ஐ.பி.எல். திருவிழாவின் இன்றைய முதல் போட்டியில் மும்பை- சன்ரைசர்ஸ் அணிகள் மோதின.
சிம்மன் (51), பட்டேல் (17), ரோகித் சர்மா (24), பொல்லார்டு (33) ஆகியோர் ஆட்டத்தால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணி சார்பில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டும், ஸ்டெய்ன், பிரவீண் குமார் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணயின் தவான், வார்னர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்தனர். அதன்பின் ஒருபுறம் தவான் அதிரடி காட்ட வார்னர் நிதானமாக விளையாடினார். 4-வது ஓவரை ஹர்பஜன் சிங் வீசினார். இந்த ஓவரில் தவான் 3 பவுண்டரிகள், ஒரு சிக்சர் விளாசினார்.
அடுத்த ஓவரில் வார்னர் 9 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து நமன் ஓஜா களம் இறங்கினார். அதிரடியாக விளையாடி வந்த தவான் 6-வது ஓவரின் கடைசி பந்தில் அவுட் ஆனார். அவர் 29 பந்தில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். நமன் ஓஜா 9 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.
ஒஜா அவுட் ஆன பிறகு ஐதாராபத் அணி 9 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது விக்கெட்டுக்கு போபரா, லோகுஷ் ராகுல் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடியது. இதனால் சன்ரைசர்ஸ் அணி 14.1 ஓவரில் 100 ரன்களை கடந்தது. அந்த அணி மேலும் 4 ரன்கள் எடுத்த நிலையில் ராகுல் 25 ரன்னில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் விளையாடிய போபரா 23 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
19-வது ஓவரை மலிங்கா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் விஹாரி அவுட் ஆனார். 3-வது பந்தில் பிரவீண் குமாரும், 4-வது பந்தில் ஸ்டெய்னும் அவுட் ஆனார்கள். இந்த ஓவரில் மலிங்கா ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.
இதனால் கடைசி ஓவரில் ஐதராபாத் அணிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், வினய் குமார் அந்த ஓவரில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் மும்பை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4-ஓவர் வீசி 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் வீழ்த்திய மலிங்கா ஆட்ட நாயகன் விருது பெற்றார். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் மெக்கிளெனகன் 3 விக்கெட் வீழ்த்தினார். இந்த போட்டியில் மட்டும் வேகப்பந்து வீச்சாளர்கள் 14 விக்கெட்டுக்கள் வீழ்த்திய குறிப்பிடத்தக்கது.