முன்னாள் அமைச்சர்களான பந்துல மற்றும் டிலான் பெரேராவிடம் உள்ள விஷக்குப்பிகளை பாதுகாத்து வைத்துக்கொள்ளுமாறும் எதிர்வரும் 17 ஆம் திகதி அவை அவசியப்படுமெனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செய்தியாளர் சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்களான டிலான் பெரேரா,பந்துல குணவர்தன ஆகியோர் ஐக்கிய தேசிய கட்சியினர் மத்திய வங்கி விடயம் தொடர்பில் செயற்பட்ட விதத்தினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பலரும் நஞ்சருந்த வேண்டும் என தெரிவித்திருந்தனர். இதற்கு பதில் கூறும் வகையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் போது மத்திய வங்கி பிணை வழங்கலில் இடம் பெற்றதாக கூறப்படும் ஊழல் தொடர்பில் ஆராய பாராளுமன்றத்தில் குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன் அதன் அறிக்கையின் பிரகாரம் மத்திய வங்கி விவகாரத்தில் பிரச்சினைகள் எதுவும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களான பந்துல குணவர்தன,டிலான் பெரேரா ஆகியோர் அண்மையில் செய்தியாளர் சந்திப்பொன்றில் ஐக்கிய தேசிய கட்சியினரை நஞ்சருந்துமாறு கூறியிருந்தனர்.
ஆனால் எதிர்வரும் தேர்தலின் பின்னர் பந்துல மற்றும் டிலானுக்கே நஞ்சருந்தி தற்கொலை செய்துகொள்ள நேரிடும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் நாம் அவர்களை நஞ்சருந்த கூறி வற்புறுத்தவில்லை. அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் நல்லாட்சியில் வாழ வேண்டும்.
அத்துடன் எதிர்வரும் தேர்தலின் பின்னர் உருவாகப்போகும் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் மத்திய வங்கியில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படும் ஊழல் தொடர் பில் எதிர்காலத்தில் விசாரணைகள் முன் னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்