தமிழரான சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் புதிய பிரதம நிறைவேற்றதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டுள்ளார். 43 வயதான பிச்சை சென்னையைச் சேர்ந்தவர்.
சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் படித்த இவர் பின்னர் ஐ.ஐ.டி. கரக்பூரில் பொறியியல் பட்டமும், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டமும், பென்சில்வேனியாவில் உள்ள வார்டன் கல்லூரியில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றவர்.
கூகுள் நிறுவனத்தில் சேரும் முன் மெக்கென்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார். 2004ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார்.
தற்போது தலைமை துணைத்தலைவராக இருக்கும் இவர், ஆண்ட்ராய்ட், கூகுள் குரோம், கூகுள் என்ஜினியரிங், ஆப்ஸ், ஜிமெயில், கூகுள் டோக்ஸ் உள்ளிட்ட பிரிவுகளைக் கவனித்து வந்தவர்.
2008ம் ஆண்டு பிச்சை தலைமையிலான குழு தான் குரோம் பிரவுசரை உருவாக்கியது. இந் நிலையில் கூகுள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த அதன் நிறுவனர் லாரி பேஜ் கவனித்து வந்த கூகுளின் சர்ச். கூகுள் பிளஸ், வர்த்தகம், விளம்பரம், கூகுள் மேப்ஸ், யூடியூப், ஆப்ஸ் மற்றும் கட்டமைப்பு ஆகிய பிரிவுகளை இனி சுந்தர் பிச்சை நிர்வகிப்பார்.
இதில் கூகுள் சர்ச் மற்றும் கூகுள் விளம்பரம் ஆகியவை தான் கூகுளின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் கூகுளின் எதிர்கால அதி உயர் தொழில்நுட்பப் பிரிவுகளான காலிகோ, எக்ஸ் லேப்ஸ், உயிரியல் தொழில்நுட்பம் ஆகியவை கூகுளில் இருந்து பிரிக்கப்பட்டு ஆல்பபெட் என்ற பெயரில் தனி நிறுவனமாக உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தப் பிரிவை இனி லாரி பேஜ் கவனிப்பார். கூகுளின் முதலீட்டு நிறுவனமும் லாரி பேஜ் வசம் இருக்கும். அதே நேரத்தில் நிர்வாகரீதியில் ஆல்பபெட் நிறுவனத்தின் கீழ் கூகுள் இயங்கும்.
பிச்சையின் நியமனம் மூலம் உலகின் சிறந்த இரண்டு நிறுவனங்களான மைக்ரோசொப்ட், கூகுள் ஆகியவற்றின் தலைமை பிரதம நிறைவேற்றதிகாரிகளாக இந்தியர்கள் பொறுப்பில் உள்ளனர்.