முத் தலைவர்களும் மூக்குடைந்தார்கள்..!!

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

 

 நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தாங்கள் தான் வென்றோம் என தோற்றவர்கள் கூட பல கோணங்களில் நிரூபித்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்களின் குறித்த ஆதரவினைக் கொண்ட மூன்று கட்சிகள் இலங்கையில் உள்ளது.

rauff atha rizad

 

இதில் மு.கா,தே.கா ஆகியவற்றின் கோட்டையாக அம்பாறையும்,அ.இ.ம.காவின் கோட்டையாக வன்னியும் திகழ்கிறது.ஒரு கட்சியின் வெற்றியின் ஆழத்தினை அதன் கோட்டைகளில் இன்னுமொரு கட்சியின் ஊடுருவலினைத் தடுத்து கடந்த முறையினை விட   இம் முறை எந்தளவு அகல கால் பதித்துள்ளது என்பதனை வைத்தும்  மட்டிட்டுக் கொள்ளலாம்.

 

அம்பாறையில் தே.காவின் தலைவர் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வின் தோல்வி,மக்கள் காங்கிரஸ் எதுவித ஆசனங்களினையும் பெறாமை,மு.கா மூன்று ஆசனங்களினையும் பெற்றுள்ளமை போன்ற காரணிகளால் மு.கா அம்பாறையில் பாரிய வெற்றியினை எய்துள்ளதான  விம்பம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

 

முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் அம்பாறையில் மு.காவிற்கு எத்தனை வாக்குகளினை செல்ல விடாது தடுத்தாரோ அதே எண்ணிக்கையான வாக்குகளினை அ.இ.ம.கா,தே.கா ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து தடுத்துள்ளது (வாக்கதிகரிப்பு வீதம் போன்றவற்றினை கருத்திற் கொண்டு).

 

 மு.காவின் எதிரிகளில் ஒருவர் மு.காவின் கோட்டையான அம்பாறையில் வீழ்ந்தாலும் மற்றுமொருவர் புதிதாக உதயமாகியுள்ளார்.முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் படு தோல்வியடைந்துள்ள இச் சந்தர்ப்பத்தில் மு.கா மிக இலகுவாக அம்பாறை மாவட்ட மக்களினை தன் பக்கம் ஈர்க்கக் கூடிய அதீத வாய்ப்பிருந்தும் மு.கா தவறி இருந்தது.இத் தேர்தலில் மு.கா தனது ஆதரவினைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தாலும் அதனை அதிகரித்துக் கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது (வாக்கதிகரிப்பு வீதம் போன்றவற்றினை கருத்திற் கொண்டு).

 

திகாமடுல்லவில் அ.இ.ம.கா மிகக் குறுகிய காலப் பிரச்சாரத்தினுள் 33 000 அளவிலான வாக்குகளினைப் பெற்றதென்பது ஒரு சிறிய விடயமல்ல.உண்மையில் அ.இ.ம.காவினர் அம்பாறையில் தனக்கு அளிக்கப்பட வாக்குகளினை விட குறைந்தளவான வாக்குகளினைத் தான் எதிர்பார்த்திருந்தார்கள்.இத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் ஐ.தே.கவின் அபரிதமான வளர்ச்சி,ஐ.ம.சு.கூவின் மிகப் பெரிய வீழ்ச்சி போன்ற காரணிகளே அ.இ.ம.கா ஒரு ஆசனத்தினைப் பெற தீட்டிய திட்டத்தினை தவிடு பொடியாக்கி இருந்தது.முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்.

 

அவரினை வீழ்த்துவது ஒன்றும் பெரிய காரியமல்ல.அவர் மு.காவிற்கு ஒரு சவாலாக உருவாகக் கூடியவருமல்ல.அ.இ.ம.காவினை அவர் அளவில் ஒரு பலம் குன்றியதாக  எடைபோட்டுவிட முடியாது.

 

அ.இ.ம.கா தனக்கான ஒரு அழகிய அடித்தளத்தினை மு.காவின் கோட்டையில் இட்டுள்ளது.இத் தேர்தலில் அ.இ.ம.காவானது ஒரு குறித்த பிரதேசத்தில் மாத்திரம் வாக்குகளினைப் பெறாது திகாமடுல்ல மாவட்டத்தின் சகல ஊர்களில் இருந்தும் குறித்தளவான வாக்குகளினைப் பெற்றுள்ளது.அதாவது பரந்து பட்ட ஆதரவினைப் பெற்றுள்ளது.

 

இந் நிலையினை சற்று ஆரோக்கியமானதாய் மாற்றினால் எதிர்காலத் தேர்தலில் தனது காலினை தனது பிரதிநிதித்துவத்தினை உறுதி செய்வதன் மூலம் தடம் பதிக்க முடியும்.இதே நிலையினை அ.இ.ம.கா தக்க வைத்துக் கொண்டால்  கூட எதிர் வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சம்மாந்துறை பிரதேச சபை பக்கம் மு.காவினால் தலை வைத்துக் கூட தூங்க முடியாத நிலை ஏற்படும் (தக்க வைக்க முடியுமா? என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று) .எனவே,இந் நிலை மு.காவின் எதிர்கால பயணத்திற்கு ஆரோக்கியமானதல்ல.

 

இம் முறை திகாமடுல்ல மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் செறிந்து வாழும் முஸ்லிம் தொகுதிகளான பொத்துவில்,கல்முனை,சம்மாந்துறை ஆகியவற்றில் ஐ.தே.க வெற்றி பெற்றிருந்தது.சிங்கள மக்கள் அதிகம் செறிந்து வாழும் ஒரே ஒரு தொகுதியான அம்பாறைத் தொகுதியில் ஐ.தே.க தோல்வி அடைந்திருந்தது.

 

முஸ்லிம்கள் செறிந்து வாழும் மூன்று தொகுதியிலும்  ஐ.தே.க வென்றும்,சிங்களவர்கள் செறிந்து வாழும் ஒரே ஒரு தொகுதியில் ஐ.தே.க தோல்வியினைத் தழுவியும் முஸ்லிம் வேட்பாளர்களினை விட ஐ.தே.க வேட்பாளர் தயா கமகே முஸ்லிம்களின் ஆதரவுடன் அதிக விருப்பு வாக்குகளுடன் மாவட்டத்தில் முதன்மை ஆளாக வெற்றி பெற்றுள்ளார்.மக்கள் காங்கிரஸ் முஸ்லிம் பகுதிகளில் பத்து வேட்பாளர்களினை களமிறங்கி பெற்ற வாக்குகளினை தயா கமகே தனியாளாக நின்று முஸ்லிம்களிடத்தில் பெற்றுள்ளார்.

 

இவ்வாறான நிலையில் தாங்கள் திகாமடுல்லவில் வெற்றி பெற்றுள்ளோம் என மு.கா கொக்கரிக்கவும்,நாங்கள் ஆசனத்தினைப் பெறாத போதும் குறித்தளவு முஸ்லிம்கள் வாக்குகளினைப் பெற்று விட்டோம் என பெருமை பாராட்டுவதும்  நகைப்பிற்குரியது.

 

கடந்த முறை தயா கமகே மு.கா சார்பாக களமிறக்கப்பட்ட மூன்று வேட்பாளர்களினையும் விட குறைவானளவு வாக்குகளையே பெற்றிருந்தார்.இம் முறை மூவரினையும் விட அதிகமான வாக்குகளினை பெற்றுள்ளார்.அடுத்த தேர்தலில் தன்னுடன் இரு பலமான வேட்பாளர்களினை களமிறக்கி அவர்களின் வெற்றிக்கு பூரண முயற்சி எடுத்தால் மு.காவின் நிலைமை அம்பாறையில் அவ்வளவு தான்.

 

அம்பாறையில் ஐ.தே.கவின் விருப்பு வாக்கில் ஐந்தாவது இடத்தினைப் பிடித்துள்ள கலப்பதிக்கு வெறும் பத்தாயிரம் அளவிலான வாக்குகளே நான்காம் இடத்தினை கைப்பற்ற தேவையாகும்.முஸ்லிம் காங்கிரஸ் தன் இடத்தில் இருந்து சிறிது வீழ்ச்சியடைந்தாலும் அது மு.காவின் பிரதிநிதித்துவத்திற்கு ஆபத்தானது.எதிர் காலத் தேர்தல்களில் மு.கா வீழ்ச்சி கானுமா? என்பது திகாமடுல்லவில் வெற்றி பெற்றுள்ள மூ வேட்பாளர்களிலுமே தங்கியுள்ளது.

 

எனவே,அம்பாறை மு.காவினை விட்டும் நழுவும் தருவாயில் உள்ளது என்பதே உண்மை நிலைப்பாடகும்.

 

மு.காவின் தலைவரான அமைச்சர் ஹக்கீம் தனது மாவட்டமான கண்டியில் இம் முறை போட்டி இட்டிருந்தார்.கண்டி மாவட்டத்தில் கடந்த முறை மூன்று முஸ்லிம் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.இம் முறை கண்டியில் குறைந்தது மூன்று முஸ்லிம் வேட்பாளர்களுக்கு ஐ.தே.க தனது வேட்பு மனுவில் இடம் வழங்கி இருக்க வேண்டிய நிலை இருந்தும் இரண்டே இரண்டு முஸ்லிம் வேட்பாளர்களுக்கே போட்டி இட வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.

 

அதிலும் இலட்சக் கணக்கான முஸ்லிம்கள் வாழும் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அமைச்சர் ஹக்கீம் எழும்புவதற்கு மாத்திரமே சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.கண்டி வாழ் முஸ்லிம் மக்கள் மு.காவினை முற்று முழுதாக ஏற்றிருந்தால் நிச்சயம் மு.கா சார்பாக இரண்டு வேட்பாளர்களுக்கு அனுமதி வழங்கி இருக்கும்.இலங்கை முஸ்லிம்களின் தேசிய கட்சி என கூப்பாடு போடும் மு.காவினை முதலில் அதன் தலைமையின் ஊரான கண்டி மக்கள் ஏற்க வேண்டும்.அவருடன் போட்டி இட்ட சக முஸ்லிம் வேட்பாளர் அமைச்சர் ஹலீம் அமைச்சர் ஹக்கீமினை விட பத்தாயிரம் வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளார்.ஒரு கட்சியின் தலமையினைக் கொண்டுள்ள மாவட்டத்தில் கட்சித் தலைமைக்கு அளிக்கப்பட வாக்குகளினை விட தனி நபருக்கு அளிக்கப்பட வாக்குகள் அதிகமாக இருப்பது அக் கட்சியினை நகைப்பிற்குட்படுத்துகிறது.

 

அ.இ.ம.காவின் தலைவர் றிஷாத் பதியூர்தீன் தனது சொந்த மாவட்டமான வன்னியிலேயே களமிறங்கி இருந்தார்.இவர் கடந்த முறையினை விட பத்தாயிரம் வாக்குகளினை இம் முறை இழந்துள்ளார்.பொதுவாக சனத் தொகை அதிகரிப்பினைக் கருத்திற் கொண்டால் இதை விட கணக்கு அதிகம் வரும்.அமைச்சர் றிஷாத்தின் வில்பத்து பருப்பு பல இடங்களில் வேகியுள்ள போதும் சம்பந்தப்பட்ட பிரதேசத்தில் வேகாமை அமைச்சர் றிஷாத் மீது முன் வைக்கப்படும் சில குற்றச் சாட்டுகளுக்கு வலுச் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

 

இவரினை எதிர்த்து வன்னி மாவட்டத்தில் வெற்றிலையில் களமிறங்கிய மஸ்தான் அவர்கள் பாராளுமன்றம் சென்றுள்ளார்.வெற்றிலையில் போட்டி இட்ட பல முக்கிய பிரபலங்கள் தோல்வியினைத்  தழுவியுள்ள இத் தேர்தலில் வன்னியில் மாத்திரமே ஒரு நபர் தெரிவாகியுள்ளமை அ.இ.ம.காவிற்கு கிடைத்த மிகப் பெரிய அவமானமாகும்.கடந்த முறை வன்னியில் இரு பாராளுமன்ர் உறுப்பினர்களினை கொண்டிருந்த அ.இ.ம.கா  தனது  மாவட்டமான வன்னியில் ஒரு உருப்பினரினை இழந்துள்ளதானது  அ.இ.ம.கா அடைந்த மிகப் பெரிய தோல்வியாகும்.

 

அம்பாறையில் தே.காவின் தலைவர் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் யாரும் கற்பனை கூட செய்திராத அளவு படு தோல்வியினை தழுவியுள்ளார்.இவரின் இத் தோல்வி இவரின் கோட்டையின் அடித்தளத்தினைக் கூட சரித்து விட்டது.இவர் வெளிப்படையாக பகிரங்க தோல்வி கண்டுள்ளதால் இது பற்றி அதிகம் அலச வேண்டிய அவசியம் இல்லை.