இலங்கை அரசியல் வரலாற்றில் பல தசாப்த காலமாக தங்கள் ஊர்ப் பிரதிநிதித்துவத்தினைப் பாதுகாத்து வந்த சம்மாந்துறை மண்ணானது கடந்த ஒரு தசாப்த கலாமாக தங்கள் பிரதிநிதித்துவத்தினைப் பாதுகாப்பதில் மிகப் பெரிய சவாலினை எதிர் கொள்கிறது.இதனைக் கருத்திற் கொண்ட சம்மாந்துறை வாழ் மக்கள் இம் முறை தங்கள் பிரதிநிதித்துவத்தினைப் பாதுகாப்பதில் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் தலையீட்டினை எதிர் பார்த்திருந்தனர்.சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையானது இவ் விடயத்தில் தலையிடுவது போன்று ஒரு விம்பத்தினை எழுப்பி மெதுவாக விலகிக் கொண்டது.சம்மாந்துறையினை மையப்படுத்தி அதிக வேட்பாளர்கள் களமிறங்கும் அவா கொண்டிருந்ததால் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை இவ் விடயத்தில் தலையிடுவது அதன் எதிர்காலப் பயணத்திற்கு அவ்வளவு உசிதமானதும் அல்ல என்பதும் மறுக்க முடியாத ஒரு உண்மை.
எனினும்,தற்போது சம்மாந்துறை அரசியல் ஆடுகளத்தின் இறுதிச் சுற்றிற்கு சம்மாந்துறை வாக்கில் குறித்த தாக்கத்தினைச் செலுத்தக் கூடிய இரண்டே இரண்டு வேட்பாளர்கள் மாத்திரமே வந்துள்ளார்கள்.சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையினால் குறைந்த பட்சம் தங்கள் ஊர் வாக்குகளை தங்கள் இரு உறுப்பினர்களுக்கிடையில் மாத்திரம் பகிரும் பிரச்சாரத்தினைக் கூடாவா செய்ய வக்கில்லை? இதனைச் செய்தால் கூட எமது ஊர்ப் பிரதிநிதித்துவத்தினை தக்க வைக்கும் சாதகத் தன்மையினை அதிகரிக்கலாம்.இத் தீர்மானத்தினை மேற்கொள்ளும் போது யார் எதிர்க்கப் போகிறார்கள்? இச் சாதகாமான நிலையில் கூட ஒரு வழி காட்டலினை வழங்க இயலாதவர்கள்,எதில் இம் மக்களினை வழி காட்டப் போகிறார்கள்?
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வேறு எவரிற்கும் அளிக்கப்படாது தயா கமகே இற்கு மாத்திரம் சம்மாந்துறை மண்ணில் இருந்து மூவாயிரம் வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன.இவ் வாக்குகள் எமதூரானே! என்று மன்சூரிற்கு சென்றிருந்தால் கூட மன்சூரினூடாக எமது பிரதிநிதித்துவத்தினை கடந்த முறை தக்க வைத்திருக்க முடியும் என்பது இங்கே கோடிடத் தக்க விடயம்.
.
தயா கமகேயின் அற்ப சலுகைகளுக்கு சம்மாந்துறை சமூகம் அடிபணியாது முஸ்லிம் பிரதிநிதித்துவக் காப்பினைக் கருத்திற் கொண்டு அவரிற்கு அளிக்கப்படும் வாக்குகளினைத் தடுக்கும் பிரச்சாரத்தினை சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை முன்னின்று மேற்கொள்ள வேண்டும்.யார்? என்ன? சொன்னாலும்,சம்மாந்துறையில் இருந்து சில ஆயிரம் வாக்குகள் தயா கமகே இற்கு செல்வது உறுதியானது.இந்த தயா கமகேயின் அற்ப சலுகைகளுக்கு சோரம் போனவர்கள் குறைந்த பட்சம் எமதூரானே! என்றாவது மன்சூரிற்கு வாக்களிக்க சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை மக்களினை அறிவுறுத்த வேண்டும்.
அ.இ.ம.காவில் வீ.சி இற்கு மாத்திரம் வாக்களிப்பது எது வித பாதிப்பினையும் ஏற்படுத்தாது என்பதனால் அ.இ.ம.காவிற்கு வாக்களிப்பவர்கள் வீ.சி இஸ்மாயிலிற்கு மாத்திரம் வாக்களிக்க வேண்டும்.விகிதாசாரத் தேர்தல் முறை பற்றிய தெளிவின்மையினைப் பயன்படுத்தி எமது ஊரில் அ.இ.ம.காவினைச் சேர்ந்த வேறு சிலர் வாக்கு வேட்டைக்கு வந்துள்ளனர்.இதனைத் தடுக்கும் அறிவுருத்தளினை சம்மாந்துறை நம்பிக்கையாளர் முன்னின்று மேற்கொள்ள வேண்டும்.
சம்மாந்துறையில் தற்போது வயல் அறுவடை செய்யும் காலப்பகுதி என்பதாலும்,வேட்பாளர்களின் மீது அதிருப்தியுற்றிருப்பதாலும் வாக்களிக்கும் வீதம் மிகக் குறைவாக காணப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.வாக்களிப்பு வீதத்தினை சற்று உயர்த்தினால் அ.இ.ம.காவிற்கு ஒரு ஆசனம் கிடைக்கும் பட்சத்தில் எமது இரு வேட்பாளர்களும் தேர்வானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை (வீ.சி இற்கு எது வித சட்டச் சிக்கலும் இல்லை என்றால் என்பது குறிப்பிடத்தக்கது).எனவே,இதற்கான பிரச்சாரத்தினை சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்.
.
இவ் இரு வேட்பாளர்களுக்கும் வாக்களிப்பது சமூக ரீதியாக ஏதேனும் பாதிப்பினைப் ஏற்படுத்தினால் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தங்களது ஊர் வேட்பாளர்களுக்கான பிரச்சாரத்தினை முன்னெடுப்பது பிழையான செயற்பாடு.உதாரணமாக இன்று வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிப்பது முஸ்லிம்களின் மீது தனது கோர முகத்தினை காட்டிய மஹிந்த ராஜ பக்ஸவினைப் பிரதமராக்கும் எனும் நிலை காணப்படுவதால் வெற்றிலைச் சின்னத்தில் யாரேனும் போட்டி இட்டால் அவரினை ஊரிற்காக ஆதரிக்க முடியாது.இவ் இரு வேட்பாளர்களும் ஒப்பீட்டளவில் ஏனைய சக வேட்பாளர்களுடன் பாதிப்பானவர்கள் அல்ல என்பதால் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையினால் தனது பிரச்சாரத்தினை முன் வைக்க முடியும்.
சுருக்கம்
1.சம்மாந்துறை வாக்குகள் சம்மாந்துறை மக்கிடையே மாத்திரம் பகிரப்பட வேண்டும் (விகிதாசார முறைமையினைக் கருத்திற் கொண்டு மன்சூரிற்கு அளிக்கும் வாக்குகள் ஏனைய சக வேட்பாளர்களான ஹரீசிட்கும்,பைசால் காசிமிட்கும் அளிக்கப்படல் வேண்டும்.).
2.தயா கமகே,அமைச்சர் அதாவுல்லாஹ் இற்கு செல்லும் வாக்குகள் தடுக்கப்படல் வேண்டும்.
3.யார்? என்ன சொன்னாலும்? தயாவிட்கும் வாக்களிப்போம் என்பவர்கள் குறைந்த பட்சம் தங்கள் மனாப்புக்ளில் ஒன்றை மன்சூரிற்கு அளிக்க வேண்டும்.
4.வாக்களிப்பு வீதம் அதிகரிக்கப்படல் வேண்டும்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்