கல்முனை ஐக்கிய சதுக்கத்தின் பூர்த்தியடைந்துள்ள முதற்கட்ட அபிவிருத்தித் திட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் அவர்களின் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இதனைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் உட்பட மற்றும் பல முக்கிய அரசியல் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் அவர்களின் கருத்திட்டத்தில் உருவான இந்த ஐக்கிய சதுக்கம் சுமார் இரண்டு கோடி ரூபா செலவில் கல்முனை மாநகர சபையினால் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் ஆரம்பக்கட்ட நிர்மாணப் பணிகளுக்கு கொய்கா செயற்றிட்டத்தின் கீழ் ஆசியா பவுண்டேஷன் 5 மில்லியன் ஒதுக்கீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய சதுக்க திட்டத்தின் கீழ் கல்முனை சந்தாங்கேணி மைதானத்திற்கான பார்வையாளர் அரங்கு அமைவதுடன் வர்த்தக கடைத் தொகுதி, உணவகம் மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இரவு நேரத்திலும் கல்முனை நகரம் பொது மக்கள் மற்றும் பயணிகளின் பயன்பாட்டுக்கு ஏற்றதாக மாற்றியமைக்கப்படவுள்ளது.
அத்துடன் நீண்ட காலமாக மிக மோசமான நிலையில் காணப்பட்ட கல்முனை தனியார் பஸ் நிலையம் சகல வசதிகளும் கொண்ட வாகனத் தரிப்பிடமாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.
இதற்கு மேலதிகமாக ஐக்கிய சதுக்க முற்றத்தில் அமானா வங்கியின் அனுசரணையுடன் அதி நவீன பஸ் தரிப்பிடங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் இந்த ஐக்கிய சதுக்கத்தில் வாகனங்களில் இருந்தவாறே பயணிகள் பணப் பரிமாற்றத்தை மேற்கொள்வதற்காக Drive Through ATM ஒன்றை அமானா வங்கி அமைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை இதனைத் தொடர்ந்து கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தின் பிரதான நுழைவாயிலுக்கு கல்முனை பட்டின சபையின் முதலாவது தவிசாளர் (1946) மர்ஹூம் எம்.எல்.எம்.இஸ்மாயில் காரியப்பரின் பெயர் சூட்டப்பட்டு அதற்கான நினைவுப்படிகமும் இன்று திரை நீக்கம் செய்யப்பட்டது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இதனைத் திரை நீக்கம் செய்து வைத்தார்.