எம்.எஸ்.காரியப்பர் வீதிக்கான கல்வெட்டை இடித்து நொறுக்கிய ஹென்றி மகேந்திரன் கைது!

அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை நகரில் கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை இடித்து நொறுக்கிய டெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட முதன்மை வேட்பாளருமான ஹென்றி மகேந்திரன் இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கல்முனை பிரதான் நெடுஞ்சாலையில், ஐக்கிய சதுக்க சந்தியில் இருந்து பொதுச் சந்தை வரையான பாதைக்கு கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் பெயர் சூட்டப்பட்டு, கடந்த ஒன்பதாம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமதினால் அதனைத் திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகளை கல்முனை மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் மேற்கொண்டிருந்தார்.
எனினும் இது விடயத்தில் தமிழ் சமூகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்த ஆட்சேபனையை கருத்தில் கொண்டு அந்நிகழ்வை முதல்வர் ஒத்திவைத்திருந்தார்.
இந்நிலையில் முன்னதாகவே ஐக்கிய சதுக்க சந்தியில் நிறுவப்பட்டிருந்த எம்.எஸ்.காரியப்பர் வீதிக்கான கல்வெட்டைஅன்றைய தினம் காலை டெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட முதன்மை வேட்பாளருமான ஹென்றி மகேந்திரன் தலைமையிலான குழுவினர் இடித்து நொறுக்கி தரைமட்டமாக்கிச் சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் கல்முனைப் போலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டிருந்த முறைப்பாடைத் தொடர்ந்து ஹென்றி மகேந்திரன் கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்த போதிலும் அவர் ஒரு வேட்பாளர் என்ற ரீதியில் தேர்தல் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கமைவாக  தேர்தல் முடியும் வரை அவ்விடயம் தாமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இன்று திங்கட்கிழமை கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சட்டத்தரணி சகிதம் சென்ற ஹென்றி மகேந்திரன் கைது செய்யப்பட்டு, கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.
இதன்போது 75000 ரூபாவுடன் இரண்டு சரீரப் பிணையில் அவர் விடுதலை செய்யப்பட்டார். இவ்வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் 8 ஆம் திகதி இடம்பெறும் எனவும் நீதிபதி அறிவித்தார்.
 
 xz (26)_Fotor xz (18)_Fotor