எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை தெரிவு செய்ய வேண்டும்- ஹஸன்அலி

 
தேசிய அரசாங்கமொன்று அமைக்கப்படவுள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை தெரிவு வேண்டும். இவ்வாறு தெரிவு செய்யப்படுவது நாட்டில் இன ஒற்றுமை வலுப்பெறுவதற்கு சாதகமாக அமையும் என  ஐ.தே.க. வின் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளர் எம்.ஏ.ஹஸன்அலி தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

இன்று நாடு முக்கியமானதொரு கட்டத்தை அடைந்துள்ளது. இலங்கை மீது சர்வதேசத்தின் கவனம் முழுமையாக திரும்பியுள்ளது. இனப்பிரச்சினைக்கான தீர்வுகளை முன் வைக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இத்தகையதொரு சூழலில் மேற்படி விடயங்களை சாதித்துக் கொள்வதற்காக தேசிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ளது.

நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக முயற்சிகள் எடுக்கப்படும் இத்தருணத்தில் எதிர்கட்சித் தலைவராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை தெரிவு செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவு செய்யப்படுவது நாட்டில் இன ஒற்றுமை வலுப்பெறுவதற்கு சாதகமாக அமையும்.

எனத் தெரிவிக்கும் அவர், இரா.சம்பந்தன் எதிர்க் கட்சி தலைவராக தெரிவு செய்யப்படுவதற்கு பாராளுமன்றத்தில் உள்ள சிறுபான்மையினத்தின் பிரதிநிதிகள் தங்களின் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.