கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரும் அதற்கு பின்னரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் நாம் எவ்வித ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடவில்லை அந்தவகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் சமஷ்டி கோரிக்கையை நாம் ஒரு போதும் ஏற்கப் போவது இல்லை இதில் நாம் உறுதியாகவுள்ளோம் என ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்தது.
ஐக்கிய தேசியக்கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான அஜித் பி பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் இம்முறை பொதுத் தேர்தலிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் வடக்கு மாகாணத்திற்கு சமஷ்டி நிர்வாகத்தை வழங்குவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி, எந்த இணக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையான ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பகிர்வு என்பதை தவிர சமஷ்டி நிர்வாகத்திற்கு ஒரு போதும் இடமில்லை.
சமஷ்டி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் சமஷ்டி வடிவத்தையோ, அரசையோ கட்டியெழுப்ப ஐக்கிய தேசியக் கட்சி இடமளிக்காது.ஆனால், அதிகளவில் அதிகாரத்தை பரவலாக்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இருக்கின்றது. எனினும் அது ஒற்றையாட்சி என்ற கட்டமைப்புக்குள்ளேயே மேற் கொள்ளப்படும் என தெரிவித்தார்.