அஸ்லம் எஸ்.மௌலானா
இலங்கையின் அரசியல் யாப்பு திருத்த யோசனைக்கான நிபுணத்துவ குழு ஒன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரட்ன அவர்களை தலைவராகக் கொண்ட இந்த நிபுணத்துவ குழுவில் பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட, கலாநிதி ரொஹான் எதிரிசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்- சிரேஷ்ட சட்டத்தரணி எம்.சுமந்திரன், முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகம்- சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர், பேராசிரியர் எம்.செல்வகுமாரன் உட்பட பத்து சட்ட அறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இக்குழுவின் முதலாவது கலந்துரையாடல் அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இடம்பெற்றதுடன் இரண்டாவது சந்திப்பு சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றுள்ளது.
இந்த நிபுணத்துவக் குழுவின் அடுத்த கலந்துரையாடல் நாளை புதன்கிழமை இடம்பெறவுள்ளது.
தற்போது அமைக்கப்பட்டுள்ள புதிய பாராளுமன்றத்தை அரசியல் நிர்ணய சபையாக மாற்றி, இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசியல் யாப்பை முழுமையாக திருத்தி, புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
இத்தகைய முயற்சிக்கு தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்குவதற்காகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்படி நிபுணத்துவக் குழுவை நியமித்துள்ளார் என அறிவிக்கப்படுகிறது.
இதன் பிரகாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழித்தல் அல்லது ஜனாதிபதியின் அதிகாரங்களை கணிசமானளவு குறைப்பு செய்தல், தேர்தல் சீர்திருத்தம் மற்றும் அதிகாரப் பரவலாக்கல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து பரந்துபட்டளவில் ஆராய்ந்து புதிய அரசியல் யாப்பு முன்மொழிவுகளுக்கான பிரேரணைகளை மேற்படி நிபுணத்துவ குழு பாராளுமன்ற நிர்ணய சபைக்கு பரிந்துரை செய்யும் என தெரிவிக்கப்படுகிறது.