ஆசனங்கள் குறைவடைவதற்கு மஹிந்த ராஜபக்ஷ அந்தக்கட்சியை நெறிப்படுத்த முன்வந்தது தான் மூலகாரணம் !

 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற ஆசனங்கள் குறைவடைவதற்கு மஹிந்த ராஜபக்ஷ அந்தக்கட்சியை நெறிப்படுத்த முன்வந்ததுதான் மூலகாரணம் தான் கருதுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்பொழுதே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,

rauff-hakeem-575-01er
மீண்டும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் நான் ஏனைய மாவட்டங்களுடன் இந்த மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைகளிலும் முழு மூச்சாக ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளேன். என்னுடன் கண்டி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஏனைய ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களுடன் இணைந்து நாம் ஒரு பலமான அணியாக இயங்க இருக்கின்றோம்.
இந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது. இது அக்கட்சியினருக்கு மிகவும் கவலையளிக்கும்.
ஐக்கிய தேசிய கட்சியுடன் எங்களைப் போன்ற ஏனைய கட்சியினர் சிலரும் ஒத்துழைத்து அப்போதைய முன்னாள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் இந்நாட்டின் மிக உயரிய ஜனாதிபதிப் பதவிக்கு தெரிவு செய்தோம். அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியலிலிருந்து ஓய்வு பெற்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கட்சி நடவடிக்கைகளை முழுமையாக கையாள இடமளித்திருக்க வேண்டும்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற ஆசனங்கள் குறைவடைவதற்கு மஹிந்த ராஜபக்ஷ அந்தக்கட்சியை நெறிப்படுத்த முன்வந்ததுதான் மூலகாரணம் என நான் கருதுகின்றேன்.
ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தமது கட்சியை வேறுதலையீடுகள் இன்றி சரிவர நெறிப்படுத்தி, நாம் எதிர்பார்க்கின்ற பலமான தேசிய அரசாங்கத்தினூடாக, யுத்தத்தின் பின்னரான சூழலில் முடியாது போன இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நாட்டை சுபீட்சத்தை நோக்கியும், ஐக்கியத்தை நோக்கியும் முன்கொண்டு செல்வார் என திடமாக நம்புகின்றோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய அரசாங்கத்தை வெற்றிகரமாக முன்கொண்டு செல்வாரென நாங்கள் நம்புகின்றோம். இருபெரும் கட்சிகளும் கூட்டாக, குறைந்த பட்சம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கின்ற அவரது தரப்பைச் சேர்ந்தவர்களையும் இணைத்து, ஒரு தேசிய அரசாங்கத்தை அமைத்து, நாட்டு மக்கள் அனைவருக்கும் சிறந்த சேவையாற்றுவதற்கும், இன்றைய சூழலை மேலும் பயனுள்ளதாக்கி நாட்டில் மனித உரிமைகள் மீறப்படாத நல்லாட்சிக்கு வழிகோலுவோம் எனவும் உறுதிபூணுவோம் என்றார்.