உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக அரசாங்க தரப்பிலிருந்து தெரிய வருகிறது. நாடு பூராகவுமுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் 335 இல் 301 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது. இதேவேளை ஏனைய 34 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் அடுத்த மாதம் 15 ஆம் மற்றும் 31 ஆம் திகதிகளுடன் நிறைவடையவுள்ளன.
பதவிக்காலம் முடிவடைந்துள்ள உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகங்கள் விசேட ஆணையாளர்களின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. அடுத்த மாதம் பதவிக்காலம் நிறைவடையவுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகமும் தேர்தல் நடைபெறும் வரையில் விசேட ஆணையாளரின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன.
எனவே நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தொகுதிவாரி முறையில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அது தொடர்பிலான எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளது.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து இவ்வருடமே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் எதிர்வரும் நவம்பர் மாதம் புதிய பாராளுமன்றத்தின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளதால் இவ்வருடம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை.ஆகையினால் எதிர்வரும் மார்ச்மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிய வருகிறது.