தாஜுடீனின் சடலத்தை சந்தேகநபர்கள் தடையங்கள் இன்றி சிதைத்திருக்கலாமா ?

waseem-thajudeen-640x400

ரகர் வீரர் தாஜுடீனின் சடலத்தை தோண்டியெடுத்து சோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கும் நிலையில், சந்தேகநபர்கள் சடலத்தை தடையங்கள் இன்றி சிதைத்திருக்கலாமா ? என்ற சந்தேகம் வெளியிடப் பட்டுள்ளது.

தாஜுடீனின் மரணம் இடம்பெற்று மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில், இரண்டு வாரங்களாகவே நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அவருடய சடலம் புதைக்கப்பட்ட மையவாடிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மூன்று வருடங்கள் எந்தவித பாதுகாப்புமே இல்லாதிருந்த நிலையில் சடலத்தை மாற்றியிருக்கலாமா அல்லது தடையங்களை சிதைத்திருக்கலாமா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. இருந்தபோதும் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் அனுமதிக்கு அமைய தாஜுடீனின் சடலம் இன்று தோண்டியெடுக்கப்பட வுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சடலம் குறித்த இடத்தில் இல்லாதிருந் தால் தாஜுடீன் காணாமல் போனவர்களின் பட்டியலில் சேர்க்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தோண்டியெடுக்கப்படும் சடலம் தாஜுடீனின் உடையது என்பதை அத்தாட்சிப்படுத்துவதற்கான சகல நபர்களையும், அதற்கான முறைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இன்றையதினம் இந்தப் பகுதியில் பெருமளவான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்புக்காக பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப் படவுள்ளனர்.

சடலம் தோண்டியெடுக்கப்பட்ட பின்னர் விசாரணைக்காக பிறிதொரு இடத்துக்குக் கொண்டுசெல்லப்படும் அதேநேரம், அவ்விடத்திலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும் என தெரியவருகிறது. அதேநேரம், தாஜுடீனின் கொலையுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களின் குரல் பதிவுகளும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் காணப்படுகிறது.