முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நகைச்சுவையாளராக மாறி இருப்பதாக அமைச்கர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு விதமான அப்பாவித்தனமான கருத்துக்களை வௌியிடுவதே இதற்கு காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ரக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் மரணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி தற்பொழுது முதலைக் கண்ணீர் வடிப்பதாகவும் தெரிவித்தார்.
நேற்றிரவு தெகடன பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
வஸீம் தாஜுதீன் தேசிய அணியின் வீரர். நாங்கள் கூறினோம் இது கொலையென்று. இப்பொழுது மஹிந்த ராஜபக்ஷ கூறுகின்றார் அவர் ஆட்சிக்கு வந்தால் இது குறித்து விசாரணை செய்வதாக.
வஸீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டது 2012ம் ஆண்டு. மஹிந்த ராஜபக்ஷ 2014 இறுதி வரை பதவியில் இருந்தார்.
ஆனாலும் அவர் இது தொடர்பில் எந்த விசாரணைகளும் மேற்கொள்ளவில்லை.
அதேபோல் மீண்டும் யுத்தம் ஒன்று வரப் போவதாக கூறி மக்களை பயமுறுத்துகின்றார்.
ஏன் இவ்வாறான பொய்களை கூறி இனவாதத்தை தூண்டி மீண்டும் இந்த நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்ல பார்க்கின்றீர் என்றும் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.