பழுலுல்லாஹ் பர்ஹான்
தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைய மாட்டோம் என்கின்ற செய்தி மிகவும் கவலையளிப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
நேற்று 12 புதன்கிழமை மட்டக்களப்பு ஆயித்தியமலை கிறிஸ்தவ தேவாலயத்தில் அதன் பாதிரியார் தலைமையில் இடம்பெற்ற விஷேட சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதன் ஊடாக தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று கடந்த காலங்களில் பேசப்பட்ட விடயத்தை அறிந்து நாங்கள் மிகவும் சந்தோஷமடைந்திருந்தோம்.
ஏனென்றால் அவர்கள் அரசாங்கத்துடன் இணைகின்ற போது குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தியிலே கணிசமான அளவு முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பாத்திருந்தோம்.
ஆனால் இன்று மீண்டும் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணுகின்ற வரை அரசாங்கத்துடன் இணைய மாட்டோம் என்ற செய்தியையிட்டு நாங்கள் மிகவும் கவலையடைகின்றோம்.
இதன் மூலமாக தொடர்ந்தும் எதிர்ப்பு அரசியலை செய்கின்ற பொழுது தமிழ் பிரதேசங்களும் தமிழ் மக்களும் அபிவிருத்தியில் முற்றாக புறக்கணிக்கப்படலாம்.
எனவே தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்கின்ற அதே நேரம் அரசாங்கத்திற்கும் வாக்களித்து அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவு செய்;யப்படுவதன் ஊடாக இந்த மாவட்டத்தை கட்டியெழுப்புவதற்கு உதவி செய்ய வேண்டுமென்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்.
மேற்படி விஷேட சந்திப்பில் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உட்பட ஆயித்தியமலை கிறிஸ்தவ தேவாலயத்தின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.