முஸ்லிம் என்ற தேசிய அடையாளத்தையே அழிக்க துணிந்தவர்களால் முஸ்லிம் மக்களுக்கு எப்படி தலைமை வழங்க முடியும்?

முகம்மத் இக்பால்

 

ஒரு இனத்தின் அடையாளம் என்பது உயிரிலும் மேலானதும், விலைமதிக்க முடியாததுமாகும். அந்த அடையாலதுக்காகவே உலகில் எத்தனையோ யுத்தங்களும், போராட்டங்களும், அழிவுகளும் இடம்பெற்றது. இன்னமும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.

எமது நாட்டில் அன்று எட்டு சதவீதமாக முஸ்லிம்கள் வாழ்ந்தும் ஒரு தேசிய இனம் என்ற அங்கீகாரம் முஸ்லிம்களுக்கு கிடைத்திருக்கவில்லை. வட கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமிழ் ஆயுத இயக்கங்களிலும், தேசிய கட்சிகளிலும் ஏனைய மாகாணங்களில் வாழ்ந்தவர்கள் ஐ.தே.கட்சியிலும், ஸ்ரீ.ல.சு.கட்சியிலும் என சிதறிக்கிடந்தார்கள். முஸ்லிம்களுக்கென்று தனியான ஒரு தேசிய அரசியல் அடையாளம் இருக்கவில்லை.  

இந்நாட்டில் சிறுபான்மை இனமாக தமிழர்கள் மட்டுமே உலகிற்கு அடையாளப் படுத்தப்பட்டிருந்தனர். முஸ்லிம்களும் தமிழ் தேசியத்தினுள்ளேயே  உள்ளடக்கப்பட்டிருந்தனர். இந்திய – இலங்கை ஒப்பந்தம் வரையிலான எந்தவொரு ஒப்பந்தத்திலும் முஸ்லிம்கள் கணக்கிலெடுக்கப்படவில்லை.

இந்த நிலையில்தான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் அரசியல் கட்சியை மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் தோற்றுவித்து இகட்சியின்கீழ் முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்தினார். இதன்பின்புதான் இந்நாட்டில் முஸ்லிம்கள் ஒரு தேசிய இனமாக வாழ்கின்றார்கள் என்பது வெளி உலகத்துக்கு தெரிய வந்தது. அத்துடன் தேசிய இனம் என்ற அங்கீகாரம் சர்வதேசரீதியில்  எமக்கு  கிடைத்தது. 

தலைவர் அஷ்ரபின் மறைவிற்கு பின்பு, தலைவர் ஹக்கீம் அவர்களிடம் அரசியல் முகவரி பெற்ற பலர் தங்களது தனிப்பட்ட பணம், பதவி, புகழ்  போன்ற சுயலாபங்களுக்காக எவ்வளவோ கஷ்டங்களுக்கும், தியாகங்களுக்கும் மத்தியில் உருவாக்கப்பட்ட முஸ்லிம்களின் தேசியத்தை அழித்து சிங்கள பேரினவாதிகளிடம் அடகுவைக்க முயற்சித்தனர்.

2003 இல் புலிகளுடனான சமாதான பேச்சுவார்த்தைக்காக தலைவர் ஹக்கீம் நோர்வே சென்றிருந்தபோது முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளராக இருந்த அதாஉல்லா அவர்கள் கட்சியின் தலைவர் ஹகீமை தலைமைப்பதவியில் இருந்து நீக்கிவிட்டு சந்திரிக்காவின் அனுசரணையோடு, தான் முஸ்லிம் காங்கிரசின் தலைவராக பிரகடனம் செய்ய எடுத்த சதி முயற்சி தோல்வி அடைந்ததனால், முஸ்லிம் காங்கிரசில் இருந்து வெளியேறி “தேசிய முஸ்லிம் காங்கிரஸ்” எனும் கட்சியை உருவாக்கினார்.

அதையும்விட ஒரு படிமேல் சென்று, ரிசாத் பதியுதீன் அவர்கள் “சண்டே லீடர்” எனும் ஆங்கிலப் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் “குமாரி குரே” எனும் சிங்களப் பென்னை தலைவர் ஹக்கீமுடன் தொடர்புபடுத்தி தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் அவமானப்படுத்தி, முஸ்லிம் காங்கிரஸ் தலைமையை கைப்பெற்ற எடுத்த முயற்சி தோல்வி அடைந்ததனால் அதி உயர் பீட உறுப்பினர்கள் பலரை சேர்த்துக்கொண்டு கட்சியில் இருந்து வெளியேறி “அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்” எனும் கட்சியை உருவாக்கினார்.

இவர்கள் இருவரும் தலைவர் ஹக்கீமினால் வளர்க்கப்பட்டவர்கள். வளர்ந்தவுடன் தன்னை வளர்த்த தலைவர் மீது பொறாமையும், தலைமைப்பதவி மீது இவர்கள் இருவருக்கும் ஆசையும்  வந்துவிட்டது. அதனால்தான் தலைவரின் மார்பின் மேல் பாய்ந்து தோல்வியடைந்தார்கள். செய்கின்ற சதிமுயற்சிகள் எல்லாம் செய்துவிட்டு அதனை மக்களிடம் நியாயப்படுத்துவதற்காக தலைவர் ஹக்கீம் மீது அபாண்டமான வீண்பழிகளை சுமத்துவது இப்படிப்பட்டவர்களுக்கு கைவந்த கலை.    

தாங்கள் எடுத்த முயற்சி தோல்வி அடைந்ததனால் இவர்கள் இருவரும் சர்வாதிகாரி மஹிந்த ராஜபக்சவுடன் சேர்ந்துகொண்டு முஸ்லிம் காங்கிரசை எப்படியும் அழிப்பதிலேயே குறியாக இருந்தார்கள். அந்தவகையில் ஒரு இனத்தின்பேரில் அல்லது மதத்தின் பெயரில் அரசியல் கட்சிகள் இருக்கக்கூடாது என்று ஒரு சட்டத்தை இயற்றுவதற்கு மகிந்த ராஜபக்ஸ அவர்கள் முயற்சித்தபோது மகிந்தவுடன் பங்காளியாக இருந்த டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான் போன்றவர்களின்  எதிர்ப்பினாலும், முஸ்லிம் காங்கிரசும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் இப்பிரச்சினையை சர்வதேசம் வரைக்கும் கொண்டுசென்று அதனால் இந்தியா போன்ற சர்வதேச நாடுகளின் தலையீட்டினாலும் அத்திட்டம் மகிந்தவினால் கைவிடப்பட்டது.

இதில் வேடிக்கை என்னவென்றால் மகிந்தவினால் சட்டம் இயற்றமுன்பே அதாஉல்லாவும், ரிசாத் பதியுதீனும் தங்களது கட்சியில் இருந்த “முஸ்லிம்” என்ற தனது இனத்தின் அடையாளத்தை நீக்கிவிட்டார்கள். அதாவது அதாஉல்லா அவர்கள் தேசிய காங்கிரஸ் என்றும், ரிசாத் பதியுதீன் அவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்றும் தங்களது கட்சியின் பெயரை மாற்றிவிட்டார்கள்.

முஸ்லிம் என்ற அடையாளதுக்காகதான் முஸ்லிம் காங்கிரசை ஆதரிக்கின்றார்கள். எனவே அந்த அடையாளத்தை அழித்தால் முஸ்லிம் மக்கள் முஸ்லிம் காங்கிரசை நாடமாட்டார்கள் என்ற எண்ணம் இந்த இருவருக்கும் இருந்ததனாலும், சிங்கள மேட்டுக்குடிகளின் நெருக்கமான உறவுகள் இவர்களுக்கு கிடைத்ததனால் “முஸ்லிம்” என்ற சொற்பதம் தாங்கிய கட்சியை கொண்டு செல்லும்போது தங்களை ஒரு இனவாதியாக சிங்களவர்கள் நோக்குவார்கள் என்ற காரணத்தினாலும் இப்படியான ஆலோசனைகளை மஹிந்த ராஜபக்சவுக்கு இவர்கள் இருவரும் வழங்கினார்கள்.

எனவே தங்களது கட்சிக்கு தான்சார்ந்த இனத்தின் அடையாளத்தை அடையாளப் படுத்துவதற்கே துணிவில்லாத இவர்களால் முஸ்லிம் சமூகத்துக்கு தேசிய தலைமை என்ற அந்தஸ்தை எப்படி வழங்க முடியும்? நாட்டுக்கு வெளியில் இருந்து பார்க்கும்போது இவர்கள் எந்த இனத்தினை பிரதி நிதித்துவப்படுத்துகிறார்கள் என்று அடையாளப்படுத்துவது? இவர்களது கொள்கை என்ன? இவர்களது கட்சிக்கு கட்டமைப்பு இருக்கின்றதா? முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபக தலைவர் மரணித்தார். அதன்பின்பு தலைவராக ஹக்கீம் அவர்கள் தெரிவானார். மனிதர் என்ற வகையில் ஹகீம் அவர்கள் மரணித்தால் வேறு ஒருவர் முஸ்லிம் காங்கிரசுக்கு தலைமை வகிப்பார். ஆனால் அதாஉல்லா, ரிசாத் பதியுதீன் ஆகியோர் மரணித்தால் அத்துடன் அவ்விரு கட்சிகளும் அஸ்தமித்துவிடும்.   

தமிழ் மக்களினால் துரோகி என்று முத்திரை குத்தப்பட்ட டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான் போன்றவர்கள், மகிந்தவுடன் என்னதான் தேனிலவு கொண்டாடினாலும் தங்களது இனத்தின் அடையாளத்தை விட்டுக்கொடுக்க அவர்கள் உடன்படவில்லை. எனவே துரோகி என்ற இந்த இருவருடனும் ஒப்பிடுகையில் அதாஉல்லா, ரிசாத் பதியுதீன் போன்றவர்கள் மகாதுரோகிகளாவார்.  

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது