சிரிய டமஸ்கஸ் நகருக்கு வெளியிலுள்ள கிளர்ச்சியாளர்கள் பலம்பெற்று விளங்கும் தளங்கள் மீது அரசாங்கப் படையினர் நடத்திய தாக்குதலில் குறைந்தது 12 சிறுவர்கள், 8 பெண்கள் உட்பட குறைந்தது 34 பேர் பலியாகியுள்ளதாக சிரிய மனித உரிமைகள் அவதான நிலையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
அந்நாட்டின் தலைநகருக்கு வட கிழக்கேயுள்ள டோமா பிராந்தியத்தில் சிரிய ஜனாதிபதி பஷார் அல்–அஸாத்தின் படையினர் பீப்பா குண்டுகளை வீசி சனிக்கிழமை தாக்குதல் நடத்தியதிலேயே இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.
மேற்படி தாக்குதலில் இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளின் கீழ் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலில் சில குடும்பங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையுமே இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேற்படி தாக்குதலில் இடிந்து விழுந்த கட்டடமொன்றின் இடிபாடுகளின் கீழ் சிக்கிய நிலையில் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தையொன்று தொடர்பான புகைப்படங்கள் சர்வதேச ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தன.
ஆனால் அந்தக் குழந்தை, அதற்கு ஏற்பட்டிருந்த கடும் காயங்கள் காரணமாக பின்னர் உயிரிழந்துள்ளதாக சிரிய மனித உரிமைகள் அவதான நிலையம் தெரிவிக்கிறது.
அதேசமயம் டோமா பிராந்தியத்தின் ஒரு பகுதியாகவுள்ள கிழக்குக் கோதா பிரதேசத்தை இலக்குவைத்து ஞாயிற்றுக்கிழமை குறைந்தது 11 வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அந்த நிலையம் கூறுகிறது.
கிழக்கு கோதா பிராந்தியத்தில் அரசாங்கப் படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்குமிடையே மோதல்கள் இடம்பெறுவது வழமையாகவுள்ளது.கடந்த 16 ஆம் திகதி டோமா பிராந்தியத்தில் சிரிய அரசாங்கப் படையினர் நடத்திய வான் தாக்குதல்களில் 117 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தனர்.சிரியாவில் 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மோதல்கள் ஆரம்பமானது முதற்கொண்டு இதுவரை 240,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்க ளில் அநேகர் பொதுமக்களாவர்.