கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு உரிமை கோரத் தகுதியானவர் யார் ? மீஸான் பார்வை !

எம்.எஸ்.டீன் 
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்த எம்.ஐ.எம்.மன்சூர் திகாமடுல்ல மாவட்டத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டதையடுத்து அவர் வகித்து வந்த அமைச்சுப் பதவி யாரை அலங்கரிக்கப் போகின்றது என்ற கேள்வி கட்சி மட்டத்திலும் போராளிகள் தரப்பிலும் பேசப்பட்டு வருகின்றது.

anwar
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை குழுக்களின் தலைவராக இருந்த ஏ.எம்.ஜெமீல் கட்சியோடு முரண்படாமல் இருந்திருந்தால் அவரே இப்பதவிக்குத் தகுதியானவர் என்ற வாதத்துக்கு மாற்றுக் கருத்து கிடையாது.
இவரில்லாத பட்சத்தில் அடுத்து யார் என்பதுதான் இப்போதுள்ள கேள்வியாகும். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்த மட்டில் ஜெமிலுக்கு அடுத்த நிலையில் உள்ளவரென்றால் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் அன்வர்தான். மு.கா.சார்பாக இரண்டு தடைவகள் தெரிவு செய்யப்பட்டவர்.
புல்மோட்டை அரிசி மலை உட்பட திருமலை மாவட்டத்தின் முக்கியமான இடங்களையும், காணிகளையும் அதிகாரமளிக்கப்பட்ட சில சக்திகள் கபளிகரம் செய்ய முற்பட்ட போதெல்லாம் அதற்கெதிராக சபையில் பெரும் அமளிதுமளியை ஏற்படுத்தி முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஆயிரக் கணக்கான காணிகளைக் காப்பாற்றியவர்.

IMG_5001

 

 துடிப்புள்ள இளைஞர்,கல்வி,மொழி அறிவு என எல்லா வகையிலும் சிறப்புப் பெற்று விளங்குபவர்.அப்படிப்பட்ட ஒருவரை வெற்றிடமாயுள்ள சுகாதார அமைச்சுக்கு நியமனம் செய்வது தொடர்பாக தலைமைத்துவம் கவனத்தில் எடுக்க வேண்டிய விடயமாகும்.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டுள்ளார்.ஏற்கனவே 2001லும் இந்நிலை ஏற்பட்டு தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டார்.

 

மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியுள்ளது.
கடந்த மாகாண சபைத் தேர்தலில் பின்தள்ளப்பட்ட சின்ன மஹ்றூப், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இம்றான் மஹ்றூப் ஆகியோர் இம்முறை தேர்தலில் வெற்றி பெற்று பாரளுமன்றம் செல்லவுள்ளனர்.எந்தவொரு அதிகாரமும் இல்லாதவர்கள் மக்கள் செல்வாக்கைத் தன்னகத்தை தக்க வைத்துள்ள நிலையில் தௌபீக் அதிகாரத்தையும், அமைச்சுப் பதவியையும் வைத்துக் கொண்டு தோல்வி அடைந்துள்ளதைத் தலைமைப் பீடம் மீஸானில் நிறுத்துப் பார்க்க வேண்டும்.
சகோதரர் தௌபீகின்; அணுகு முறைகளினால்தான் திடீர் தௌபீக் உட்பட இன்னும் பலர் முரண்பாடான நிலையில் உள்ளனர் என்பதற்கும் இம்முறை தேர்தலில் அவர்களின் செயற்பாடுகளால் தௌபீக் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படாமல் மக்களால் புறக்கணிக்கப்பட்டமைக்கும் பல நூறு காரணங்கள் கூறப்படுகின்றன.
 தௌபீக்கின் செயலாளர் உட்பட அவரை அண்டியுள்ளவர்கள் மக்களோடு இருக்கவில்லை. என்பதற்கு, இந்தத் தோல்வி முக்கிய எடுத்துக்காட்டாகும்.
திருகோணமலை மாவட்டம் தற்போது மு.காவின் முதுகெலும்பு முறிக்கப்பட்ட மாவட்டமாக இருந்து வருகின்றது.

 

 இம்மாவட்டத்தின் கிண்ணியா, மூதூர் பிரதேசங்களை மையப்படுத்தியே முஸ்லிம்கள் அணிதிரளப்பட்டுள்ளனர்.ஆகவே ஒரு இடைக்காலத்துக்காவது கிண்ணியாவிலிருந்து சுமார் 80 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அன்வருக்கு மு.கா.ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்தாலென்ன என்பது எல்லோராலும் கேட்கப்படும் கேள்வியாகும்.
எச்சந்தர்ப்பத்திலும் மாற்றுத்தரப்புகளிடம் விலை போகாத கொள்கைவாதிக்கு தலைமைத்துவம் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கிப் பார்க்க வேண்டும்.

 

 இதன் மூலம் வெற்றிடமாகவுள்ள திருகோணமலையின் அரசியல் எழுச்சி பெற புதிய உட்பாய்ச்சல்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே போராளிகளின் விருப்பமாகும்.
இவையெல்லாம் கணக்கில் எடுக்கப்படாமல் மாற்றுக்கட்சியிலிருந்து துரத்தப்பட்டு அடைக்கலம் தேடி இக்கட்சிக்குள் (மு.கா)வருபவர்களைத் தலைமைத்துவம் தோளில் ஏற்றக் கூடாது.ஏனெனில் இவர்கள் ஒருநாள் தலைவர் காதைக் கடிப்பார்கள்.
புதிதாக இக்கட்சிக்குள் தஞ்சமடைந்தவர்கள் கடந்த காலங்களில் தம்மிடமிருந்து சிறிய அரசியல் அதிகாரத்தை வைத்தே பெரும் பிழைப்பு நடத்தியவர்கள்.இவர்களைப் பொறுத்த மட்டில் முஸ்லிம்கள் மத்தியில் எதிரியின் எதிரி நண்பனான கதை மட்டும் தான்.

 

புதிதாக நுழைந்தவர்கள் கட்சியின் ஆரம்பகாலப் போராளிகளைக்கூட துரத்துவதற்காக கோள்மூட்டி தலைமைக்குப் பின்னால் சால்வையைப் பிடித்துக் கொண்டு திரிவதை கட்சியின் உயர் மட்டத்தில் இருப்பவரகள் நன்கு புரிந்து வைத்திருக்கின்றனர்.
இந்தக் கட்சியைப் பொறுத்தமட்டில் (மு.கா)கட்சிக்கும் தலைமைத்துவத்துக்கும் போராளிகளுக்கம் அநியாயம் செய்து நடுரோட்டில் கூட குந்த வைத்த ஏவல் பிசாசுகள் எல்லாம் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தியாகிகளான போராளிகளைப் பின்தள்ளிவிட்டு முன்னுக்கு வருவதற்கு மயற்சிகளை மேற்கொண்டு வருவதையும் கட்சியில் உள்ள உயர்பீட உறுப்பினர்கள் நன்கு அறிவர்.
ஆகவே தலைவர் ஹக்கீம் எதிரிகளாக இருந்தவர்களை கட்சிக்குள் பலப்படுத்தி மூத்த போராளிகளைப் பலவீனப்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.