துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
ஒருவரிடம் தலைமை தாங்கும் ஆளுமை இருக்கின்றதா? இல்லையா? என்பதனை பல விடயங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்.ஒருவரின் வாய் மூலம் வெளிப்படும் வார்த்தைகள்,கொள்கைகள் மூலம் ஒருவரிடம் தலைமை தாங்கும் ஆளுமை உள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம்.அண்மையில் அமைச்சர் றிஷாத் வெளியிட்ட ஊடக அறிக்கையில் “அம்பாறை மாவட்டத்தில் தனக்கு இரண்டு ஆசனங்கள் கிடைக்குமாக இருந்தால் கரையோர மாவட்டத்தினைப் பெறாமல் அமைச்சுப் பதவிகளினை ஏற்க மாட்டேன்.அது வரை எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்வேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் கரையோர மாவட்டம் என்பது மறைந்த மு.காவின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் கனவுகளில் ஒன்றாகும்.இதனைப் பெறுவதற்கு மு.கா தன்னாலான முயற்சிகளினை மேற்கொண்டு வருகின்ற போதும் அதனால் இற்றை வரை பெற முடியவில்லை.இக் கரையோர மாவட்டத்தினை நோக்கி மு.கா காய் நகர்த்திய ஒவ்வொரு சந்தர்ப்பமும் அது பேரின வாதிகளினால் இன வாத முலாமிடப்பட்டு பூதாகரமாக்கப்பட்டிருந்தது.கரையோர மாவட்டமானது அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் தேவை என எச் சந்தர்ப்பத்திலும் இற்றை வரை கிஞ்சித்தேனும் வாய் திறக்காத அமைச்சர் றிஷாத் அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் கேட்க வந்தவுடன் கரையோர மாவட்டம் பற்றி கதைக்க வருவது அவரின் அரசியல் காய் நகர்த்தலின் ஒரு அங்கமாகவே பார்க்க முடிகிறது.உண்மையில் இவ்விடயத்தில் இவருக்கு அக்கரை இருப்பின் எப்போதே இது பற்றி தனது மௌனத்தினை கலைத்திருப்பார்.
“அம்பாறை மாவட்டத்தில் தனக்கு இரண்டு ஆசனங்கள் கிடைக்குமாக இருந்தால் கரையோர மாவட்டத்தினைப் பெறாமல் அமைச்சுப் பதவியினை ஏற்க மாட்டேன்.” என அமைச்சர் றிஷாத் கூறி இருப்பதானது அவரின் அரசியல் ஆதாய நோக்கத்தினை மேலும் தெளிவாக புடை போட்டுக் காட்டுகிறது.மக்களின் தேவைக்கு எது வித நிபந்தனையும் இன்றி தனக்கு இயலுமான வரை தன்னாலான முயற்சிகளினை செய்பவரே உண்மையான தலைமைத்துவம் தாங்கும் பண்பு கொண்டவர்..கரையோர மாவட்டமானது அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் அடிப்படைத் தேவை என்றால் அதனை தனக்கு இருக்கும் ஆற்றலினைக் கொண்டு உண்மையான தலைமைத்துவப் பண்பு கொண்டவர் முயற்சிக்க வேண்டும்.அமைச்சர் றிஷாத் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் தேவையினை பூர்த்தி செய்ய அம்பாறையில் 2 ஆசனம் கேட்டு நிபந்தனையினை முன் வைத்திரிப்பதானது அவரின் தலைமைத்துவப் பண்பினை கேள்விக்குட்படுத்துகிறது.தன்னை ஒருவரும் தனது பிரதிநிதியாக ஏற்காவிட்டாலும் கூட முஸ்லிம் மக்களின் தேவைக்காக போராடுபவரே உண்மையான தலைமைத்துவப் பண்பு கொண்டவர்.ஆனால்,அமைச்சர் றிஷாத்தின் இச் செயற்பாட்டினை என்ன சொல்வது?
அம்பாறை மாவட்டத்தில் அமைச்சர் றிஷாத்திற்கு ஒரு ஆசனம் கூட உறுதிப்படுத்தப்படாத நிலையில் இரு ஆசனம் கிடைத்தால் கரையோர மாவட்டத்தினை பெற்றுத் தருகிறேன் எனக் கூறி இருப்பதானது ஊடகத் தாகத்திற்கு நீர் புகட்டுமே தவிர அதனால் வேறு எதுவும் நிகழப் போவதில்லை.அம்பாறை மாவட்டத்தில் அமைச்சர் றிஷாத்திற்கு இரு ஆசனம் கிடைக்கும் போதே கரையோர மாவட்டத்தினை பெறலாம் என்ற நிர்பந்தம் இருந்தா இவரின் கூற்றினை மறுக்காமல் ஏற்காலாம்.ஆனால்,கரையோர மாவட்டத்தினைப் பெற அம்பாறை மாவட்டத்தில் மயில் ஆசனம் பெற வேண்டிய அவசியமில்லை.அல்லது கரையோர மாவட்டக் கோரிக்கையினை சாதிக்க தனக்கு குறித்தளவு பாராளுமன்ற உறுப்பினர் தேவை என்றால் அவர் குறித்த பேரம் பேசலுக்கு யூக அடிப்படையில் கணிப்பிட்ட பாராளுமன்ற எண்ணிக்கை தனக்கு கிடைத்தால் பெற்றுத் தருகிறேன் எனக் கூறி இருக்கலாம்.ஆனால்,அம்பாறை மாவட்டத்தில் இரு உறுப்பினர் தாருங்கள் கரையோர மாவட்டம் பெற்றுத் தருகிறேன் என அமைச்சர் றிஷாத் கூறி இருப்பதானது அவரின் தலைமைத்துவப் பண்பினை கேள்விக்குட்படுத்துகிறது.”தான் சேவை செய்வது தன்னை அங்கீகரித்தவர்களுக்கே” என்பதனையே இவரின் இக் கூற்று கூறி நிற்கின்றது.சில வேளை இவர் தனக்கு ஒரு உறுப்பினர் கிடைத்தால் கிடைக்கும் அந்த குறித்த பிரதேசத்தினை மாத்திரம் தனது பார்வைக்குள் எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.