புலம்பெயர்ந்து வாழும் இலங்கைப் பிரஜைகள் நாடு திரும்பினால் செங்கம்பள வரவேற்பளிக்க அரசாங்கம் தயார் !

 

எதிர்ப்பு அரசியலுக்குப் பதிலாக இணக்க அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பாராளுமன்றத்திலுள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

maiththiri

8 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில் அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டை ஆட்சி செய்த இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு அரசியலைப் பின்பற்றியதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக நாட்டின் முன்னேற்றம் வெகுவாகப் பாதிக்கப்பட்டதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமா, இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடமே உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்து வாழும் இலங்கைப் பிரஜைகள் நாடு திரும்புவதற்கான காலம் கனிந்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, நாடு திரும்பும் மக்களுக்கு செங்கம்பள வரவேற்பளிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

புலம்பெயர்ந்து வாழும் இலங்கை மக்களை மீண்டும் நாட்டிற்கு வரவேற்பதற்கான செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனவரி 8 ஆம் திகதிக்குப் பின்னர் சர்வதேச மட்டத்தில் இலங்கை தொடர்பான நல்லபிப்பிராயம் மேம்பாடு அடைந்துள்ளதாகவும், இந்த நிலைமை சர்வதேச சவால்களை வெற்றிகொள்வதற்கு சாதமாக அமையும் எனவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையிலும், முப்படைகளின் தளபதி என்ற வகையிலும் தேசிய பாதுகாப்பு விடயத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுவதாக ஜனாதிபதி சபையில் உறுதியளித்தார்.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு எவ்வித வேறுபாடுமின்றி அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இனங்களுக்கு இடையிலும், மதங்களுக்கு இடையிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை காலமும் இல்லாத முக்கிய சவால்களை புதிய பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் எதிர்நோக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாளாந்தம் அபிவிருத்தியடைந்து வரும் நவீன தொழில்நுட்பத்திற்கு உயிரூட்டி இலங்கையை தொழில்நுட்பத்துறை நோக்கி தயார்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறினார்.