மத்தியதரைக் கடலைக் கடந்து ஆபத்து மிக்க கடல் பயணங்களை மேற்கொள்ளும் குடியேற்றவாசிகளை தடுத்து நிறுத்துவது தொடர்பான வழிமுறைகள் தொடர்பில் கலந்துரையாடும் முகமாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பிரஸல்ஸ் நகரில் வியாழக்கிழமை இடம்பெற்ற அவசர உச்சிமாநாட்டில் பங்கேற்றனர். தகுதியுடைய பாதுகாப்புத் தேவைப்பாடுடைய குடியேற்றவாசிகளை மீளக் குடியமர்த்துவது தொடர்பில் 5,000 இடங்களை ஒதுக்கீடு செய்தல், லிபியாவிலிருந்து மேற்கொள்ளப்படும் ஆட்கடத்தல்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை உள்ளடங்கலான பிரேரணைகள் இந்த உச்சிமாநாட்டில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. லிபிய கடற்கரைக்கு அப்பால் குடியேற்றவாசிகளை ஏற்றி வந்த படகொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் 800 பேருக்கும் அதிகமானோர் மூழ்கியுள்ள நிலையிலேயே மேற்படி உச்சிமாநாட்டை நடத்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேற்படி படகு அனர்த்தம் மூலம் இந்த வருடம் மத்தியதரைக்கடலை கடக்கும் முயற்சியின் போது பலியான குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை 1,750 ஆக உயர்ந்துள்ளது. இந்த வருடத்தில் மட்டும் மத்தியதரைக்கடலைக் கடந்து 21,000 பேருக்கும் அதிகமானோர் இத்தாலியை சென்றடைந்துள்ளனர். மேற்படி ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நேரடி நடவடிக்கையை முன்னெடுக்க இத்தாலிய பிரதமர் மற்றியோ ரென்ஸி அழைப்பு விடுத்துள்ளார். அவர் ஆட்கடத்தல்காரர்களை 21 ஆம் நூற்றாண்டின் அடிமை வியாபாரிகள் என விமர்சித்துள்ளார். ஆட்கடத்தல்காரர்களால் பயன்படுத்தப்படும் படகுகளை அவர்கள் உபயோகிப்பதற்கு முன்னர் அடையாளம் கண்டு கைப்பற்றி அழிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் உறுதிபூண்டுள்ளதாக மேற்படி வியாழக்கிழமை உச்சிமாநாட்டில் வெளியிடப்பட்ட பிரேரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியேற்றவாசிகள் விவகாரம் குறித்து சர்வதேச சட்டத்திற்கு அமைவாக சாத்தியமான பாதுகாப்புக் கொள்கைத் திட்டமொன்றை உடனடியாக தயார் செய்ய ஐரோப்பிய ஒன்றிய கொள்கைத் தலைவர் பெட்டெறிக்கா மொகெரினி கூறினார். அத்துடன் இது தொடர்பான ஏனைய திட்டங்களில் லிபிய அரசாங்கத்தை ஸ்திரப்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகள் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பது போன்றவை உள்ளடங்குகின்றன. மேலும் ஐரோப்பாவை வந்தடையும் குடியேற்றவாசிகளை என்ன செய்வது என்பது தொடர்பிலும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் கடந்த திங்கட்கிழமை குடியேற்றவாசிகள் கடலில் மூழ்கி உயிர் இழப்பதைத் தவிர்க்க 10 அம்ச திட்டமொன்றை முன்வைத்திருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மத்தியதரைக்கடல் பிராந்தியத்திலான மீட்பு சேவையான திறைட்டனை செயற்படுத்தும் புரொன் டெக்ஸ் நிறுவனத்திற்கான நிதியை அதிகரித்தல், திறைட்டனின் செயற்பாட்டு பிர தேசத்தை விரிவுபடுத்தல், புகலிடக்கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் முகமாக இத்தாலி மற்றும் கிரீஸைச் சேர்ந்த உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமித்தல், அனைத்து குடியேற்றவாசிகளதும் கையடை யாளத்தைப் பெறுதல் என்பவற்றை மேற்படி திட்டம் உள்ளடக்கியுள்ளது. கரையோர காவல் படையினரால் புதன் கிழமை மட்டும் வெவ்வேறு படகுகளில் வந்த 500 க்கு மேற்பட்ட குடியேற்றவாசி கள் மீட்கப்பட்டு கரைக்கு அழைத்து வரப் பட்டனர். |