இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ. நா. மனித உரிமை அலுவலகத்தினால் நடத்தப்பட்டுள்ள விசாரணையின் அறிக்கை வெளிவந்த பின்னரே இலங்கைக்கு ஆதரவு தெரிவிப்பதற்கான பிரேரணையை அமெரிக்கா மனித உரிமை பேரவையில் முன்வைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை குறித்த அறிக்கையை நன்றாக ஆராய்ந்த பார்த்த பின்னர் அதற்கு பதிலளிக்கும் வகையிலும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்த உள்ளக விசாரணைக்கு கால அவகாசத்தை வழங்கவேண்டும் என்றும் கோரும் வகையிலுமே அமெரிக்காவின் பிரேரணை அமையவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் நடத்திய விசாரணையின் அறிக்கை சில தினங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கையளிக்கப்படவுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கை விஜயத்தின்போது இந்த அறிக்கையை ஜனாதிபதிக்கு கையளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் விசாரணை அறிக்கை வெளிவந்ததும் அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து இலங்கைக்கு ஆதரவு கோரும் பிரேரணையை தயாரிக்கவுள்ளன. இந்த பிரேரணை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடரின்போது அமெரிக்காவினால் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
இலங்கையின் மனித உரிமை நிலைமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் நடத்திய விசாரணை அறிக்கை மீதான விவாதம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையிலேயே அமெரிக்காவின் இலங்கை குறித்த ஆதரவு பிரேரணையும் வரவுள்ளது.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால் மற்றும் ஜனநாயகம் மனித உரிமை தொடர்பான பிரதி செயலாளர் டொம் மலினவ்ஸ்கி ஆகியோர் இலங்கைக்கு ஆதரவான பிரேரணை கொண்டுவரப்படும் தகவலை நேற்று முன்தினம் தெரிவித்தனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கடந்த 2014 ஆம் ஆண்டும் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஒரு பிரேரணையை கொண்டு வந்தது. இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தல் என்ற தலைப்பிலான இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகளும் பிரேரணையை எதிர்த்து 12 நாடுகளும் வாக்களித்தன. அத்துடன் 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்திருந்தன
2014 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு அமைவாகவே இலங்கை தொடர்பான உள்ளக விசாரணையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் முன்னெடுத்தது. அதன் அறிக்கையே சில தினங்களில் ஜனாதிபதிக்கு கையளிக்கப்படவுள்ளது.
கடந்த 2012 – 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக மூன்று பிரேரணைகளை கொண்டுவந்து நிறைவேற்றிய அமெரிக்கா இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து இலங்கைக்கு ஆதரவான பிரேரணையை கொண்டுவரவுள்ளது