ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான எழுச்சி மாநாட்டையும் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் பகிஷ்கரித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இக் கட்சியின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபீஸ் நஸீர் அகமட்டின் ஏற்பாட்டில் வாழைச்சேனை பொது விளையாட்டரங்கில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யூ.எல்.எம்.என். முபீன் தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான எழுச்சி மாநாடு இடம்பெற்றது. இதன்போது இக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் ஹஸன் அலி உட்பட உயர்பீட உறுப்பினர்கள், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்த போதிலும் இக் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் இம் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
இதனால் இக் கட்சியின் பெரும்பாலான ஆதரவாளர்கள் இம் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.குறிப்பிட்ட அளவிலானவர்களே இதில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார மேடைகளையும் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தொடர்ச்சியாக பகிஷ்கரித்து வருவதாக கட்சி ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எதிர்வரும் பாராளுமன்றத்திற்கான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நாட்டின் நாலா புறங்களிலும் சூடுபிடித்துள்ள நிலையில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதித் தலைவர்கள், செயலாளர் உள்ளிட்ட அதியுயர் பீட உறுப்பினர்கள் ஒன்றிணைந்து வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் நாலா புறங்களிலும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அதேவேளை இக் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் இத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் எதிலும் இதுவரை பங்கு கொள்ளவில்லை.
இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் மேடைகள் சோபை இழந்து காணப்படுவதோடு, இவரின் ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் வேறு கட்சிகளுக்கு ஆதரவு வழங்கியும் வருகின்றனர்.
இத் தேர்தலுக்கான வேட்பு மனுவில் தனது பெயரை நீக்கியதுடன் தேசியப்பட்டியலில் இருந்தும் பெயர் நீக்கப்பட்டதையடுத்து கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக இவர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் இருந்து விலகியிருப்பதாக கட்சி உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களைப் போன்று இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் கட்சியின் தவிசாளரிடம் எந்தவித ஆலோசனைகளையும் பெறாமல் புதியவர்கள் வேட்பு மனுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டதோடு எந்தவித பொறுப்புக்களும் இவரிடம் ஒப்படை க்கப்படவும் இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.