நுவரெலியா மாவட்ட மக்கள் தந்த இந்த வெற்றியை இந்த மக்களின் நல்வாழ்வுக்காக பயன்படுத்த உள்ளேன் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.
ஹட்டனில் இடம்பெற்ற வரவேற்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது,
வடக்குக் கிழக்குத் தவிர்ந்த பிரதேசங்களில் வாழுகின்ற தமிழ் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட தமிழ் முற்போக்குக் கூட்டணி நுவரெலியா மாவட்டத்தில் முழுமையாக வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றிக்கு உறுதுணை புரிந்த தோட்டத் தொழிலாளர்கள், தோட்ட சேவையாளர்கள், தோட்ட உத்தியோகஸ்தர்கள், தோட்ட மருத்துவ உதவியாளர்கள், ஆசிரியர்கள், அரச உத்தியோகஸ்தர்கள், வர்த்தகர்கள், கொழும்பில் தொழில் புரிகின்ற இளைஞர்கள், கிராமத்தவர்கள், முஸ்லிம், சிங்கள மக்கள் உட்பட அனைத்து ஆதரவாளர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அனைத்துத் தரப்பினராலும் பெற்றுக் கொடுக்கப்பட்ட இந்த வெற்றியை எதிர்வரும் 5 வருட காலத்தில் மக்களுக்கு முழுமையாக சேவையாற்றுவதற்கு பயன்படுத்த உள்ளேன்.
நூறு நாள் வேலைத் திட்டத்தில் நாம் முன்னெடுத்த தனி வீட்டுத் திட்டம் குறித்து மக்களுக்கு இன்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தினை தொடர்ந்து முன்னெடுத்து தோட்டப் பகுதிகளில் லயன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளேன்.
அத்துடன் மலையக இளைஞர் யுவதிகளுக்கு பொருத்தமான வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க உள்ளேன். தோட்டப் பகுதிக்கான பத்தாண்டு அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக தோட்டப் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக ஏற்படுத்த உள்ளேன்.
ஆகவே எனக்கு கிடைத்துள்ள இந்த வெற்றியைத் தலைக் கணமாக எடுத்துக்கொள்ளாமல் அனைத்து தரப்பினரையும் ஆதரித்துக் கொண்டு உரிய தரப்பினரின் ஆலோசனையையும் பெற்றுக் கொண்டு எனது சேவையை முன்னெடுப்பேன், என்றார்.
இதேவேளை, ´இருபது வருட காலத்திற்கு பின் கிடைத்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை மக்கள் பணிக்காக அர்ப்பணிப்பேன். எனக்கு கிடைத்திருக்கும் இவ் வாய்ப்பை பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மிளிரும் வகையில் செயற்படுவேன்.´ என இருபது வருட காலத்திற்கு பின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக கண்டி மாவட்டத்தில் இருந்து தெரிவான ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவர் வேலுகுமார் தெரிவித்தார்.
அவர் மேலும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
கண்டி மாவட்டத்தின் இருபது வருட கால அரசியல் வரலாறு இன்று மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றது. இதற்க்கு அடிப்படையாக அமைந்தது எமது ஒற்றுமையே ஆகும். நாம் இம்முறை தனிப்பட்ட கட்சிகளாக அல்லாமல் கூட்டணியாகவே களம் இறங்கினோம்.
தலைவர் மனோ கணேசனின் தலைமையில் திகாம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன் உடன் தமிழ் முற்போக்கு கூட்டணியாக செயற்பட்டோம். அதன் மூலம் கொழும்பு, கண்டி, பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுத்திருக்கின்றோம்.
இது வடக்கு கிழக்கிற்கு வெளியில் வாழுகின்ற தமிழ் பேசும் மக்களின் அரசியல் பலத்தை எடுத்துகாட்டுகின்றது. எதிர்வரும் எட்டாவது பாராளுமன்றத்தை தீர்மானிக்கும் சக்திகளில் ஒன்றாக த.மு.கூ இன்று எளிர்ச்சி பெற்றிருக்கின்றது.
கண்டி மாவட்ட தமிழர்களுக்கு இருந்த அரசியல் பின்னடைவு இன்று துடைத்தெறிய பட்டிருக்கின்றது. எமக்கு 62265 விருப்பு வாக்குகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றது. இது கண்டி மாவட்ட வரலாற்றில் தமிழ் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதி கூடிய விருப்பு வாக்குகள் ஆகும்.
எனக்கு இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுதந்த தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள சகோதரர்களுக்கு எனதும், எனது சமூகத்தினதும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கின்றேன்.
இருபது வருட காலத்திற்கு பின் கிடைத்திருக்கும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை மக்கள் பணிக்காக அர்ப்பணிப்பேன். எனது பணிகள் இன, மத பேதமின்றி தொடரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ் அறிய வாய்ப்பை பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மிளிரும் வகையில் செயற்படுத்துவேன்.