ஐ.பி.எல். கிரிக்கெட் அமைப்பின் முன்னாள் தலைவர் லலித் மோடி. இவர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய அமலாக்கப் பிரிவு லலித் மோடி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது நாட்டை விட்டு வெளியேறிய லலித் மோடி லண்டனில் தஞ்சம் அடைந்தார்.
இந்த நிலையில் லலித் மோடியின் மனைவி சிகிச்சை பெறுவதற்காக லண்டனில் இருந்து போர்ச்சுகல் செல்ல விசா வழங்க மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் உதவி செய்ததாக பரபரப்பு தகவல் வெளியானது. இதனால் சுஷ்மா பதவி விலக கோரி காங்கிரஸ் போராட்டம் நடத்தி நெருக்கடி கொடுத்து வருகிறது.
இதற்கிடையே லண்டனில் இருக்கும் லலித் மோடியை கைது செய்ய அமலாக்கப் பிரிவு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் முதல் கட்டமாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கப் பிரிவு லலித் மோடிக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராக வில்லை.
இதைத் தொடர்ந்து லலித் மோடியை கைது செய்வதற்கான வாரண்டு பிறப்பிக்க அனுமதி கேட்டு மும்பை பொருளாதார கோர்ட்டில் அமலாக்கப் பிரிவு மனு தாக்கல் செய்த நிலையில் லலித் மோடிக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிரிவுகளின் கீழ் அமலாக்கப்பிரிவு கைது வாரண்டு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் லலித்மோடி விரைவில் கைதாக உள்ளார்.
அவரை சர்வதேச போலீஸ் உதவியுடன் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் லண்டனில் கைது செய்து இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் இங்கிலாந்து இளவரசர் சார்லசின் தலைமையில் இந்தியாவில் யானைகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அறக்கட்டளை ஒன்றிற்கு அவர் 30 ஆயிரம் டாலர் கொடுத்ததற்கான ஆவணங்கள் இங்கிலாந்தின் சண்டே டைம்ஸ் நாளிதழில் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் லலித் மோடி விவகாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.