இனி மஹிந்த ராஜபக் ஷவிற்கு இந்நாட்டின் பிரதமராகவே முடியாது – விஜித ஹேரத்

Maithripala-Mahinda

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு மஹிந்த ராஜபக் ஷவிற்கு கிடைத்தாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் விருப்பம் யாருக்குள்ளதோ அவரே பிரதமராக நியமிக்கப்படுவார். இது அரசியலமைப்பிலும் 19 ஆவது திருத்தத்திலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதெனத் தெரிவித்த ஜே.வி.பி. ஜனாதிபதி மைத்திரி- மஹிந்தவுக்கு அனுப்பிய கடிதம் இலங்கை அரசியலில் பாரியதொரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஜே.வி.பி தெரிவித்தது. 

பெலவத்தையில்   வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஜே.வி.பி.வியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் எம்.பியுமான விஜித ஹேரத் இவ்வாறு தெரிவித்தார்.

இவர் இங்கு மேலும் உரையாற்றுகையில்,

பாராளுமன்றத்தில் பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டுமென எம்.பி.யொருவருக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்தாலும் பிரதமரை ஜனாதிபதியே நியமிப்பார் என அரசியலமைப்பில் 43ஆவது ஷரத்தில் 4 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் 42 ஆவது ஷரத்தில் 4 ஆம் பிரிவில்  பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்தாலும் ஜனாதிபதியின் விருப்பம் எவருக்குள்ளதோ அவரையே ஜனாதிபதி பிரதமராக நியமிப்பார் என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே எவர் எதைச் சொன்னாலும் மஹிந்தவை முன்னிறுத்தி விருப்பு வாக்குகளை பெற முயற்சிக்கும் கூட்டத்திற்கும் ஜனாதிபதியின் கடிதம் மரண அடிகொடுத்துள்ளது. இனி மஹிந்த ராஜபக் ஷவிற்கு இந்நாட்டின் பிரதமராகவே முடியாது.

கடந்த சில நாட்களாக ஜே.வி.பிக்கு வாக்களித்தால் மஹிந்த பிரதமராகி விடுவாரென்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. இன்று ஜனாதிபதியின் கடிதத்தோடு இலங்கை அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மஹிந்தவால் பிரதமராக முடியாது என்பது இன்று தெட்டத் தெளிவாகியுள்ளது. மஹிந்த என்ற தனிநபர் மீது எமக்கு எந்தவிதமான ‘கோபமும்’ கிடையாது. ஆனால் மஹிந்தவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் ஊழல் மோசடிகளையும் அவரோடிருந்த திருட்டுக் கும்பளையும் தான் எதிர்த்தோம். எனவே தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவை தோல்வியடையச் செய்தோம்.

இந்தப் பொதுத்தேர்தலிலும் மஹிந்தவும் அவர் சார்ந்த குழுவும் தோல்வியடைய வேண்டுமென்பதே எமது இலக்காகும் என்றும் விஜித ஹேரத் தெரிவித்தார்.