இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரின் 5–வது மற்றம் கடைசி டெஸ்ட் போட்டி லண்டனில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் குக் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 481 ரன் குவித்தது.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 149 ரன்னுக்கு ஆல்–அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. ‘பாலோ–ஆன்’ ஆன இங்கிலாந்து அணியை தொடர்ந்து பேட்டிங் செய்யும்படி ஆஸ்திரேலியா கேட்டு கொண்டது. இதையடுத்து 332 ரன் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2–வது இன்னிங்சை விளையாடியது.
இதிலும் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகினர். கேப்டன் குக் மட்டும் போராடி 85 ரன் எடுத்து அவுட் ஆனார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன் எடுத்திருந்தது. ஜோஸ் பட்லர் 29 ரன்னுடனும், மார்க் வுட் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
4 விக்கெட்டுகளை மட்டும் கைவசம் வைத்துகொண்டு, 129 ரன் பின் தங்கியுள்ள நிலையில் இங்கிலாந்து அணி இன்று 4-வது நாள் ஆட்டத்தில் களமிறங்கியது. பீட்டர் சிடில் பந்தில் மார்க் வுட் 6 ரன்கள் எடுத்து எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.
அடுத்து மொயீன் அலி களமிறங்கினார். மொயீன் அலியும், பட்லரும் இணைந்து ரன்களை குவித்தால் மட்டுமே இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க முடியும் என்ற ஒரே நம்பிக்கையில் இங்கிலாந்து அணி இருந்தது. ஆனால் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் அந்த நம்பிக்கையை தகர்த்தனர். பட்லர் 42 ரன்னில் ஆவுட் ஆனார். மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த ஜோடி 2 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் வந்த பிராட்டை, மொயீன் அலியுடன் நீண்ட நேரம் ஜோடி சேர விடாமல் ஆஸ்திரேலியே வீரர் பீட்டர் சிடில் கிளின் போல்ட் செய்தார். வேறுவழி ஏதுமின்றி பந்து வீச்சாளர் பின்-வுடன் ஜோடி சேர்ந்த மொயீன் அலியால் 35 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இங்கிலாந்து அணி 286 ரன்களுடன் தனது 2-வது இன்னிங்சை முடித்தது. இதனால் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பீட்டர் சிடில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இந்த டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தாலும், இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரை 3-2 என கைப்பற்றியது. சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் விருதை ரோஜர்ஸ் (ஆஸ்திரேலியா) மற்றும் ஜோ ரூட் (இங்கிலாந்து) இரு வீரர்களும் பகிர்ந்து கொண்டனர்.