எதிரணியினர் தற்போது எதிர்நோக்கியுள்ள குழப்பமான சூழ்நிலை குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தான் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சியமைக்க பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை எனவும் தற்போது இருப்பது கூட்டு ஆட்சியே எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிரபல ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வழங்க ஜனாதிபதி இணங்கியதாகவும் எனினும் அது கிடைக்கப் பெறவில்லை எனவும் இதனால் எதிரணியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாகவும் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்தமை குறித்து தனது தனிப்பட்ட கருத்துக்களை கூற முடியாது என கூறிய பந்துல, குறித்த பதவி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உள்ளக பிரச்சினை என தான் ஏற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.