எம்.சுபைடீன்
நாட்டிலுள்ள அரசியற் கட்சிகளின் ஆதரவாளர்களினாலும், முக்கியஸ்தர்களினாலும் கட்சிகளின் தலைவர்கள் விறகுக்கட்டையால் தலையைச் சொறிந்து கொண்டிருக்க மறுபுறம் மு.கா.தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு தலையில் முட்கிரீடம் அணிவித்து சம்பட்டியால் அடித்துக் கொண்டு வெந்தணலில் நிறுத்தி வைக்கும் பதவிப் பிசாசுகளின் தொல்லைகளை அவதானித்துக் கொண்டிருக்கும் கட்சியின் ஆரம்ப காலப் போராளிகளும்,இக்கட்சியில் எதையுமே எதிர்பாராமல் இன்று வரை நீரூற்றும் தொண்டர்களும் பெரும் விசனமடைந்துள்ளனர்.
குறிப்பாக இங்கு ஒரு விடயத்தைப்பற்றி நாம் ஆராயலாம். கிழக்கு மாகா சுகாதார அமைச்சு என்ற பதவியைப் பெறுவதில் கட்சியில் பதவி மோகம் பிடித்த சிலர் பதறிக் கொண்டிருக்கின்றனர்.
தேர்தல் காலங்களின் போது கட்சித் தலைவர்களால் பல வாக்குறுதிகள் வழங்கப்படுவதும் அதில் சிலவற்றை நிறைவேற்றுவதும், இன்னும் சிலதை நிறைவேற்ற முடியாமல் கையைப் பிசைந்து கொண்டு சஞ்சலப்பட்டுக் கொண்டிருப்பதும் கண்கூடாகத் தெரிகின்றது.
தேசியப்பட்டியல் வழங்கப்படும் என்று கட்சித் தலைவர்களால் வாக்குறுதி அளிக்கப்பட்ட பலர் தவற விடப்பட்டுள்ளனர். UNP, UPFA, TNA. JVP, ACMC என எல்லாக் கட்சிகளின் தலைவர்களும் சிக்கலில் தவிக்கின்றனர். எல்லாக் கட்சிகளின் நிலவரமும் வாசக நேயர்களுக்கு நன்கு தெரிந்ததுதான்.இதில் கடைசியாக ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தைப் பெற்ற ACMC தலைவர் றிஷரட்டின் முன்மாதிரியையும், எதிர்கால அரசியல் நடவடிக்கைகளையும் பாராட்டாமல் இருக்க முடியாது.
வடமேல் மாகாணத்தில் உள்ள புத்தளம் தொகுதி முன்னாள் சபாநாயகர் எஸ்.எச்.எம்.இஸ்மாயில் நிதி அமைச்சராக இருந்த நைனா மரிக்கார் ஆகியோரால் அலங்கரிக்கப்பட்டது. பிற்காலத்தில் கே.ஏ.பாயிஸ் மு.கா.தேசியப் பட்டியலில் இடம் பிடித்து பின்னர் பல்டி அடித்த கதையோடு உறங்கிப் போனது.
பெருமை மிகு அந்த தொகுதியின் முஸ்லிம் வாக்காளர்களைத் தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் UNP தேசிய பட்டியலில் மூத்த அரசியல்வாதி நவவிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் றிஷாட் தனது அரசியலில் ரன்வேயை அகலப்படுத்தியுள்ளார். மட்டக்களப்பு, திருமலை, வன்னி, அநுராதபுரம், புத்தளம் என நீள்கின்றன. .
இது தேசிய அரசியலில் புதிய மாற்றம்.மேலும் அம்பாரையிலும் கன்னி முயற்சிக்கு சுமார் 33000 வாக்குகள்.
மேற்படி தேசிய பட்டியலை கிழக்கு மாகாண சபையின் மு.கா.வின் குழுக்களின் தலைவர் ஜெமீலுக்கு வழங்குவதாக தேர்தல் மேடைகளில் றிஷாட்டினால் வாக்குறுதி அளிக்கப்பட்டது.ஆனால் அது நடைபெறவில்லை.
கௌரவ உறுப்பினர் ஜெமீல் என்ன சொன்னார் கட்சியின் எதிர்கால நலன் கருதி நவவி எம்.பியாக்கப்படுவதை தான் விரும்புவதாகக் கூறினார்.பாருங்கள் ஜெமீலின் உயர் பண்பை.கிழக்கு மாகாண சபையில் இரண்டு தடவைகள் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவர். இவருக்கு ஒரு சபாஷ் போட வேண்டும்.
றிஷாட்டின் வாக்குறுதி போன்றுதான் ஹக்கீமும் அட்டாளைச்சேனைக்கு தேசியபட்டியல், அக்கரைப்பற்றுக்கு அரசியல் அதிகாரம் என்று கூறியுள்ளார். உண்மைதான். அவர் கூறிய கூற்றில் ஒரு விடயம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. அது என்ன அதாஉல்லா தோற்கடிக்கப்பட்டார்.எம்.பி பதவியும் பறிபோய்விட்டது. இப்போது அக்கரைப்பற்றுக்கு ஒரிஜினலாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் இருக்கிறார்.
இப்போது அரசியல் அதிகாரம் யாரிடமுள்ளது.தவத்திடம் தானே.போக சுகாதார அமைச்சர் பதவி வழங்கப்படும். அதுவும் சகோதரர் தவத்தக்கு வழங்கப்படும் என்று தலைவர் எங்கேயாவது சொன்னாரா ? யாராவது சாட்சி சொல்லுங்கள் பார்க்கலாம்.
ஆகவே தலைவர் ஹக்கீம் அக்கரைப்பற்றுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவேன் என்று கொடுத்த வாக்குறுதி தேர்தல் முடிந்த மறுநாளே நிறைவேற்றப்பட்டுள்ளது.அதாஉல்லா பவர் கட்டான உடனேயே ஜெனரேட்டர் பவர் தவத்தினூடாக வந்துவிட்டது அவ்வளவுதான்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி எங்களைப் போன்ற தொண்டர்களால் வளர்ந்த கட்சி. தலைவர்கள் மரம் நாட்ட நீர் ஊற்றிக் கொண்டிருப்பவர்கள் நாங்கள்.
எங்கள் மரம் பழுத்து கனி தரும் போது காகம், குருவி, குயில், ஆந்தைகள் , வெளவால்கள் எல்லாம் வரத்தான் செய்கின்றன. வருபவைகள் எல்லாம் அளவோடு கனிகளைத் திண்ண முற்பட வேண்டும்.மரத்திலுள்ள அனைத்தையும் தின்ன முற்படக் கூடாது. கறுப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு மக்களை நோக்கக் கூடாது. மக்கள் தமது உணர்வுகள் மூலம் அந்தக் கண்ணாடிக்குள்ளால் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கொஞ்சம் கவனத்தில் எடுக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு தேவைப்படுபவர்களுக்கு நாம் கூறிக் கொள்கின்றோம்.
அக்கரைப்பற்றில் இம்முறை பொதுத் தேர்தலில் 10,200 வாக்குகள் யானைக்கு விழுந்ததாகத் தம்பட்டம் அடிக்கின்றார்கள். இதில் தயாகமகே, தயாரெத்ன ஆகியோர்களுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.
ஜனாதிபதித் தேர்தலிலும் அன்னத்துக்கு மக்கள் வாக்களித்தனர். இவையெல்லாம் அதாஉல்லா அல்லது தவம் சொல்லி மக்கள் வாக்களிக்கவில்லை. மக்களுக்குத் தேவைப்பட்டது நல்லாட்சி. அதற்குத்தான் இரு தேர்தல்களிலும் மக்கள் வாக்களித்தனர்.
சகோதரர் தவம் அவர்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள். நடைபெறப் போகும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் பிரதேச சபையில் உங்கள் செல்வாக்கு என்ன என்பதை நிரூபித்துக் காட்டுங்கள்.
நீங்கள் தலை குத்திக்கரணம் அடித்தாலும் சரிதான் இவை இரண்டு சபைகளும் அதாஉல்லாவின் ஆணைக்குள் அடங்கும். எதிரியின் பலத்தை அவ்வளவு இலகுவாக எடை போடக் கூடாது.
தலைவர் உட்பட கட்சியின் உயர்பீடத்திலிருந்து சில்லாங்குட்டிப் போராளிகள் வரைக்கும் ஒரு விடயத்தை நாம் அலசிக் கொள்வோம்.
சுகாதார அமைச்சு எங்கே செல்ல வேண்டும் என்று நீங்கள் தீர்மானியுங்கள்.
1. அம்பாரை மாவட்டம்
இந்த மாவட்டத்தில் மக்கள் தெரிவின் மூலம் பைஸல்,ஹரீஸ்,மன்சூர் மற்றும் தேசிய பட்டியல் மூலம் நஸீர் அல்லது அட்டாளைச்சேனையில் வேறுயாரோ! மொத்தம் 04 எம்.பீக்கள்.
மாகாண சபையில் ஏ.எல்.தவம், ஆரிப் சம்சுடீன்,இன்ஷா அல்லாஹ் மாஹிர் ,ஜவாத் நஸீர் எம்.பி.ஆக்கப்பட்டால் இன்னுமொருவர் மொத்தம் 05 பேர்.
மாற்றுக் கட்சியில் எம்.எஸ்.உதுமாலெப்பை, அமீர்.ரீ. ஏ –02 ஆக மொத்தம் 07 மாகாண சபை உறுப்பினர்கள்.
பைஸல், ஹரீஸ், மன்சூர் ஆகிய மூவரும் நிந்தவூர், கல்முனை, சம்மாந்துறை என்ற 10 கிலோ மீற்றர் எல்லைகளுக்கும் இருக்கின்றார்கள்.நஸீர் எம்.பியானால் நிந்தவூரிலிருந்து 08 கிலோமீற்றர் எல்லைக்குள் இருப்பார். அட்டாளைச்சேனையும்-அக்கரைப்பற்றும் அடுத்தடுத்த ஊர்.அக்கரைப்பற்றில் சகோதரர் தவம் இருக்கின்றார்.
2. மட்டக்களப்பு மாவட்டம்
கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் எம்.பீக்கள் அலிசாஹிர் மௌலானா (மு.கா), அமீர்அலி (ஐ.தே.க), ஹிஸ்புல்லாஹ் (ஐ.ம.சு.கூ) மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள்.மாகாண சபை உறுப்பினர்கள் ஷிப்லி பாறூக். மௌலானாவின் இடத்துக்கு வேறு ஒருவர். ஆக இரு மாகாண சபை உறுப்பினர்கள்
3. திருகோணமலை மாவட்டம்
எம்.ஏ.மஹ்றூப் (ஐ.தே.க), இம்ரான் மஹ்றூப் (ஐ.தே.க) இரண்டு; பாராளுமன்ற உறுப்பினர்கள். இவ்விருவரும் மாற்றுக் கட்சியினர்.
மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் – 1.அன்வர் (மு.கா), 2.லாஹீர் (மு.கா)
இப்போது நாம் என்ன முடிவுக்கு வர வேண்டும் என்பதைத் தலைவரும், உயர்பீடமும், தொண்டர்களும் நியாயமான தீர்ப்பை மனசாட்சிப்படி வழங்குங்கள். எந்த மாவட்டம் அரசியல் அதிகாரம் பெற வேண்டும்?
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினூடாக நாம் தேசிய ரீதியில் நியாயமான முறையில் வளரப் போகிறோமா? அல்லது ஊருக்குள் அடங்கப் போகிறோமா?
நல்லதொரு விமர்சனம் இப்படி நடந்தால் மிகவும் நன்றாக இருக்கும் ,எதிர்காலத்தில் நல்ல மாற்றம் வரும்