புவி ரஹ்மத்துல்லாஹ்
காத்தான்குடிப் பிரதேசத்தில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும்
தாய்மார்களுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் உதவித்திட்டத்தின்கீழ் 2000
ரூபா பெறுமதிக்கு வழங்கப்படும் சத்துணவுப் பொருட்கள் பாவனைக்குதவாத
நிலையில் பழுதடைந்து காணப்படுவதாகப் புகார் தெரிவிக்கப்படுகின்றது.
இத்திட்டத்தின் கீழ் தனியார் வர்த்தக நிலையங்கள் மூலம் பொதி செய்யப்பட்டு
வழங்கப்படும் நெத்தலிக் கருவாடு துர்வாடை கொண்டதாகவும், நிலக்கடலை
மற்றும் பாசிப்பயறு என்பன வண்டுகளும், புழுப்பூச்சிகளும் கூடுகட்டி
வாழும் நிலையிலும் வழங்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதுகுறித்து பிரதேச சுகாதார அதிகாரிகளிடம் தாங்கள் முறையிட்ட போதிலும்
அவர்கள் எந்தவிதமான மாற்று நடவடிக்கைகளும் எடுப்பதாகத் தெரியவில்லை
எனவும், கடந்த இரண்டு மாதங்களாக இவ்வாறே தமக்கு பழுதடைந்த பாவனைக்குதவாத
பொருட்களே வழங்கப்பட்டு வருவதாகவும் விசனம் தெரிவித்தனர்.