றங்களை ஏற்படுத்தவும், புதிய தேர்தல் தொகுதிகளை ஏற்படுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது போன்று பல விடயங்களை புதிய அரசாங்கம் ஏற்படுத்துவதற்கு இருக்கின்றது.

இத்தகையதொரு கட்டத்தில் மு.காவின் சார்பில் எத்தனை தலைகள் பங்கு கொள்கின்றன என்பது முக்கியமல்ல. முஸ்லிம்களின் பிரச்சினைகளை அறிந்து கொண்டவர்கள், அவை பற்றி தெளிவைக் கொண்டவர்கள் எத்தனை பேர் பேச்சசுவார்த்தைகளில் பங்கு கொள்கின்றார்கள் என்பது முக்கியமாகும்.

அந்த வகையில், மு.காவின் தேசிய பட்டியல் விவகாரத்தை இன்னும் மூடு மந்திரமாக வைக்காது, இன்றைய காலத்தின் தேவை கருதி தேசிய அரசாங்கம் அமையவுள்ள முதல் இரண்டு வருடங்களுக்காவது ஹஸன்அலியையும்,நிஸாம் காரியப்பரையும் தேசிய பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்கு மு.கா நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.