பிரதமர் ரணில் கல்முனையில் ஆற்றிய உரை!

பைஷல் இஸ்மாயில் 

நாட்டில் தொழில் வாய்ப்பு அற்றுள்ள இளைஞர், யுவதிகளுக்கு 60 மாதங்களுக்குள் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கு பிரதான திட்டம் வகுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும், தேசிய நீர்வழங்கள், வடிகாலமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான றஊப் ஹக்கீம் தலைமையில் நேற்று (09) கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். 
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு குழுவொன்று அமைக்கப்படும். 10 வருடங்களுக்கு மேல் அரசாங்கக் காணிகளில் குடியிருப்பவர்களுக்கு நிரந்தர காணி உறுதிப்பத்திரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன் எனவும் இந்த நல்லாட்சி அரசில் மக்களுக்கு என்னென்ன அபிவிருத்திகள் செய்ய முடியுமோ அவை அணைத்தையும் செய்ய திட்டமிட்டுள்ளேன். அத்துடன் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளேன். 
அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளுக்கு அமைய  அமைச்சர் கருஜயசூரியவின் ஒப்புதலுடன் சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபையை உருவாக்குவேன். கல்முனை பிரதேசத்தில் முஸ்லிம்கள் புராதன காலந்தொட்டு வசித்து வருவதால், பிரதான திட்டத்துக்குள் கல்முனையை உள்வாங்கியுள்ளேன். மகாவலி திட்டத்தின் மூலம் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 18 ஆயிரம் ஹெக்டேயரில் வேளாண்மை செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளோம். 
இந்த நாட்டிலுள்ள சகல மாகாணங்களையும் இணைத்து 2,500 கிராமங்களாக பிரித்து இதனை முன்னேற்றுவதற்கான பாரிய திட்டமொன்றை உருவாக்கி ஒவ்வொரு கிராமத்துக்கும் பொருளாதார மத்திய நிலையங்களை உருவாக்குவதற்கும் மிக முக்கியமாக மீன்பிடித் தொழிலுக்காக ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து இங்கு பிடிக்கப்பபடும் மீன்களை குளிரூட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் கல்முனை நகரத்தை புதிய நகரமாக கட்டியெழுப்புவது எமது திட்டத்தில் முக்கியமானதாக காணப்படுகின்றது. இந்த வேலையை செய்வதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் பாரம் கொடுத்துள்ளேன். இதனை பாரிய நகரமாக மாற்ற வேண்டும். இதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்’ எனவும் அவர் கூறினார்.
1-4_Fotor ghh_Fotor